Published : 04 Dec 2016 12:07 PM
Last Updated : 04 Dec 2016 12:07 PM
நம் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏன் இப்படித் தீவிரமாக எதிர்க்கிறார்கள்? மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக பெரிய போரையே நடத்தத் தயாராகிவிட்டார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள பஞ்சாபை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்துவிட்டார். மன்மோகன் சிங் தன்னுடைய சுபாவத்துக்கு மாறாக மாநிலங்களவையில் திடீரென தோன்றி அரசின் நடவடிக்கையை மிகக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார். ராகுல் காந்தியோ டெல்லியிலேயே தொடர்ச்சியாக இருப்பதுடன், உரத்த குரலில் எதிர்ப்புகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் யாருமே அரசின் நடவடிக்கையால் பெருமளவு பணத்தை இழந்துவிடவில்லை, யாரும் சிந்திக்காமலும் எதிர்க்கவில்லை; இது அவர்களுடைய எதிர்கால வளர்ச்சிக்கான ‘அரசியல் பருவம்’.
ஆட்சியில் இருக்கும் பிரதமர் தன்னுடைய முதல் ஐந்தாண்டு காலத்தில் மக்களிடையே புகழ் பெற இப்படி அதிரடியாக எதையாவது செய்வது மரபாகி வருகிறது.
வாஜ்பாய் ஆட்சியில் முதல் ஐந்தாண்டின் முற்பகுதியிலேயே பொக்ரானில் (இரண்டாவது முறையாக) அணுகுண்டு சோதனை நடத்தி நாடே வியக்கும் சாதனை நிகழ்த்தப்பட்டது. மன்மோகன் சிங் தனது முதல் ஐந்தாண்டு காலத்தின் இறுதிப்பகுதியில் அணுசக்தி உற்பத்தி தொடர்பாக வல்லரசுகளுடன் இணக்கமான உடன்பாடு கண்டு சாதனை புரிந்தார். ராஜீவ் காந்தியின் முதல் ஐந்தாண்டு காலத்தில் 2 முக்கிய தோல்விகள்தான் இடம் பெற்றன.
முதலாவது, ஷா பானு தொடுத்த விவாகரத்து வழக்கில் முஸ்லிம் மதகுருக்களை சமாதானப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது; இலங்கை விவகாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட்டு தோல்வியையும் எதிர்ப்பையும் சம்பாதிக்க நேரிட்டது. மிகக் குறுகிய காலத்துக்கே ஆட்சியிலிருந்த வி.பி. சிங்குக்கு இது பொருந்தாது என்றாலும், மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தி இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுத்தார். அது வரலாற்றில் இடம் பிடிக்க உதவியது. அயோத்தியில் பாபர் மசூதியைக் காக்கத் தவறிய நரசிம்ம ராவின் கையாலாகத்தனத்தையோ, போபர்ஸ் பீரங்கி பேர கமிஷன் என்ற சிறு குற்றத்தையோ இங்கே பேசவில்லை.
‘செய் அல்லது செத்துமடி’ என்ற இலக்கணத்துக்கு முற்றிலும் பொருந்துகிறது மோடி எடுத்துள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு. இதன் விளைவுகள் உத்தரப் பிரதேசத்தின் அரசியல் களத்தோடு நின்றுவிடாமல், 2019 மக்களவை பொதுத் தேர்தல் வரை எதிரொலிக்கும். அதனால்தான் எதிர்க்கட்சித் தலைவர்களும் அதே போர்க் குரலோடு களம் இறங்கியிருக்கிறார்கள். அர்விந்த் கேஜ்ரிவால் இதை ‘8 லட்சம் கோடி ரூபாய் ஊழல்’ என்கிறார்.
காங்கிரஸ் கட்சி இதை ‘ஃபேர் அண்ட் லவ்லி’ நடவடிக்கை என்றும் ‘பேடுஎம்’ (பே டு மோடி!) என்றும் எகத்தாளம் செய்கிறது. ‘இந்த நடவடிக்கையே கூடாது, அறிவிப்பைத் திரும்பப் பெறுங்கள்’ என்று முழக்கமிடுகிறார் மம்தா பானர்ஜி; இப்படி எதிர்ப்புத் தெரிவித்ததற்காகத் தன்னுடைய ஆட்சியைக் கவிழ்க்க கொல்கத்தா நகர வீதிகளில் ராணுவம் வந்துவிட்டது என்று குமுறுகிறார். பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மட்டுமே அர்த்த சாஸ்திரம் எழுதிய கவுடில்யரைப் போல, “மோடியின் முடிவும், நோக்கமும் பாராட்டத்தக்கது” என்று வரவேற்றிருக்கிறார். “முறையாக அமல்படுத்தப்பட்டால் நன்மைகளையே விளைவிக்கும்” என்றும் பொடி வைத்துப் பேசியிருக்கிறார்.
18 வயது நிரம்பாத சந்திரகுப்தர் ஆட்சிக்கு வரமுடியாமல் அவருடைய எதிரிகளால் விரட்டப்பட்டு தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார். நல்ல ஆலோசகர் கிடைத்தால் ஆட்சியை மீட்டுவிடலாம் என்று நம்பினார். ஒரு நாள், ஒரு பிராமணர் கள்ளிச் செடிக்கு அதன் வேரில் பாலை ஊற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார். “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று சந்திரகுப்தர் கேட்டார். “என்னுடைய வேட்டியை இந்த கள்ளிச்செடியின் முள் கிழித்துவிட்டது, அதைப் பழிவாங்கத்தான் வேரில் பாலை ஊற்றுகிறேன்” என்றார். “இந்தக் கத்தியால் செடியை வெட்டுங்கள், பாலை ஊற்றினால் அது எப்படி சாகும்?” என்று கேட்டார் சந்திர குப்தர். “கத்தியால் வெட்டினால் கள்ளி மீண்டும் முளைக்கும்; பாலை வேரில் ஊற்றினால் எறும்பும் கரையானும் அந்தச் சுவைக்காக அதன் வேர் வரை ஊடுருவி அதைத் தின்றே அழித்துவிடும்” என்று கவுடில்யர் பதிலளித்தார். தன்னை மீண்டும் அரியணையில் அமர்த்தக்கூடிய புத்திசாலி இவர்தான் என்று அடையாளம் கண்டு தன்னுடைய குருவாக ஏற்றுக்கொண்டார்.
ஒரு காலத்தில் காங்கிரஸை எல்லா கட்சிகளும் சேர்ந்து எதிர்த்தன. காங்கிரஸுக்கும் இந்திரா காந்திக்கும் எதிராக முன்னர் கூடியதைப் போல இப்போது பாஜகவுக்கும் மோடிக்கும் எதிராக அணி திரள்கிறார்கள். இப்போது எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான போட்டியெல்லாம் எதிர்க்கட்சிகளின் அணிக்கு தளபதி யார், அடுத்து 2019-ல் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் யார் என்பதுதான்.
காங்கிரஸ் கட்சியால் ராகுலை எப்போது தலைவராக்கிக் கொள்வது என்பதையே தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது. அந்தக் கட்சிக்கு மக்களவையில் 45 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர். எனவேதான் மற்ற கட்சித் தலைவர்களுக்கு தாங்களும் பிரதமராகிவிட முடியும் என்ற நப்பாசை ஏற்பட்டிருக்கிறது.
மோடி மிகவும் பிரபலமானவராக இருக்கிறார் என்று அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். இந்திய அரசியலில் மாறாத ஓர் அம்சம் என்னவென்றால் அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை தான். அனைவரும் ஏற்கக்கூடிய ஒருவர் தலைவராக வந்தால் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை சாத்தியம். 1989-ல் வி.பி. சிங் இருந்தார். அவருக்கென்று கட்சியோ, வாக்கு வங்கியோ இல்லை. போபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் வாங்கியவர்களை அம்பலப்படுத்த முயன்றார் என்ற தார்மிகச் செயல் காரணமாக அவர் தலைவராக ஏற்கப்பட்டார்.
வாஜ்பாய்தான் பிரதமர் என்று அறிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கினார் அத்வானி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தன்னிகரில்லாத தலைவரானார் சோனியா காந்தி. இப்போது அந்த இடம்தான் நிரப்பப்படாமல் இருக்கிறது. அந்த இடத்தைப் பிடிக்கத்தான் மம்தா, கேஜ்ரிவால், நிதீஷ் இடையே போட்டி. காங்கிரஸ் கட்சி இப்போது செல்வாக்கில்லாத சரக்கு போலத் தோன்றினாலும் 2014 மக்களவை பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு ஆதரவாக 11.5 கோடிப் பேர் விசுவாசத்துடன் வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்கு வங்கி அப்படியே சிதையாமல் இருக்கிறது.
- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர்,
இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணைத் தலைவர்.
தொடர்புக்கு: shekhargupta653@gmail.com
தமிழில் சுருக்கமாக: ஜூரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT