Published : 22 Nov 2022 06:49 AM
Last Updated : 22 Nov 2022 06:49 AM
மருத்துவ விபத்துகளைத் தடுப்பது, அதற்கான வழிமுறைகளை உருவாக்கி அமல்படுத்துவது என்பது ஒரு தனி அறிவியல் பிரிவாகும். பிரிட்டிஷ் மருத்துவக் கவுன்சில் மதிப்பீட்டின்படி பிரிட்டனில் 2018-19 ஆம்ஆண்டு மட்டும் 240 கோடி பவுண்டுகள் மருத்துவ விபத்துகளுக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் மருத்துவ விபத்துகளுக்காக லட்சக்கணக்கான வழக்குகள் ஆண்டுதோறும் பதிவாகின்றன.
ஆனால், எந்தவொரு நாட்டிலும் மருத்துவ விபத்துகள் ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதப்படவில்லை. நோயாளி ஒருவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பர்கள், மருந்து நிறுவனங்கள், மருத்துவக் கருவிகளைத் தயாரிப்போர், அவற்றைப் பராமரிப்போர் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் ஒன்றிணைந்து பங்கேற்கின்றனர்.
இவர்களின் செயல்பாடுகளில் ஓரிடத்தில் சிறு தவறு நேர்ந்தால்கூட, அது இறுதியில் நோயாளியைப் பாதிக்கிறது. இவ்வாறான ஒரு சிக்கலான தொடர் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு உலகம் முழுவதும் சவாலாக உள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையும் இந்த மருத்துவத் தொடர் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த லட்சக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவிடுவதாக, ‘லீன் மருத்துவமனைகள்’ நூலாசிரியர் மார்க் கிரபன் தெரிவிக்கிறார்.
குற்றமாக்குதல்: விபத்து ஒன்றை யாரும் குற்றமாக்க முடியாது; விபத்து என்பது விபத்து மட்டுமே. ஒரு சம்பவத்தைக் குற்றம் என வரையறுக்க, அதற்கு உள்நோக்கம் இருக்க வேண்டும். மருத்துவ விபத்துகளுக்கு உள்நோக்கம் என்கிற ஒன்று இருக்க வாய்ப்பில்லை. இவ்வாறான மருத்துவ விபத்துகளைக் குற்றமாக்குதல் என்பது சமூகத்தில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
இளம் கால்பந்தாட்ட வீராங்கனை மரணமடைந்த சமீபத்திய வருந்தத்தக்க நிகழ்வில், தொடர்புடைய மருத்துவக் குழுவினரின் ஒளிப்படங்களைக் காட்சி ஊடகங்களும் சமூக ஊடகங்களும் போட்டிபோட்டுப் பகிர்ந்தது, அவர்களுக்கு இயற்கை வழங்கியுள்ள அடிப்படை நீதிக்கு (Natural Justice) எதிரானதாகும். இவ்வாறான குற்றமாக்குதல் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களிடையே தேவையற்ற கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
மருத்துவச் சிகிச்சை அளிப்பதை ஒரு வேலை என்று மட்டும் கருத இயலாது. கூடுதலாகத் தனிநபரின் ஈடுபாடும் அதில் முக்கியப் பங்குவகிக்கிறது. அறுவை அரங்கில் எட்டு மணி நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். மயக்க அளவைக் கண்காணிக்க வேண்டும் என்பதை ஒரு வேலையாக மட்டுமே யாரும் செய்ய இயலாது; கட்டுக்கடங்காத வேட்கையால் மட்டுமே அது சாத்தியமாகும். ஆகவே, மருத்துவ விபத்துகளை ஒட்டி உருவாக்கப்படும் இவ்வாறான தேவையற்ற அச்சம், களத்தில் மோசமான அணுகுமுறையையே உருவாக்கும்.
எந்தவொரு மருத்துவர் குழுவும் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரின் காயம்பட்ட கால்களைச் சரிசெய்து அனுப்புவதையே சாதனையாகக் கருதும், விரும்பவும்செய்யும். ஆனால், எதிர்பாராத ஒரு விபத்து சில தனிநபர்களுக்கு எதிராகப் பெரிதாக்கப்படும்போது, நோயாளிகளுக்கான சிகிச்சைகளைவிடத் தங்களைக் காத்துக்கொள்வதே முக்கியம் என்று கருதும் மனநிலையையே மருத்துவப் பணியாளர்களிடையே உருவாக்கும்.
இந்தியா வளர்ந்துவரும் நாடு. குறைந்த கால அளவில் சுகாதாரத் துறையில் தமிழ்நாடு பெரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. தேவைக்குக் குறைவான பணியாளர்களையும் கட்டமைப்பையும் கொண்டு, கடைசி நோயாளிவரை இங்கே சிகிச்சை வழங்கப்படுகிறது. இப்போது பரவலாகப் பேசப்படும் மருத்துவ நெறிமுறைகள், தற்போதைய சூழலில் நம் நாட்டுக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. வளர்ந்த நாடுகளில் மருத்துவர்கள் 10 முதல் 20 நோயாளிகளை மட்டுமே ஒரு நாளில் சந்திக்கின்றனர்; பிறரைக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கின்றனர்.
இங்கிலாந்தின் அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சையின்போது மயக்கவியல் நிபுணர்கள் இரண்டு பேர் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் இங்கு நடைமுறைப்படுத்தினால் லட்சக்கணக்கானோர் காத்திருப்புப் பட்டியலுக்குத் தள்ளப்படுவார்கள். வளர்ந்த நாடுகளில் உள்ள இவ்வாறான நெறிமுறைகள், இந்தியாவில் மக்களுக்கு விரோதமாகவே முடியும்.
மருத்துவ விபத்துகளின்மீது காவல் துறை 304 ஏ பிரிவில் தன்னிச்சையாக வழக்குப் பதியக் கூடாது, கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என ‘ஜேக்கப் மேத்யு எதிர் பஞ்சாப் மாநில அரசு வழக்’கில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவ விபத்துகளைக் கிரிமினல் நடவடிக்கைபோல் கையாளக் கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது.
சமூகநீதி மாநிலம்: சுகாதாரக் குறியீடுகளில் வட மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறியிருப்பதற்கு அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய பணியாளர்களைத் தமிழக சுகாதாரத் துறை கொண்டுள்ளது ஒரு முக்கியக் காரணம். அரசு, தனியார் என இரண்டு இடங்களிலும் மருத்துவ விபத்துகள் நடக்கின்றன. ஆனால், அரசு மருத்துவமனைகளில் நிகழும் மருத்துவ விபத்துகள் மட்டும் பாரபட்சமாக, அரசியல் காரணங்களுக்காக ஊதிப்பெருக்கப்படுகின்றன. இது அரசுக் கட்டமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைப்பதோடு, தனியார்மயமாக்கலை ஆதரிப்பதிலேயே முடிகிறது.
மருத்துவப் பணியாளர்கள் மக்களை மரியாதையுடன் நடத்துவது, நோயாளிகள் - மருத்துவப் பணியாளர்கள் இடையேயான பரஸ்பர நம்பிக்கை, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் மருத்துவக் கட்டமைப்பில் சமூகநீதியின்வழி பிரதிநிதித்துவப்படுத்துதல், தேவையான அளவுக்குப் பணியாளர்கள்-கட்டமைப்புகள், விபத்துகளுக்கான நியாயமான இழப்பீடுகள், மருத்துவத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது ஆகியவையே முறையான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும்.
மாறாக, மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகளைக் குற்றமாக்குதல், அச்சப்படுத்தும் சூழலை உருவாக்குதல், விபத்துக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகள், அரசியல் காரணங்களுக்காக ஊதிப்பெருக்குதல், ‘கண்ணுக்குக் கண்’ என வாதிடும் போக்கு ஆகியவை மருத்துவக் கட்டமைப்பை நிரந்தரமாக வீழ்த்திவிடும். உலகின் எந்தப் பகுதியிலும் மருத்துவ விபத்துகளை முற்றிலும் தடுப்பது இன்றுவரை சாத்தியப்படவில்லை. அறிவியலின் தொடர் வளர்ச்சியில் ஒருநாள் அது சாத்தியமாகும்.
கோடிக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் உருவான சந்திரயான் 2-இன் தரையிறங்கு கலம் அதன் இலக்கை அடையாதது விபத்தா அல்லது அலட்சியப் போக்கில் அமைந்த குற்றமா என்று கேட்டால், அதனை விபத்து என்றே வரையறுக்கிறோம். மருத்துவ அறிவியலும் விண்வெளிப் பயணத்துக்கு இணையான ஒரு சிக்கலான நடவடிக்கைதான். மருத்துவப் பணியாளர்கள் என்போர் மக்களின் அங்கம் என்பதையும், மக்கள் அங்கத்தினர்களே மருத்துவப் பணியாளர்களாக உருவாகியுள்ளனர் என்பதை இரண்டு தரப்பினரும் உணர வேண்டும்; அப்போதுதான் விபத்தில்லா மருத்துவம் சாத்தியப்படும்.
எந்தவொரு மருத்துவர் குழுவும் இளம் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரின் காயம்பட்ட கால்களைச் சரிசெய்து அனுப்புவதையே சாதனையாகக் கருதும், விரும்பவும்செய்யும்! - சட்வா தங்கராசு மருத்துவர், ‘போலி அறிவியல்,
மாற்று மருத்துவம் & மூடநம்பிக்கை’ நூலாசிரியர்; தொடர்புக்கு: drsatva@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT