Last Updated : 27 Dec, 2016 10:48 AM

 

Published : 27 Dec 2016 10:48 AM
Last Updated : 27 Dec 2016 10:48 AM

ஊழித் தாண்டவத்தின் உயிர் சாட்சியம்!

டிசம்பர் 26-ம் தேதியை வாழ்நாளில் மறக்கவே முடியாது. சுனாமி ஏற்படுத்திய அழிவை நேரில் பார்த்த அனுபவம் இப்போது நினைத்தாலும் பதற்றம் தரும். சொல்லப்போனால் எனக்கு மட்டுமன்றி என் மனைவி, மகள் உட்பட மொத்த குடும்பத்துக்கும் ஒரு நினைவஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்க வேண்டும். நல்வாய்ப்பாக நாங்கள் இன்று உயிரோடு இருக்கிறோம்.

2004 டிசம்பர் 26-ல் ஆழிப்பேரலை தாக்கிய அன்று குடும்பத்தோடு மாலத்தீவில் வசித்துவந்தோம். நாங்கள் வசித்த 'மடுவ்வரி' தீவில் எங்கள் இல்லத்துக்கும் கடலுக்கும் இடையே வெறும் 100 அடி தொலைவுதான். காலை வரை கடற்கரை அருகில் இருந்துவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டு அரை மணி நேரம் ஆகியிருக்காது.. பக்கத்து வீட்டுக்காரர் 'கடல் வந்துவிட்டது, வெளியே வாருங்கள்' என்று கூச்சலிட்டார்.

வீட்டுக்குள் கடல்

'கடல் எப்படி வரும்?' என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தால் உண்மை யாகவே கடல் வீட்டுக்குள் வந்துவிட்டது. கடலுக்கும் வீட்டுக்கும் இடையே இருந்த கரையையே காணவில்லை. எங்கு பார்த்தாலும் கடல் வெள்ளம். வீட்டைச் சுற்றிலும் கடல்நீர். முதலில் தோன்றியது குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம்தான். என் ஏழு வயது மகளைத் தூக்கிக்கொண்டு தீவின் நடுப் பகுதிக்கு ஓடினேன். அங்கு பாதிப்பு இல்லாததால் அங்கிருந்த உயரமான மதில் சுவரின் மீது குழந்தையை அமர வைத்துவிட்டுத் திரும்பவும் என் மனைவியை அழைத்துவர ஓடினேன். கடல் நீருக்குள் சிக்கிக்கொண்டு நடப்பதற்கே தடுமாறிய அவரையும் நடுப் பகுதிக்குக் கொண்டுவந்து சேர்த்தவுடன்தான் பணம், கடப்பிதழ் (பாஸ்போர்ட்) இல்லாதது நினைவுக்கு வந்தது. திரும்பவும் நீருக்குள் ஓடிச்சென்று அவற்றை எடுத்துக்கொண்டு திரும்புகையில், நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்த ஒரு குழந்தையையும் தூக்கிக் கொண்டு திரும்பினேன்.

தீவைச் சுற்றிலும் பேரலைகளின் தாக்கம். எல்லோரும் நடுப்பகுதியில் குழுமிவிட்டனர். பெண்களும் குழந்தைகளும் அழுது புரள்கின்றனர். அந்தக் கடல் பழங்குடிகளும் தம் வாழ்நாளில் இப்படியொரு நிகழ்வை இதற்கு முன் கண்டதில்லை. அலைகள் திடீரெனப் பின்வாங்கும். கடலின் தரை தெரியும். படகுகள் ஒருபக்கமாக தரையில் சாய்ந்து கிடக்கும். பெரிய மீன்கள் கிடந்து துள்ளும். 10 நிமிடங்கள் இந்நிலை நீடிக்கும். பிறகு, திடீரென ஒரே நிமிடத்தில் ஆழிப்பேரலை புறப்பட்டு வரும். படகுகளைத் தூக்கி வீசிவிட்டு, கடல் நீர் தீவுக்குள் உட்புகும். மீண்டும் மீண்டும் இந்நிகழ்வு. அடுத்தடுத்த தீவுகளில் என்ன நிகழ்கிறது என அறிந்துகொள்ள விரும்பினால் செல்பேசியும் வேலை செய்யவில்லை. தீவு முழுவதும் பதற்றம்.

வாழ்வதற்குத் தகுதியற்ற தீவு

3 மணி நேரத்துக்குப் பிறகு பேரலைகள் ஓய்ந்ததும் எப்படியாவது தலைநகருக்குச் சென்றால் நாடு திரும்பிவிடலாம் என்றால், அடுத்து வந்த வானொலிச் செய்தி வானூர்தி நிலையமும் பேரலையில் மூழ்கியதாகத் தெரிவிக்க, அந்நம்பிக்கையும் போய்விட்டது. தீவிலிருந்த அரசு அலுவலகத்தில் செல்பேசி வேலை செய்யாததால் பழைய 'ரேடியோ போனை' இயக்கித் தலைநகரோடு தொடர்பு கொண்டனர். அப்போது எங்கள் தீவிலிருந்து ஒரு மணி நேரப் பயணத் தொலைவிலுள்ள 'கண்டலத்தூ' என்ற தீவு மூழ்கிக்கொண்டி ருப்பதாகவும் உடனே சென்று அங்குள்ளவர்களைக் காப்பாற்றுமாறும் செய்தி வந்தது.

அவ்வளவு பதற்றமான சூழலிலும் மீதியிருந்த படகுகள் புறப்பட்டன. இறந்தவர்கள் போக அத்தீவிலிருந்த மக்களைக் கும்பலாகக் கொண்டுவந்து இறக்கப்பட்டனர். அதற்குப் பிறகு அவர்கள் தம் தீவுக்குத் திரும்பவே முடியவில்லை. காரணம், அத்தீவு வாழ்வதற்குத் தகுதியற்ற தீவாக மாலத்தீவு அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் போல மாலத்தீவு பெருத்த அழிவைச் சந்திக்காததன் காரணம், அங்கு இருந்த பவளப் பாறைகளே. அலையாத்திக் காடுகளைப் போலவே மாலத்தீவில் நிறைந் திருக்கும் பவளப் பாறைக் கூட்டங்களே அந்நாட்டைக் காப்பாற்றின. போர்னியோ மழைக் காடுகள் சூழலியலைக் கற்றுத் தந்தது என்றால், ஆழிப் பேரலை இயற்கையின் பேராற்றலை உணர்த்தியது. என் வாழ்வின் இரு முதன்மையான பாடங்களை இவ்விரு நிகழ்வுகளின் வழியேதான் நான் கற்றேன். யோசித்துப் பார்த்தால் என் குடும்பமும் என்றோ இவ்வுலகிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இயற்கையின் கருணையால் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்று ஆழிப் பேரலை நாங்கள் இருந்த மடுவ்வரி தீவைத் தாண்டித்தான் கண்டலத்தூ தீவைச் சென்று தாக்கியது. ஆனால், எங்களைவிட அவர்களுக்கு வலுத்த சேதம்.

என்ன கற்றுக்கொண்டோம்

அன்று முதல் எனக்குள் ஒரு கேள்வி சுழலத் தொடங்கியது. இயற்கை எம் வாழ்வை எதற்காக நீட்டித்துத் தந்துள்ளது? இயற்கைக் குள்தான் நம் வாழ்வே அமைந்திருக்கிறது. மாறாக, அந்த இயற்கைக்கும் சூழலுக்கும் நாம் தரும் பங்கு என்ன? அப்படி யோசித்த தன் விளைவே இன்று என் எழுத்துகளும் செயல்பாடும் உங்கள் முன் நிற்கின்றன.

கடந்த ஆண்டு சென்னை வெள்ளமும், இந்த ஆண்டு புயலும்கூட இயற்கையின் பாடங்கள்தான். ஆனால், நம்மில் எத்தனை பேர் என்ன கற்றுக்கொண்டிருக்கிறோம்? கற்றுக்கொள்வதற்காக இன்னொரு அழிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கப் போகிறோமா? இயற்கை இன்னமும் கருணை மிக்கதுதான். ஏனெனில், இதன் அழிவைப் பற்றிப் பேசுவதற்காவது நம்மை இன்னமும் உயிரோடு விட்டுவைத்திருக்கிறதே.. என்ன செய்யப்போகிறோம் இனி?

- நக்கீரன், சூழலியல் செயல்பாட்டாளர் | தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

டிசம்பர் - 26 | சுனாமி 12-வது நினைவு தினம்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x