Published : 23 Nov 2016 09:24 AM
Last Updated : 23 Nov 2016 09:24 AM
அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு வருவதுபோல அதிக வழக்குகள் வருவதில்லை
நமது உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகள் 65 வயதில் ஓய்வுபெறுகிறார்கள். ஆனால் அமெரிக்காவில் ஓய்வு என்ற பேச்சே கிடையாது. கடவுளாகப் பார்த்து உலகத்திலிருந்து நிரந்தர ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லது நீதிபதி தானாக ஓய்வை அறிவிக்க வேண்டும். ஆனால், இந்தியாவைப் போல இங்கு நீதிபதிகள் தங்களைத் தாங்களே தேர்ந்தெடுப்பது கிடையாது; அவர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். செனட் ஒப்புதல் தருகிறது.
மைய நீதித் துறையும் மாநில நீதித் துறைகளும்
அமெரிக்க உச்ச நீதிமன்றம் மையச் சட்டங்களுக்குள் வரும் வழக்குகளை மட்டும் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்குக் கீழ் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் இயங்குகின்றன. இவற்றின் கீழ் மாவட்ட நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
மாநிலச் சட்டங்களை விசாரிப்பதற்காக மாநில உச்ச நீதிமன்றங்கள் இயங்குகின்றன. மாநிலத்துக்கு மாநிலம் இவை இயங்கும் முறை வேறுபடுகிறது. மாநிலச் சட்டங்களைப் பொறுத்தவரையில் மாநில உச்ச நீதிமன்றங்களுக்கு முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது.
மைய அரசைப் பொறுத்த அளவில் அட்டர்னி ஜெனரல் மற்றும் இதர அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மைய அரசால் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், மாநிலங்களுக்கென்று தனி அட்டர்னி ஜெனரல் இருக்கிறார். இவரும் மாநிலங்கள் சார்பாக வாதாடும் மற்றைய வழக்கறிஞர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
ஜூரி முறை
ஒரு வழக்கு நீதிபதியின் முன்னிலையில் வந்தால் ஜூரிகளின் முன்னால்தான் அது நடக்க வேண்டும். எல்லா கிரிமினல் வழக்குகளிலும் பல சிவில் வழக்குகளிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது. பொதுமக்களிலிருந்து ஜூரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிரிமினல் வழக்குகளில் முதலில் கிரேண்ட் ஜூரி என்று அழைக்கப்படும் குழு ஒருவரைக் குற்றவாளியாகக் கருதி விசாரிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. பிறகு, விசாரணை நடந்த பின், குற்றம் நிரூபிக்கப்பட்டதா இல்லையா என்பதை மற்றொரு குழு தீர்மானிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்று ஜூரிகள் சொன்னால் தண்டனை வழங்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கிறது. அவர்கள் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று சொன்னால் குற்றவாளியை விடுதலை செய்வதைத் தவிர நீதிபதிக்கு வேறு வழி கிடையாது.
இந்தியாவிலும் ஜூரி முறை இருந்தது. கமாண்டர் நானாவதி தனது மனைவி சில்வியாவின் காதலனான அஹூஜாவைக் கொலை செய்த வழக்கில் அவரை விடுதலை செய்ய ஜீரிகள் பரிந்துரைத்தனர். நீதிபதி ஜூரிகளின் முடிவை ஏற்க மறுத்து உயர்நீதிமன்றத்துக்கு வழக்கை அனுப்பினார். பின் ஜூரிகளே இல்லாமல் விசாரணை நடந்து குற்றம் உறுதிசெய்யப்பட்டது. இந்த வழக்குக்குப் பின்பே இந்திய அரசு ஜூரி முறையை ரத்து செய்தது.
அமெரிக்காவிலும் இந்த முறை ரத்துச்செய்யப்பட வேண்டும் என்று பல முறை கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, சென்ற நூற்றாண்டின் தொண்ணூறுகளில் நடைபெற்ற புகழ்பெற்ற அமெரிக்கன் கால்பந்து வீரரும் நடிகருமான ஓ ஜே சிம்சன் தனது மனைவியையும் மற்றொருவரையும் கொலை புரிந்ததாக அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. சிம்சன் கறுப்பினத்தவர். மனைவி வெள்ளை இனத்தவர். ஜூரிகளில் ஒன்பது பேர் கறுப்பினத்தவர். இருவர் வெள்ளையர்கள். மற்றவர் ஹிஸ்பானிக். சிம்சனுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று ஜூரிகளின் முடிவு இருந்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை உதாரணமாகக் காட்டியே ஜூரி முறையில் இருக்கும் குளறுபடிகளால் அதை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இருக்கின்றன. ஆனால் அது அரசியல் சட்டத்தைத் திருத்தினால் மட்டுமே நடக்கக் கூடியது. அமெரிக்காவில் அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பது அவ்வளவு எளிதில் இயலாதது. இந்த இருநூறு ஆண்டுகளில் 27 திருத்தங்கள் மட்டுமே செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த ஜூரி தொல்லையினாலோ என்னவோ பல வழக்குகள் விசாரணைக்கு வருவதற்கு முன்னாலேயே தீர்மானிக்கப்படுகின்றன. சிவில் வழக்குகளில் இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு முடிவிற்கு வருகின்றனர். 80%-லிருந்து 90% இவ்வாறுதான் தீர்மானிக்கப்படுகின்றன. இதே போன்று கிரிமினல் வழக்குகளிலும். 90%-க்கும் மேற்பட்ட வழக்குகள் ‘ப்ளீ பார்கைன்’ முறைப்படித் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த முறையில் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைவான தண்டனை விதிக்கப்படுவார்.
ட்ரம்ப் என்ன செய்யப்போகிறார்?
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஒரு பதவி காலியாக இருக்கிறது. அதற்கு ட்ரம்ப் பழமைவாதி ஒருவரையே நியமிப்பார் என்பது நிச்சயம். இதனால் உச்ச நீதிமன்றத்தில் பழமைவாதிகளே பெரும்பாலானவர்களாக இருப்பார்கள். முற்போக்காளர்களான இரு நீதிபதிகளில் ஒருவர் 83 வயதானவர். மற்றவருக்கு வயது 78. பழமைவாதிகளால் பல அபாயங்கள் நேரும் வாய்ப்புகள் இருக்கின்றன. முதலாவது, கருத்தடைக்கு எதிராகத் தீர்ப்பு வரும் அபாயம். இதுவரை உச்ச நீதிமன்றம் கருத்தடை வழக்குகளில் பெண்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இனிமேல் என்ன நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இதே போன்று சிறுபான்மையினருக்கு இப்போது கல்வி, வேலை போன்றவற்றில் இருக்கும் சலுகைகளின் நிலைமை என்ன ஆகும் என்பது தெரியாது. ஆனால் உடனடியாக ஏதும் நடக்காது என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை சொல்கிறது. மூன்றாவதாகப் பொதுத் துறையில் இருக்கும் தொழிற்சங்கங்களை வலுவிழக்கச் செய்யும் உத்திகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் வழங்கப்படலாம்.
அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு நமது நாட்டு உச்ச நீதிமன்றத்துக்கு வருவதுபோல அதிக வழக்குகள் வருவதில்லை. ஆண்டுக்கு 70 வழக்குகள் வந்தால் அதிசயம். இந்திய உச்ச நீதிமன்றம் 2015-ல் மட்டும் 47,000-க்கு மேற்பட்ட வழக்குகளில் முடிவெடுத்தது. அக்டோபர் 2016 வரையில் 60,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT