Last Updated : 07 Nov, 2016 09:41 AM

 

Published : 07 Nov 2016 09:41 AM
Last Updated : 07 Nov 2016 09:41 AM

உறுப்புமாற்று சிகிச்சைக்கு முன் நேரும் அலைக்கழிப்பு சிகிச்சை!

உடல் உறுப்பு தானம் கொடுப்பதும், பெறுவதும் இப்போது அதிகரித்திருக்கிறது. மூளைச்சாவு அடைந்தவர்களுடைய உறுப்புகளைப் பெறுவதில் சிக்கல் இல்லை. உயிரோடு இருப்பவர்களிடமிருந்து உறுப்புதானம் பெறுவது எளிதல்ல. அதற்கென்று தமிழ்நாடு அரசு சில விதிமுறைகளை வைத்துள்ளது.

இந்த விதிமுறைகள் சிறுநீரகத்தை விற்பதை, திருடுவதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை. விதிமுறைகள் கொண்டுவரப்பட்ட நோக்கத்தில் பிழையில்லை. ஆனால், விதிமுறைகளும் அவற்றை நம்முடைய அதிகாரிகள் கையாளும் முறைகளும் ஏற்கெனவே நோய் அவஸ்தையில் வதைபடும் நோயாளிகளையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் மேலும் அலைக்கழிக்க வைக்கிறது.

அலைச்சலில் உறுதிமொழிப் பத்திரம்

சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழந்தவர்கள் தங்களுடைய தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, கணவன், மனைவி, தந்தை வழி, தாய் வழி, தாத்தா, பாட்டியிடமிருந்து மட்டுமே உறுப்புதானம் பெற முடியும். தானம் பெறுபவர், தானம் கொடுப்பவருக்கு நேரடியான ரத்த சொந்தமா, இருவருக்கும் இடையிலான உறவுமுறை என்ன என்பதை நிரூபிக்க கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடமிருந்து உறவுமுறைச் சான்று பெற வேண்டும். அதற்கடுத்த நிலையில், ‘உறுப்புதானத்தில் எனக்கு முழு சம்மதம்’ என்று தானமளிப்பவர், தானம் பெறுபவர் இருவரும் உறுதிமொழிப் பத்திரம் தர வேண்டும்.

படிவத்தில் ஒரே உறுதிமொழிதான் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கும். ஆங்கில வடிவத்தில் இருப்பதை 20 ரூபாய் பத்திரத்தில் நோட்டரி பப்ளிக்கிடமும், தமிழ் வடிவத்தில் இருப்பதை 25 ரூபாய் பத்திரத்தில் நீதிபதி, நீதித் துறை நடுவரிடமும் கையெழுத்துப் பெற வேண்டும். அதற்கடுத்த நிலையில் உறவுமுறைச் சான்று, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, நோட்டரி் பப்ளிக்கிடமும் நீதிபதியிடமும் கையெழுத்து வாங்கிய உறுதிமொழிப் பத்திரம், அறுவைச் சிகிச்சை செய்ய இருக்கிற மருத்துவமனையின் சான்று ஆகியவற்றுடன் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கிற மருத்துவக் கல்வி இயக்கத்துக்குச் சென்று, அங்கு வெள்ளிதோறும் மட்டும் கூடும் ஆணையம் முன் ஆஜராக வேண்டும். அவர்கள் கேட்கிற கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தந்தால்தான் அவர்கள் மாற்று உறுப்பு அறுவைச் சிகிச்சைக்கு ஒப்புதல் சான்று தருவார்கள். அந்தச் சான்று இருந்தால்தான் அறுவைச் சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

உள்ளதிலேயே கொடுமை

இதற்காக மாதக் கணக்கில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? கொடுமை! ஒருபுறம் நெருக்கமான உறவுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உடலுறுப்பு செயலிழந்து, நேரில் காணச் சகிக்க முடியாமல் நடத்தும் போராட்டம்; மறுபுறம் மாற்று உறுப்புக்குத் தானம் பெறுவதற்கான போராட்டம். இன்னொருபுறம் இந்த சிகிச்சைக்காக லட்சக் கணக்கில் பணம் புரட்ட நடத்தும் போராட்டம். இவற்றுக்கு இடையே வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் அலைக்கழியும் நோயாளிகளின் உறவினர்கள் அரசு அலுவலகங்களுக்கு இடையிலும் அலைக்கழிந்து மாள வேண்டும்!

இந்த நடைமுறைகளில் உள்ளதிலேயே கொடுமை நீதிபதியிடம் அலைவது! உறவுமுறைச் சான்று பெறுவதற்காக கிராம நிர்வாக அதிகாரியிடம், வருவாய் அலுவலரிடம், வட்டாட்சியரிடம், நோயாளி, உறுப்பு தானம் தருபவர், இருவரையும் சேர்ந்தவர்கள் என்று மூன்று பேரும் அலைவது, பத்திரத்தில் நோட்டரி பப்ளிக்கிடம் கையெழுத்து வாங்க அலைவது எல்லாவற்றையும் மிஞ்சச் செய்வது இது. தமிழ் மொழியில் உறுதிமொழிப் பத்திரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக நீதிபதியிடம் ‘என் முன்னிலையில் கையெழுத்திட்டார்’ என்று எழுதிக் கையெழுத்து வாங்குவது.

எளிய மனிதனுக்கு எளிதல்ல!

நீதிபதியை எங்கே, எப்படி, யார் மூலம் பார்ப்பது? பார்க்க முடியுமா? பார்க்க விடுவார்களா? பார்ப்பதென்றால் நீதிமன்றத்தில் பார்க்க வேண்டுமா, வீட்டிலா? எல்லாத் தடைகளையும், குழப்பங்களையும் மீறிப் பார்த்தாலும் கையெழுத்து போடுவாரா? இவையெல்லாம் ஒரு எளிய மனிதனுக்கு அவ்வளவு எளிதான விஷயங்களாக இங்கே இல்லை. முக்கியமான காரணம், நீதிபதிகள் நேரடியாகப் பொதுச் சமூகத்துடன் தொடர்பில் இருப்பவர்கள் அல்ல. அதனால், நீதிபதிக்குத் தெரிந்த அல்லது வேண்டிய வழக்கறிஞரைப் பிடிக்க வேண்டும். அவரிடம் விளக்கி, அவருடைய நேரத்தைப் பெற வேண்டும். பிறகு, அவர் மூலம் நீதிபதியின் நேரத்தைப் பெற்று, சகலரும் நீதிபதியிடம் செல்ல வேண்டும். பல நீதிபதிகள் இதில் பிரச்சினை ஏதும் வரலாம் என்று எண்ணித் தயங்குகிறார்கள் அல்லது முடிவெடுப்பதைத் தள்ளிப்போடுகிறார்கள். நாட்களைக் கடத்துகிறார்கள்.

ஒரே உறுதிமொழிப் பத்திரம். ஒன்று ஆங்கிலத்திலும், மற்றொன்று தமிழிலும். ஆங்கிலப் படிவத்தில் நோட்டரி பப்ளிக்கிடமும், தமிழ்ப் படிவத்தில் நீதிபதியிடமும் வாங்கு என்று சொல்கிற தமிழ்நாடு அரசின் செயல்முறை விநோதமானதாகத் தெரிகிறது. நீதிபதிகளிடம் அனுமதி கேட்கும் விதிகளை வகுக்கும் அரசு, அதற்கேற்ற ஏற்பாடுகளை வகுப்பதில் என்ன சிக்கல்?

நோயாளிகள் வதைபடலாமா?

பதினைந்து வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அவனுடைய தாயே சிறுநீரகம் தருகிற உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க அவர்கள் அலைந்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது, மனம் வெதும்பியது. இந்த அலைச்சலின்போது அந்தப் பெற்றோரின் மனநிலை என்னவாக இருக்கும், அந்தப் பிள்ளையின் மனநிலை என்னவாக இருக்கும்? மாற்றுச் சிறுநீரக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, பதினைந்தே வயதுடைய தங்கள் மகன் இன்னும் கொஞ்ச காலம் இந்தப் பூமியில் வாழ்ந்துவிட மாட்டானா என்ற பண, மனக் கஷ்டத்தோடு, கவலையோடு, கண்ணீரோடு வதைபட்டுக்கொண்டிருப்பவர்கள், நோயாளி யான குழந்தையைத் தூக்கிக்கொண்டு எத்தனை நாள் அலையலாம்? எத்தனை நாள் காத்திருக்கலாம்?

எனக்கு நீதிபதிகள் மேல் வருத்தம் இல்லை. அரசாங்கம் தெளிவான வழிகாட்டுதல் களை அவர்களுக்கு அளித்திருந்தால், நாம் அவர்களைக் கேள்வி கேட்கலாம். தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்றுச் சிகிச்சை தொடங்கி 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இங்கே உறுப்பு மாற்றுச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் ஏனைய மாநிலங்களைக் காட்டி லும் 10 மடங்கு வரை அதிகம் உறுப்பு மாற்றுச் சிகிச்சை நடக்கும் முன்னணி மாநிலம் தமிழகம். இப்படி ஒரு மாநிலத்தில் நோயாளி கள் இப்படி வதைபடக் கூடாது. அவர்கள் அனுபவிக்கும் கொடூர வலியை அரசின் நடைமுறைகள் மேலும் கூட்டக் கூடாது!

இமையம், எழுத்தாளர், ‘செடல்’ நாவல் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: imayam.annamalai@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x