Published : 01 Nov 2016 08:55 AM
Last Updated : 01 Nov 2016 08:55 AM
வலுவான மைய அரசு வேண்டுமா அல்லது மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமா?
நேற்று நான் சான்பிரான்சிஸ்கோ நகரின் மிஷன் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தேன். வயதானவர் ஒருவர் தெருமுனையில் ஸ்டிக்கர் கடை ஒன்று விரித்திருந்தார். சுற்றி கூட்டம். என்ன ஸ்டிக்கர் என்று பார்த்தேன். ‘Dump Trump’ (ட்ரம்பைக் குப்பையில் போடுங்கள்) என்ற வாசகங்கள் பொறித்த ஸ்டிக்கர்கள்! கலிஃபோர்னியா மாகாணத்தில் அவருக்கு ஆதரவு அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மற்றைய பல மாகாணங்களில் அவருக்கு ஆதரவு இருக்கிறது.
ட்ரம்ப் - கிளிண்டன் போட்டியைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், ஏன் அமெரிக்க அதிபர் தேர்தல், எவ்வாறு இரு கட்சிகளுக்கு இடையே நடக்கும் போட்டியாக மாறியது என்பதைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இதுவரை அமெரிக்காவில் 57 முறை அதிபர் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. 44 பேர் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களில் 18 பேர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள். 13 பேர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள். மீதிப் பேர் மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இரு கட்சிகளுக்கு முன்னால்
கட்சிகள் அமெரிக்காவில் பிறந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்தியாவில் இன்று நாம் விவாதித்துக் கொண்டிருப்பது. வலுவான மைய அரசு வேண்டுமா அல்லது மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்கள் வேண்டுமா என்ற அந்த விவாதம் அமெரிக்கக் குடியரசு பிறந்த அன்றே துவங்கிவிட்டது என்று சொல்லலாம். ஹாமில்டன் போன்றவர்கள் வலுவான மைய அரசை விரும்பினார்கள். அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் ஆதரவு அவருக்கு இருந்தது. ஆனால், விடுதலை அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான ஜெஃபர்ஸன் போன்றவர்கள் மாகாண அரசுகளுக்குத்தான் அதிகாரங்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஹாமில்டனின் கட்சி ஃபெடரல் (மத்தியக் கட்சி) என்று அழைக்கப்பட்டது. ஜெஃபர்ஸனின் கட்சி ஜனநாயக - குடியரசுக் கட்சி என்று அழைக்கப்பட்டது. இந்தக் கட்சியின் முதல் அதிபராக ஜெஃபர்ஸன் 1800-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு கட்சிகளும் உடைந்து 19-ம் நூற்றாண்டில் பல அவதாரங்கள் எடுத்தன. 1869-லிருந்து இரண்டு கட்சிகள் முழு உருவெடுத்தன - குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி. அன்றிலிருந்து இன்றுவரை இந்த இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்தவர்தான் அமெரிக்க அதிபராக இருந்துவருகிறார். இன்று வரையில் ஒரே ஒரு கத்தோலிக்கர்தான் - ஜான் கென்னடி - அமெரிக்க அதிபராக இருந்திருக்கிறார். ஒரே ஆப்பிரிக்க அமெரிக்கர் பாரக் ஒபாமா. முதல் பெண்மணியாக ஹிலாரி கிளிண்டன் தேர்ந்தெடுக்கப்படலாம்.
குடியரசுக் கட்சி
19-ம் நூற்றாண்டின் குடியரசுக் கட்சி அடிமைத்தனத்தை அழிக்கும் பக்கத்தில் நின்றது. ஆபிரகாம் லிங்கன் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 20-ம் நூற்றாண்டில்தான் இது தடையற்ற சந்தையையும் அமெரிக்கப் பணக்காரர்களையும் முழுமையாக ஆதரிக் கும் கட்சியாக மாறியது. சென்ற நூற்றாண்டின் 50-களில் ஐசனோவர் தலைமையில் இயங்கிய ஜான் பாஸ்டர் டல்லஸின் மேற்பார்வையில் ரஷ்யாவுக்கு எதிரான பனிப்போர் வலுவடைந்தது. தெற்கு வியட்நாமுக்கு ஆதரவு அளித்து, வியட்நாம் யுத்தம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்தவரும் ஜான் பாஸ்டர் டல்லஸ் தான். பின்னால், இராக்குக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலும் இந்தக் கட்சியைச் சேர்ந்த புஷ் தலைமையில்தான் நேர்ந்தது.
ஜனநாயகக் கட்சி
முதல் உலகப் போரில் பங்கு பெற்று உலக நாடுகளின் சங்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்த உட்ரோ வில்சன் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர். நான்கு முறை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்தான். இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவைத் தலைமை தாங்கி நடத்தியவர். இந்தியர்களுக்குப் பிடித்தமான கென்னடி, ஒபாமா போன்றவர்களும் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.
ஜனநாயகக் கட்சி பணக்காரர்கள் பக்கம் நிற்பதைவிட, அமெரிக்க நடுத்தர மக்கள் சார்பாகப் பேசுவதை விரும்புகிறது என்ற ஒரு கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால், பணக்காரர்கள் உதவியில்லாமல் அமெரிக்காவில் எந்தக் கட்சியும் இயங்க முடியாது. இதே போன்று வெளிநாட்டு உறவுகளிலும் போர்களை முனைந்து நடத்துவதிலும் ஒரு கட்சிக்கு மற்ற கட்சி சளைத்தது அல்ல.
போர்களின் ஊற்றுக்கண்
1823-ல் மன்றோ என்ற அதிபரால் அறிவிக்கப்பட்ட கொள்கை அமெரிக்கக் கண்டத்தின் விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் தலையிடக் கூடாது, மற்றும் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் நாடுகளைக் காலனிகளாக முயற்சிக்கக் கூடாது என்று அறிவித்தது. மத்திய, தென் அமெரிக்க நாடுகளின் உள் விவகாரங்களில் தடையின்றித் தலையிட அமெரிக்காவுக்கு உதவியது இந்தக் கொள்கை. ஆனாலும் இரண்டாம் உலகப் போர் முடியும் வரை அமெரிக்க உலகின் மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பிலிப்பைன்ஸ் நாடு 1898-லிருந்து 1946 வரை அமெரிக்கக் காலனியாக இருந்தது. இதைத் தவிர, ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் அமெரிக்கக் காலனி ஏதும் இல்லை.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. கொரியா, வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் போர்களைத் தவிர, உலகில் 1945-லிருந்து இன்று வரை 248 போர்கள், 153 இடங்களில் நடந்திருக்கின்றன. இதில் 201 போர்களில் அமெரிக்கா தலையிட்டிருக்கிறது. 81% என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இது மிகைப்படுத்தலாக இருக்கக் கூடும். ஆனால், சுமார் 3 கோடிப் பேர் அமெரிக்கா தலையிட்ட போர்களில் இறந்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் மிகையில்லை. போர்களின் ஊற்றுக்கண் இன்று வரை அமெரிக்கா என்பதும் மிகையில்லை.
வரப்போகும் அதிபர், போர்களுக்கு எதிராக இருப்பாரா?
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT