Published : 29 Nov 2016 09:48 AM
Last Updated : 29 Nov 2016 09:48 AM
ஜெர்மனியிலுள்ள பிராங்பர்ட்டில் ஆண்டுதோறும் நடக்கும் புத்தகக் காட்சி, உலகில் பல்வேறு மொழிகளில் புத்தகம் வெளியிடுபவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் புதிய வாசல்களைத் திறந்துவைக்கிறது. இது புத்தக விற்பனைக்கான சந்தையல்ல. எழுத்தாளர்கள் பதிப்பகங்களைச் சந்திப்பது, ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழியில் வெளியிடுவதற்கான உரிமங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள், புத்தக வியாபாரிகள் மேற்கொள்ளும் கொள்முதல் போன்றவற்றுக்கான களம் இது. உரிமங்களுக்கான முகவர்கள், அச்சுத் துறை, பதிப்புத் துறைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள் அளிப்பவர்கள் எனப் பல விதமானவர்கள் இங்கு வணிகம் செய்ய வருகின்றனர்.
இப்புத்தகக் காட்சி, தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் பதிப்பிக்க உரிமம் வழங்குவதற்கும், பிற மொழிகளில் உள்ள சிறந்த நூல்களை உரிமம் பெற்றுத் தமிழில் வெளியிடுவதற்கும் பெருமளவில் வகை செய்கிறது. தமிழ் எழுத்தாளரோ அல்லது பதிப்பாளரோ தங்களது சிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் உலகத் தரத்துக்கு மொழியாக்கம் செய்து, அந்தப் புத்தகங்களை பிராங்பர்ட் புத்தகக் காட்சியில் காட்சிப்படுத்தலாம். இதற்கான ஐந்து நாள் கடை வாடகை சுமார் ரூ.1,50,000. இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள காப்பெக்சில் (CAPEXIL) என்கிற அமைப்பு, செலவில் பெரும்பகுதியினை ஏற்றுக்கொள்கிறது. இதற்கு அவ்வமைப்பில் உறுப்பினராக வேண்டும்.
அதிக அளவில் மக்கள் பேசும் மொழிகளில் உரிமம் பெறுவது கடினம். எனவே, முதலில், ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா நாடுகளில் சிறிய அளவில் மக்கள் பேசும் மொழிகளுக்கு உரிமங்கள் விற்க முயற்சிக்கலாம். இச்சிறிய வெற்றிகள் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பலப்படுத்தி, பெருமளவு மக்கள் பேசும் மொழிகளுக்கு விற்பதற்கு வழிவகை செய்யும்.
இந்திய மொழிப் புத்தகங்களுக்குத் தற்போது உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்தியாவின் பிற மொழியாளர்கள் இதனை உணர்ந்து எப்போதோ விழித்துக்கொண்டார்கள். அமெரிக்க டாலர்கள் 500-ல் தொடங்கி, 1,000-2,000 வரை உரிமங்களை விற்பதற்கு வாய்ப்புள்ளது. பிற மொழிகளில் வெளிவந்த சிறந்த புத்தகங்களைத் தமிழில் வெளியிடவும் உரிமம் பெறலாம். பல நாடுகள் தங்கள் நாட்டுப் புத்தகங்கள் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படுவதற்கு நிதியுதவி அளிக்கின்றனர். முறையாக, அதற்கான வழிமுறைகளைக் கையாண்டால் அச்சிடும் செலவுகூட இன்றித் தமிழில் வெளியிடலாம்.
புத்தகக் காட்சி நடத்தும் அமைப்பினர், ஒவ்வொரு ஆண்டும் இத்துறையில் வளர்ந்துவரும் பதிப்பாளர்களையும் எழுத்தாளர்களையும் புத்தகக் காட்சி நடைபெறும் காலத்தில் ஜெர்மனிக்கு அழைத்து (எல்லாச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டு), துறை சார்ந்த பயிற்சி அளிக்கிறார்கள்.
இவை எதிலும் நாட்டமில்லாதவரானால் ஒருமுறை பிராங்பர்ட் புத்தகக் காட்சிக்கு சுற்றுலாபோலச் சென்றுவரலாம். வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக அது இருக்கும்.
- கோ. ஒளிவண்ணன்,பொருளாளர், பபாசி. தொடர்புக்கு:olivannang@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT