Published : 11 Nov 2022 06:51 AM
Last Updated : 11 Nov 2022 06:51 AM

மாநிலக் கல்விக் கொள்கை: கவனம் கொள்ள வேண்டிய மக்கள் கருத்து

தமிழக அரசின் மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்கும் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான வல்லுநர் குழு, தமிழகத்தை எட்டு மண்டலங்களாகப் பிரித்து கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. அவற்றில் மூன்று கூட்டங்களில் பார்வையாளராகவும் சென்னை மண்டலக் கூட்டத்தில் கருத்தாளராகவும் கலந்துகொண்டேன். மேலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மூன்று ஆசிரியர் அமைப்புகள் தனித்தனியே தமிழகமெங்கும் நடத்திய வட்டமேசை கருத்துக் கேட்புக் கூட்டங்கள் பலவற்றிலும் கலந்துகொண்டபோது, கல்வி குறித்த தமிழக மக்களின் ஆர்வமிக்க விவாதங்களைப் பார்க்க முடிந்தது.

கல்வியைப் பொறுத்தவரை இதுபோன்ற திறந்தநிலை கருத்துக் கேட்பு, இதற்கு முன் 2004-05இல் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் தேசியக் கலைத்திட்ட வடிவமைப்புக்காகத் தமிழகத்தில் நான்கு இடங்களில் நடத்தப்பட்டது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக, கஸ்தூரி ரங்கன் கல்விக் குழுக் கருத்துக் கேட்பை இணையவழியிலேயே நடத்திவிட்டதாக அறிவித்தது. திறந்த அரங்கங்களில் சுதந்திரமாகக் கல்வியை விவாதிக்கும் சமூகமாகத் தமிழகம் இருக்கிறது. சாதி-மத, வட்டார, ஆண்-பெண் பேதங்களைப் புறந்தள்ளி ஜனநாயக முறைப்படி கல்வியின் பலவீனங்களை ஒளிவுமறைவில்லாத கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுத்த கல்விக் குழுவை வரலாறு மறக்காது.

மாணவர்களும் குழந்தைகளும் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்கும் இந்தக் கல்விக் குழுவின் முடிவு துணிச்சலானது; கல்விக் குழுவின் கருத்துக் கேட்பு அரங்கமே குழந்தைகள் - பெரியவர்கள் என இரண்டாகப் பிரிந்து புதிய அனுபவத்தைத் தருகிறது. இது கோத்தாரி கமிஷன், யஷ்பால் கமிட்டி காலங்களில்கூட இல்லாத புதுமை.

குழந்தைகளுக்கே முன்வரிசை: இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் குழந்தைகளின் கருத்துகளே முதலில் பதிவுசெய்யப்படுகின்றன: ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் எப்படி முரண்படுகிறார்கள், வகுப்பறையில் ஆசிரியர்கள் கைபேசி உபயோகிப்பது, முன் தயாரிப்பு ஏதுமின்றிப் புத்தகத்தை வெறுமனே வாசித்து ஏமாற்றம் அளிப்பது, தவறைச் சுட்டாமல் சொற்களால் சுடுவது, எதிர்பார்க்கும் அளவுக்கு மேதைமையும் நற்குணமும் இல்லாதவராக இருப்பது, கேள்வி கேட்கவும் சந்தேகங்களைத் திறந்த மனதோடு விவாதிக்கவும் முடியாதபடி வகுப்பில் நிலவும் ஜனநாயகமற்ற தன்மை ஆகியவை பற்றிக் குழந்தைகள் கவலையோடு பேசுகிறார்கள்.

குழந்தைகள் பயணக் கல்வி கேட்கிறார்கள். கீழடி, வைனு பாப்பு தொலைநோக்கி எனப் பாடத்தில் இருப்பதை நேரில் அழைத்துச் சென்று காட்டுங்கள் என்கிறார்கள். அவர்களுக்கு ஊடகக் கல்வியும் தேவையாக இருக்கிறது. ஏராளமான ஊடகத் தகவல்களை விவாதித்து சரி, தவறு எனப் பிரித்தறியவும் ஊடகங்களைக் கையாள பள்ளிக் கல்வியிலேயே இடம் இருக்க வேண்டும் என்கிறார்கள். குழந்தைகள் மனப்பாடத் தேர்வு முறைக்கு மாற்றுவழியைக் கேட்கிறார்கள். திருச்சியில் நான்காம் வகுப்பு மாணவி, வீட்டுப்பாடம் எழுதுவதைவிட சமூகப்பணி-கள ஆய்வுக்கு அனுமதி கேட்கிறார். விழுப்புரம் மாணவர் ஒருவர் அறிவியல் ஆய்வுக்கூடங்களும் நூலகங்களும் கோருகிறார். கோவை மாணவர் எதிர்காலப் பணியிடங்கள், நான்காம் தொழிற்புரட்சி கால வேலைகள் பற்றிப் பாடத்தில் இருக்கட்டும் என்கிறார். கல்லூரி மாணவர்களோ சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றக் கல்வி முதல் பாலியல் கல்வி வரை கேட்டு விவாதிக்கிறார்கள். தகவல்களையே திணிக்காமல் திறன்களை வளர்க்கும் கல்வி வேண்டும் என்பதும் அவர்களது வாதம்.

திணறும் பெரியவர்கள்: ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதற்கு நேரெதிராக இருக்கிறார்கள். அவர்கள் நீதிபோதனை நடத்தச் சொல்கிறார்கள். குழந்தைகள் அடங்குவதே இல்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள், பிரம்பை மீண்டும் கையில் கொடுங்கள் என்று பகிரங்கமாகக் கேட்கிறார்கள் ஆசிரியர்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் முதல் ஆசிரியர் பற்றாக்குறை வரை தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கும் இடமாக ஆசிரியர்கள் சிலர் அவையைச் சுருக்கியது வேதனை அளிப்பதாக இருந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ஒலிவாங்கியைப் பெற்றுப் பேசப் போட்டியிட்டதில் ‘ஆசிரியர்களே இப்படி இருந்தால் மாணவர்களை எப்படிச் சரிசெய்வது’ என்று நீதிபதியே ஒரு கட்டத்தில் சாடியதையும் இங்கே பதிவுசெய்ய வேண்டும்.

எட்டாம் வகுப்பு வரை பொதுக் கல்வி-ஒன்பதாம் வகுப்பு முதல் தனிப்பிரிவு செமஸ்டர் தேர்வு குறித்த விவாதம், பதினோராம் வகுப்பில் பொதுத்தேர்வு தொடர வேண்டுமா என்பது பற்றிய திறந்த உரையாடல், மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், பெண் கல்வி ஆகியவை சார்ந்து மக்கள் கருத்து மாவட்டம்தோறும் பிரதிபலிக்கிறது. பள்ளிகளில் உளவியல் வழிகாட்டுநர்களைத் தனியே நியமிப்பதைவிட, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் முறையான பாடமாக அதை அறிமுகப்படுத்தி ஆசிரியர்களையே உளவியல் வழிகாட்டிகளாக்க வேண்டும் என்கிற கருத்தைப் பெரும்பான்மை பெற்றோர்கள் முன்வைக்கிறார்கள். கல்வியில் மாநில உரிமைகளைத் தக்கவைக்கக் கல்வியாளர்கள் அறைகூவல் விடுக்கிறார்கள்.

தமிழகத்தின் எதிர்பார்ப்பு: 21ஆம் நூற்றாண்டில் தொழில்துறையின் புதிய பணிச் சவால்களின் தேவைக்கு ஏற்பப் பல்கலைக்கழகக் கல்வியும், பல்கலைக்கழகக் கல்வி என்ன தேவைகளை அடிப்படைகளாக முன்வைக்கிறதோ அதற்கேற்ப மேல்நிலைப் பள்ளிக் கல்வியும் அதன் அடிப்படையிலான திறன்களை வளர்க்கும் உயர்நிலை, நடுநிலை, தொடக்கக் கல்வியும் அமைப்பாக்கம் பெறுவது கட்டாயத் தேவை. கூடவே, கல்வியில் மனிதநேயம், மத நல்லிணக்கம், சமூகச் சிந்தனை, படைப்பாக்கம், சுயசிந்தனை, அனுபவங்களை இணைப்பதும் அவசியம். அறிவியல்பூர்வ அணுகுமுறை, வாசிப்பு, தேடல் இவற்றை விதைப்பது காலத்தின் கட்டாயம். இவற்றைத் தமிழக மக்கள் முன்வைப்பதைப் பார்க்க முடிகிறது. குளித்தலை அறிவியல் இயக்கக் கருத்துக் கேட்டலின்போது மூதாட்டி ஒருவர் கூட்டத்தில் புகுந்து விவசாயத்தைக் கல்வியில் இணைக்கச் சொன்னதையும் ‘நம்ம ஊரு குழந்தைகளுக்கு நம்ம ஊரு வெற்றிலை பற்றிப் பாடத்துல வைக்கச் சொல்லு’ என்று உத்தரவு பிறப்பித்ததையும் மறக்கவே முடியாது. அவர் கேட்பது வட்டாரக் கல்வி எனும் புதிய அணுகுமுறை.

மூன்று அடிப்படைகளைத் தமிழக மக்களின் இதயத் துடிப்பாகப் பார்க்க முடிகிறது. ஒன்று, பாரபட்சமின்றி எல்லாருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். இரண்டு, தமிழும் ஆங்கிலமும் போதும்; மூன்றாவது மொழி அவரவர் விருப்பம். மூன்று, தொடக்கக் கல்வி வரை பாடங்களைத் தாய்மொழி தமிழில் பயிற்றுவிப்பது. இவை தவிர, தேர்வு மையக் கல்வியைத் தேடல்மைய, படைப்பாக்கக் கல்வியாக்குவது, ஏட்டுச் சுரைக்காய்க் கல்வியைச் செயல்படும்-செய்முறைக் கல்வியாக்குவது, வெறும் மதிப்பெண் சான்றிதழ் தரும் கல்வியை மனித மதிப்பீடுகளை வழங்கும் கல்வியாக மாற்றுவது எனத் தமிழக மக்கள் இந்தக் கல்விக் குழுவிடம் பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளார்கள் என்பது வெளிப்படை. அதைப் பிரதிபலிப்பதுபோல் கொள்கை அமைய வேண்டும். - ஆயிஷா இரா. நடராசன் கல்வியாளர், எழுத்தாளர், தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

To Read in English: State Education Policy should consider people’s opinions too

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x