Published : 10 Nov 2022 06:49 AM
Last Updated : 10 Nov 2022 06:49 AM
அந்தக் குழந்தை ஒரு சிறப்புக் குழந்தை. எவரேனும் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கக்கூட அதனால் இயலாது. மழலையர் வகுப்பு மாண்டிசோரி ஆசிரியை ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி நம்பிக்கையுடன் குழந்தையை வகுப்புக்கு அழைத்துச் சென்றார். சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றம். மற்ற குழந்தைகளைப் பார்த்து தானும் சில செயல்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது அந்தக் குழந்தை. ஏற்கெனவே அந்த வகுப்பில் படித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஆசிரியையை அழைத்தான். ‘மிஸ், இவனைப் பாருங்க. இப்பெல்லாம் கூப்பிட்டா திரும்பிப் பாக்கறான். அவன் சீக்கிரமே நல்லா ஆகிடுவான் மிஸ்’ என்று கரிசனத்துடன் சொன்னபோது, நெகிழ்ந்து போனார் அந்த ஆசிரியை. இப்படித்தான் இருப்பார்கள் மாண்டிசோரிக் குழந்தைகள். அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் என்ன மாயமந்திரம் செய்யுமோ தெரியாது. பயன்படுத்தப் பயன்படுத்த அவர்களுக்குள் சகமனித உணர்வு ஊற்றெடுக்கும்.
இன்னொரு உதாரணம்: சிறுமி ஒருத்திக்குச் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத பிரச்சினை. டயாபர் அணிந்து வருவாள். அது உறுத்தும்போதெல்லாம் சட்டையைத் தூக்கிவிட்டுச் சரிசெய்துகொள்வாள். புதிதாக அந்த வகுப்பில் சேர்ந்திருந்த சிறுவன் ஒருவன், சிறுமியின் செயலைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தான். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மாண்டிசோரிச் சிறுவன் ‘சிரிக்கக் கூடாது. அது நம்ம பாப்பா. அதைப் பார்த்துச் சிரிக்கலாமா?’ என்று மென்மையாகக் கண்டித்தான். சிறுமியின் பக்கம் திரும்பி, ‘பாப்பா, நீயும் சட்டையெல்லாம் தூக்கக் கூடாது’ என்று அறிவுரை சொன்னான்.
மாண்டிசோரி ஆசிரியர்கள் வியப்புடன் பகிர்ந்துகொள்ளும் எத்தனையோ அனுபவங்களில் மேலும் ஒன்று. பூங்காவுக்கு நடைப்பயிற்சிக்கு வந்திருந்த பெற்றோர், தங்கள் மகனை ஓரிடத்தில் உட்காரச் சொல்லிவிட்டுத் தாங்கள் மட்டும் நடக்கத் தொடங்கினார்கள். உட்கார்ந்திருந்த அந்தச் சிறுவன் சும்மா இல்லை. அங்கு கீழே இருந்த குப்பைகளை எடுத்துப் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட ஆரம்பித்தான். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த வயதான பெரியவர், ‘தம்பி, இந்த இடத்தைப் பெருக்க ஒரு ஆயா இருக்காங்க. அவங்க செய்வாங்க.. இந்த வேலையெல்லாம் நீ செய்யாதே’ என்றார்.
சிறுவன் அவரைத் திரும்பிப் பார்த்தான். ‘இது யாருடைய பார்க்?’ என்று கேட்டான். ‘நம் எல்லோருடைய பார்க்தான்’ என்று பதில் சொன்னார் பெரியவர். ‘அப்போ இந்த இடத்தை நாமதானே சுத்தமா வெச்சுக்கணும்’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டுவிட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான் சிறுவன். பெரியவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ‘நீ இதையெல்லாம் எங்கே கத்துக்கிட்டே?’ என்று கேட்டார்.
‘ஸ்கூல்லதான் சொல்லித் தந்தாங்க.’
‘எந்த ஸ்கூல்?’
‘கார்பரேஷன் ஸ்கூல்’ என்று பளிச்செனப் பதில் சொன்னான் சிறுவன்.
வியப்பில் ஆழ்ந்த பெரியவர் அப்படி என்னதான் அந்தப் பள்ளிக்கூடத்தில் விசேஷம் என்று தெரிந்துகொள்ள மறுநாள் அங்கே சென்றார். மாண்டிசோரி வகுப்பைப் பார்த்து மேலும் வியந்தார். இப்படி நாளுக்கொரு அனுபவமாகப் பகிர்ந்துகொள்ளும் ஆசிரியர்கள் மாண்டிசோரிக் கல்வியில் பயிற்சி பெற்றவர்கள். தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சுமார் 15 பள்ளிகளில் 50 வகுப்புகளை ஏற்கெனவே வெற்றிகரமாக சென்னை மாநகராட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இவை தவிர, தற்போது 30 பள்ளிகளுக்கும் மேலாக இந்தக் கல்வி முறை பரவலாக்கப்பட்டுள்ளது.
நேர்த்தியும் சமூக உணர்வும்: மழலையர் வகுப்பு என்றால் குழந்தைகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு, ஆரவாரம் செய்துகொண்டு இருப்பார்கள் என்று நாம் கற்பனை செய்தால் ஏமாந்து போவோம். சிறுவர்களின் உயரத்துக்கு ஏற்பச் சின்னச்சின்ன அலமாரிகளில் கல்விக் கருவிகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதை அவர்களே தேர்வுசெய்து செயல்பாடுகளைச் செய்வார்கள். கல்விக் கருவிகளைக் கையாளும்போது பிழைகள் செய்வது குழந்தைகளின் இயல்பு. பிழையிலிருந்து அவர்கள் தாங்களாகவே நேர்த்தியைக் கற்றுக்கொள்வார்கள். சரியாகச் செய்துமுடித்தவுடன் வரக்கூடிய வெற்றிப் பெருமிதத்தைக் குதித்துக் கொண்டாடுவார்கள். அதனால்தான் எவருடைய அங்கீகாரமும் அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை. உள்ளார்ந்த மனநிறைவை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
வீடுகளில் குழந்தைகள் எதைச் செய்தாலுமே அதில் தலையிடுவதும், திருத்துவதும்தான் குழந்தை வளர்ப்பு என்று நாம் புரிந்துவைத்திருக்கிறோமே, அது எவ்வளவு பெரிய தவறு என்பதை மாண்டிசோரிக் கல்விமுறையைப் பார்த்தால்தான் நமக்குப் புரியும். இந்தக் குழந்தைகள் தங்கள் செயல்பாட்டைத் தொடங்கும் முன்பு தங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் சிறிய பாயை விரித்துப்போட்டு உட்காருவார்கள். அந்தப் பாயின் எல்லைக்குள் அவர்களின் செயல்பாடுகள் அடங்கிவிடும். கல்விக் கருவிகளை எடுக்கப் போகும்போது தங்கள் பாயையும் மிதிக்க மாட்டார்கள், மற்றவர்கள் பாயையும் மிதிக்க மாட்டார்கள். இது உனக்கான இடம். மற்றவர்களுக்கும் அதுபோல் இங்கே இடம் இருக்கிறது. அதனை நீ மதித்து நடக்க வேண்டும் என்கிற சமூக உணர்வு குழந்தைகளுக்கு இந்தச் செயல்பாட்டின் மூலம் கிடைக்கிறது.
மேதை உருவாக்கிய கல்வி முறை: மரியா மாண்டிசோரி என்ற மேதை குழந்தைகளின் இயல்பை நன்கு கவனித்து உருவாக்கிய கல்விமுறை இது. இரண்டு வயதிலிருந்து ஆறு வயதுக்குள் ஒரு குழந்தைக்கு இந்தக் கல்வியை கொடுத்தோமேயானால், அந்தக் குழந்தைக்குக் கல்வி என்பது மிக எளிதான ஒரு விஷயமாகி விடுகிறது. இந்த மாண்டிசோரிக் குழந்தைகளில் சிலர் முதலாம் வகுப்புக்குப் போகும்போதே நான்கு இலக்கங்களில் கூட்டல், கழித்தல், வகுத்தல் என்று செய்துகாட்டி அசத்துவார்கள். கணிதமும், மொழிப்பயிற்சியும் எளிதாக அவர்களின் மூளைக்குள் செலுத்தப்படுகிறது. வெறும் கல்வி மட்டுமில்லை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி சகமனித உணர்வு, சமூக அக்கறை, சுயமதிப்பு என்று அத்தனையும் அவர்களுக்குள் தூண்டப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் பெருமுயற்சி ஒரு புதிய வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. - கே.பாரதி பேராசிரியர்,
தொடர்புக்கு: bharathichandru14@gmail.com
To Read in English: Montessori education: Chennai Corporation shines a new light
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT