Published : 04 Nov 2016 09:57 AM
Last Updated : 04 Nov 2016 09:57 AM
நான் அமெரிக்கா வந்த நாள் முதலாகப் பலரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். ஹாங்காங் நகரில் விமானத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, வயதான அமெரிக்கத் தம்பதியிடம் பேச நேர்ந்தது. இருவரும் சீனாவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறார்கள். ஒரே குரலில் ‘எங்களுக்குப் பதில் சொல்லி மாளவில்லை. ட்ரம்ப் போன்ற ஒருவரை எவ்வாறு குடியரசுக் கட்சி தேர்ந்தெடுத்தது என்று கேள்விகள் அதிகம் கேட்காத சீனர்களே கேட்கிறார்கள்’ என்றார்கள். இங்கும் நான் சந்தித்த வெள்ளை இனத்தவர்களில் யாரும் ட்ரம்புக்கு ஆதரவாகப் பேசவில்லை. ஆனால், சான்பிரான்சிஸ்கோ அமெரிக்கா இல்லை.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் என்ன சொல்கிறார்கள்?
“மூக்கைப் பிடித்துக்கொண்டு ஹிலாரி க்ளிண்டனுக்கு ஓட்டுப் போட வேண்டிய கட்டாயம்” என்று எனது இந்துத் துவ நண்பர்களில் ஒருவர் சொன்னார். ஆனால், ட்ரம்புக்குத்தான் ஓட்டு போடுவோம் என்று இரு குழுக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன. ஒன்று, ‘கு க்ளக்ஸ் க்ளான்’ என்று அழைக்கப்படும் வெள்ளைப் பயங்கரவாதிகளின் அமைப்பு. மற்றொன்று, குடியரசுக் கட்சியை ஆதரிக்கும் இந்து அமைப்பு. தான் பேசிய கூட்டம் ஒன்றில் இந்திய மக்கள் அனைவரும் இந்துக்கள் என்ற தொனியில் ட்ரம்ப் பேசினார். மோடியை வானளாவப் புகழ்ந்தார். ஆனால், மோடியை வலுவாக ஆதரிக்கும் இந்தியர்கள்கூட இவருக்கு ஓட்டு போடுவார்கள் என்று சொல்ல முடியாது. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், அமெரிக்காவில் வாழும் ஆசியர்களில் 7% மட்டுமே ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். கணிப்பில் பங்கு பெற்றவர்களில் 54% பேர் இந்துக்கள். எனவே, இந்தியர்கள் பெருவாரியாக ஜனநாயகக் கட்சிக்குத்தான் ஓட்டு அளிப்பார்கள் என்பது தெளிவு. அமெரிக்கச் சிறுபான்மையினரின் ஆதரவு ட்ரம்புக்குக் கிடைக்காது. வெள்ளையர்கள் எண்ணிக்கை 75%. இவர்கள் பெருவாரியாக ஓட்டு போட்டால் குடியரசுக் கட்சி வெற்றி பெறலாம்.
தேர்வு முறை
நமது நாட்டைப் போலவே அமெரிக்காவிலும் அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக ளுக்கும் இடையே பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், நமது நாட்டைவிட அமெரிக்க மாகாண அரசுகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மத்திய அரசில் சட்டங்களைக் கொண்டுவருபவை செனட் அமைப்பும் மக்கள் பிரதிநிதிகள் அமைப்பும். இவற்றில் அதிக அதிகாரங்கள் பெற்றது செனட் என்று சொல்லலாம். ஆனால், உச்சாணிக் கொம்பில் இருப்பவர் அதிபர். நமது குடியரசுத் தலைவரைவிட, நமது பிரதமரைவிட இவருக்கு அதிக அதிகாரங்கள் இருக்கின்றன. அவை இவரை உலகிலேயே மிகவும் வலிமை கொண்ட தனிமனிதராக ஆக்குகின்றன. இவர் அமெரிக்க மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. ‘எலெக்டரல் காலேஜ்’ என்ற தேர்வு செய்பவர்களின் அமைப்பால், அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தேர்வுசெய்பவர்களைத்தான் மாகாணங்கள் வாரியாக மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். மொத்தம் 538 பேர் தேர்வு செய்பவர்கள். இவர்களில் 270 பேரின் ஆதரவு கிடைப்பவரே அதிபராக முடியும். மக்களால் தேர்வுசெய்யப்படுபவர்கள், நாங்கள் வெற்றி பெற்றால் இன்னாருக்கு வாக்களிப்போம் என்ற உறுதி மொழியை அளிக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு மாற்றி ஓட்டளிக்க எந்தத் தடையும் கிடையாது (ஒருவேளை தர்ம அடி விழலாம்) என்றாலும், இன்று வரை மாற்றி ஓட்ட ளித்தது என்பது மிகக் குறைவாகவே நடந்திருக்கிறது.
மக்கள் அதிகம் ஓட்டளித்த தலைவர், அதிபர் ஆகாமல் இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. உதாரணமாக, 2000 தேர்தலில் ஜார்ஜ் புஷ்ஷை விட அல் கோர் ஐந்து லட்சத் துக்கும் அதிகமான மக்களின் ஓட்டுகளைப் பெற்றார். ஆனால், தேர்வுசெய்பவர்களில் 271 பேரின் ஆதரவு புஷ் ஷுக்குக் கிடைத்ததால் அவரால் அதிபராக முடிந்தது.
ட்ரம்ப் கோமாளியா?
நமக்கு ட்ரம்பைப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், அவரைக் கோமாளியாக நினைப்பதைப் போல முட்டாள்தனம் ஏதும் இருக்க முடியாது. ஹிட்லர் ஆட்சிக்கு வந்தபோதும் அவரைக் கோமாளி என்று நினைத்தவர்கள் அதிகம். ட்ரம்பின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் பொருள் இருக்கிறது. அவர் அமெரிக்கப் பெரும் பணக்காரர்களில் ஒருவர். பரம்பரைப் பணக்காரர்களின் அங்கீகாரம் அவருக்குச் சமீபத்தில்தான் மெதுவாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. நமது அம்பானிகளுக்குக் கிடைத்திருப்பதுபோல. எங்கு பணம் இருக்கிறது என்பதை மோப்பம் பிடித்து அறியக் கூடிய மிகச் சிலரில் அவர் ஒருவர். எனவே, அவர் பதவிக்கு வந்தால் ஏழைகளும் நடுத்தர மக்களும் பயனடைகிறார்களோ இல்லையோ, பணக்காரர்கள் நிச்சயமாகப் பயனடைவார்கள்.
இருவரும் ஒருவரா?
ஹிலாரி கிளிண்டன் வந்தால் ஏழைகள் பயனடைவார்களா? இருவரும் அவரவர் கட்சி களினால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஏழை களுக்காகப் பேசிய பெர்னி சாண்டர்ஸை ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கும் கட்சி அங்கத் தினர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தி ட்ரம்பும் கிளிண்டன் தம்பதியும் எவ்வாறு சமீப காலம் வரை நண்பர்களாக இருந்தார்கள் என்பதை விளக்குகிறது. கிளிண்டனின் அறக்கட்டளைக்கு ட்ரம்ப் ஒரு லட்சம் டாலர்கள் கொடுத்திருக்கிறார். இரு வருமே பல பெரும் பணக்காரர்களின் தோள்களில் ஏறி இப்போது இருக்கும் இடத்துக்கு வந்தவர்கள். இருந் தாலும், கிளிண்டன் பதவிக்கு வந்தால் பே ரோல் வரி (pay roll tax) என்று அழைக்கப்படும் வரியின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டு, பணமுள்ளவர்கள் அதிக வரி செலுத்த நேரிடலாம். சமூகநலத் திட்டங்கள் தனியார்மய மாக்கப்படும் அபாயம் இருக்காது என்றும் பெண்கள், ஏழைகள் பிரச்சினைகளுக்குச் சிறிதளவாவது தீர்வுகள் காண முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் நம்பலாம்.
ஆனால், அமெரிக்கத் தலைமையை நிர்ணயிப்பது இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் அல்ல.
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT