Last Updated : 21 Nov, 2016 09:59 AM

 

Published : 21 Nov 2016 09:59 AM
Last Updated : 21 Nov 2016 09:59 AM

சுவிஸ் வங்கிகளிலுள்ள கறுப்புப் பணம் இந்தியா வருமா?- லினஸ் வான் காஸ்டெல்மர் பேட்டி

மோடியின் தேர்தல் பிரச்சாரத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தது கறுப்புப் பண ஒழிப்பு. வெளிநாடுகளில், குறிப்பாக, சுவிட்சர்லாந்தில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவேன் என்று கூட்டங்கள்தோறும் பேசினார் மோடி. இந்நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவது எந்த அளவுக்குச் சாத்தியம்? இந்தியாவுக்கு சுவிஸ் தூதராக இருந்த லினஸ் வான் காஸ்டெல்மர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குக் கொடுத்த பேட்டி இது. கறுப்புப் பண விவகாரம் பெரும் விவாதம் ஆகியிருக்கும் இந்நாளில், இந்தப் பேட்டியைத் தருகிறோம்.

பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக் கான அமைப்பில் சுவிட்சர்லாந்து இணைவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. வரி தொடர்பான தகவல் களை யாரும் கேட்க வேண்டிய அவசியமே இல்லா மல் தானாகவே இந்த அமைப்பு பகிர்ந்துகொள்கிறது. கறுப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்கள் விவகாரத்துக்கு இது எந்த விதத்தில் பயன்படும்?

அது ஒரு நீண்ட நடைமுறை. இதில் தொழில்நுட்ப, அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. நிதானமாக நாங்கள் இதைச் செய்ய வேண்டும். இந்தியாவின் நிலையை நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், எங்களின் நிலைமையையும் புரிந்துகொள்ள வேண்டும். கறுப்புப் பணம் என்ற பேச்சு வந்தாலே எல்லோரும் சுவிட்சர்லாந்து பற்றியே பேசுகிறார்கள். ஆனால், மற்ற இடங்களிலும் கறுப்புப் பணம் இருக்கிறது. இந்தியாவுக்குள்ளும் இருக்கிறது. அதையும் பார்க்க வேண்டும்.

கடந்த கால விவகாரங்கள் பிரச்சினைக்குரியவை. பல பத்தாண்டுகளாக சுவிட்சர்லாந்துக்குள் பணம் பாய்ந்துகொண்டிருந்ததையும், அது வரி செலுத்தாத பணம் என்பதையும் நாங்கள் எப்படிப் பார்ப்பது?

அது ஒரு பிரச்சினைதான். தற்போது சுவிட்சர்லாந்தும் இந்தியாவும் ஒரே மாதிரியான சிரமத்தில்தான் உள்ளன. வரி தொடர்பான தகவல்களை ஒவ்வொரு வங்கியும் தானாகவே பரிமாறிக்கொள்ளும் நிலையை நாம் 2017-ல் அடைவோம். அதுதான் நல்ல செய்தி. நாம் கடந்த காலத்தை எதுவும் செய்ய முடியாது. ஆனாலும், எங்களது தேசியச் சட்டத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். கடந்த காலத்தில் ரகசியம் பாதுகாக்கப்பட்டது. மோசடி நடந்ததற்கான ஆதாரம் இருந்தால் அதன் மீதான நடவடிக்கைகளுக்குத் தேவையான வகையில் வங்கிகள் பதிலளிக்கும். உதவிகள் செய்யும். எங்கள் வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ள எல்லா இந்தியர்களின் விவரங்களையும் கொடுங்கள் என்று நீங்கள் கேட்க முடியாது. அது சாத்தியமில்லை. உங்களிடம் ஆதாரம் இருந்தால், நாம் சேர்ந்து வேலை செய்யலாம்.

சுவிட்சர்லாந்து அரசாங்கம் தனது வங்கிகளைப் பாதுகாப்பதற்காக தேசியச் சட்டம் போன்ற வார்த்தைகள் பயன்படுத்தித் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள மறுக்கிறது என்ற தோற்றம் இருக்கிறதே?

தற்போதைய நிலையில் இது தவறான கருத்து. இரட்டை வரிவிதிப்பு உடன்பாட்டில் நாங்கள் கையெழுத்து போட்டுள்ளோம். அப்போதிலிருந்து இந்த விஷயத்தில் முன்னேறுகிறோம். நீண்ட காலமாக, எங்களது நாடு இதில் விட்டுக்கொடுக்காமல் கண்டிப்பாக இருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இந்த நிலை மாறிவருகிறது.

இந்தியர்களுக்குச் சொந்தமான ரூ.14,000 கோடி அளவுக்கான செல்வம் சுவிட்சர்லாந்திடம் இருப்பதைச் சொல்கின்றன சுவிஸ் தேசிய வங்கியின் புள்ளிவிவரங்கள். அவற்றில் எவ்வளவு சட்ட விரோதமானவை என்ற தோராயமான மதிப்பீடு இருக்கிறதா?

ஒவ்வொரு வருடமும் வங்கிகள் கட்டாயமாகத் தங்களிடமிருப்பதை அறிவிக்க வேண்டும் என்பது எங்களது சட்டம். அதன்படியான அதிகாரபூர்வ விவரங்களே அவை. ஆனால், எங்களுக்குப் பணம் எங்கிருந்து வந்தது என்பது மட்டுமே தெரியும். எப்படிப்பட்ட பணம் என்பது தெரியாது.

இந்தியர்களின் பணத்தில் கணிசமானவை வெளியேறுகிறது என்றும் வேறு இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா கறுப்புப் பண விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்து வதால், சுவிஸ் நாட்டின் வங்கித் துறைக்குப் பிரச்சினைகள் வருகின்றன என்று உங்கள் அரசு கவலைப்படுகிறதா?

நான் அப்படி நினைக்கவில்லை. சுவிஸ் வங்கிகளில் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் பணம் சின்ன ஒரு பகுதிதான். அது கவலைப்படுகிற அளவு இல்லை. மற்றபடி, கடந்த பத்தாண்டுகளில் நீங்கள் கறுப்புப் பணம் வைத்திருந்து, அதை நீங்கள் சுவிஸ் வங்கிகளில் போட நினைத்தால், எங்களது புதிய வங்கிச் சட்டங்களை நீங்கள் சரியாக வாசிக்கவில்லை என்று அர்த்தம். நீங்கள் மோசடி செய்திருந்தால், நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. சுவிட்சர்லாந்து மற்ற நாடுகளோடு இதில் முழுமையாக ஒத்துழைக்கிறது.

பணத்தை வேறு இடங்களுக்கு மாற்றி யனுப்புகிற விவகாரத்தில் தற்போதுகூட மூன்று ஐரோப்பிய வங்கிகள் மாட்டிக்கொண்டுள்ளன. அதில் இரண்டு சுவிஸ் வங்கிகள்…

சுவிஸ் வங்கித் துறைக்கு நெருக்கடி வந்துள்ளது. அது தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிய விழுமியங்களையும் கண்டுபிடிக்க வேண்டும். அவை செயல்படுகிற நாடுகளின் சட்டங்களை மதிக்க வேண்டும். எது சரி என்பதற்கான மதிப்பீடுகளையும் அது வளர்க்க வேண்டும். ஆமாம், நீங்கள் குறிப்பிடும் சம்பவம் நடந்துள்ளது. அதில் ஈடுபட்ட வங்கிகளுக்குக் கடும் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. சரிசெய்யும் நடவடிக் கைகள் தொடர்கின்றன.

கறுப்புப் பணத்துக்கு எதிரான உலகளாவிய கட்டமைப்புகளில் இணைவது என்று உங்கள் நாடு தீர்மானித்துள்ளது. ஜி 20 நாடுகளின் கூட்டத்தில் கறுப்புப் பணம் பற்றி இந்தியப் பிரதமர் மோடி பேசியதோடு தொடர்புடையதா இது?

இது உண்மையல்ல. சுவிட்சர்லாந்தில் போடப்பட்டுள்ள பணத்தில் இந்தியாவின் பங்கு குறைவு. அதனால், நீங்கள் சொன்னதுபோல அது நடக்கவில்லை.

கறுப்புப் பணம் தொடர்பான சுயேச்சையான விசாரணைகளின் அடிப்படையில் கேள்விகளை அனுப்பியிருப்பதாக நாடாளுமன்றத்தில் இந்தியா வின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றின் விளைவுகளை நாங்கள் எப்போது பார்க்கலாம்?

2014 பிப்ரவரியில் இங்கே நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோம். இந்தியாவின் வருவாய் செயலாளர் சக்திகந்ததாஸ் சுவிட்சர்லாந்துக்குப் போனார். இதில் எவ்வளவு தூரம் இணைந்து பணியாற்ற முடியும் என்று யோசித்துவருகிறோம். இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி எடுத்துவந்த பல வழக்குகள் நல்ல முறையில் நடந்துவருகின்றன. நாங்களும் ஒத்துழைக்கிறோம். ஆனால், அவர்கள் ஹெச்எஸ்பிசி வங்கியிலிருந்து திருடப்பட்ட பட்டியலோடும் சரியில்லாத இடங்களிலிருந்து வரும் தரவுகளோடும் வருகிறபோது நாங்கள் அவர்களோடு ஒத்துழைக்க முடியாது.

தகவல்களைப் பரிமாறிக்கொள்வதிலும் கறுப்புப் பணம் எங்கிருக்கிறது என்று கண்டறிவதிலும் இந்தியா - சுவிட்சர்லாந்து உறவுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. இது இருதரப்பு உறவுகளையும் பாதிக்குமா?

நான் அப்படி நினைக்கவில்லை.

© ‘தி இந்து’ ஆங்கிலம்

தமிழில் சுருக்கமாக: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x