Last Updated : 07 Nov, 2016 09:51 AM

 

Published : 07 Nov 2016 09:51 AM
Last Updated : 07 Nov 2016 09:51 AM

ஹிலாரி கிளிண்டன் வருவாரா?

எந்த அமெரிக்க அதிபரும் சவுதி அரேபியாவைப் பகைத்துக்கொள்ள முடியாது

அவருக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தன. பல வருடங்கள் அரசியலில் கழித்தவர். ஒபாமா அரசில் முக்கியப் பதவிகளை வகித்தவர். அமெரிக்க அதிபராக வர வாய்ப்பு இருக்கும் முதல் பெண். எனவே, அவர் ட்ரம்பை நசுக்கித் தூக்கி எறிந்துவிடுவார் என்று பலர் நினைத்தனர். சில மாதங்களுக்கு முன்னால் நடந்த கருத்துக் கணிப்பில் அவர் மிகவும் முன்னிலையில் இருந்தார்.

ஆனால், இன்று கணிப்புகள் விதவிதமாக வருகின்றன. பிபிசி கணிப்பு இருவரும் 45% ஓட்டுகளைப் பெற்று சமநிலையில் இருக்கிறார்கள் என்கிறது. ஆனால், ‘நியூயார்க் டைம்ஸ்’ கணிப்பு கிளிண்டனுக்கு 84% வெற்றிவாய்ப்பு இருக்கிறது என்கிறது. ஆனால், எல்லோரும் ஒரே குரலில் சொல்வது, ‘இந்தத் தேர்தலைப் போன்று கீழ்த்தரமான விவாதங்களும் தாக்குதல்களும் இதுவரை நடந்ததில்லை’ என்பதுதான். ஆனால், பொது இடங்களில் எந்தப் பரபரப்பும் இல்லை. சில பேருந்துகளின் பின்னால் ‘ஓட்டுப் போடுங்கள்’ என்ற வாசகத்தைப் பார்க்க முடிகிறதே தவிர, வேறு பலத்த பிரச்சார சாதனங்கள் எதையும் பொதுவெளியில் பார்க்க முடிவதில்லை. எல்லாமே சமூக ஊடகங்களில் நடப்பது போன்ற ஒரு பிரமை.

ஹிலாரியின் வளர்ச்சி

மத்தியதரக் குடும்பத்தில் பிறந்த ஹிலாரி கிளிண்டன், புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியான வெல்லெஸ்லி கல்லூரியில் படித்தார். பின்னர் ஏல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். இள வயதில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவு அளித்துக்கொண்டிருந்த அவர், மார்ட்டின் லூதர் கிங் படுகொலைக்குப் பின்னர் ஜனநாயகக் கட்சிக்கு மாறினார். பில் கிளிண்டனை ஏல் பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கிறார் என்றாலும், இருவரும் அவரவர் பாதைகளில் பயணம் செய்தனர். பின்னர் சந்தித்து 1975-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் அர்கன்சா மாநிலத்தில் பெரிய புள்ளிகளாகக் கருதப்பட்டனர். பில் கிளிண்டன் அர்கன்சா மாநிலத்தின் கவர்னராகப் பதவி ஏற்ற பிறகுகூட ஹிலாரி தனது வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். அன்றைய தினத்தில் மிகவும் புகழ் பெற்ற வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர். பல பன்னாட்டு பெருநிறுவனங்களுக்காக வாதாடியிருக்கிறார். ஆனால், குழந்தைகளுக்காகவும் ஆதரவில்லாதவர்களுக்காகவும் அவர் எப்போதும் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். பில் கிளிண்டனின் பாலியல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, தனது கணவருக்கு முழு ஆதரவு அளித்தவர் ஹிலாரி.

அரசியல் வாழ்வு

1999-ல் அவரது அரசியல் வாழ்வு தொடங்கியது என்று சொல்ல வேண்டும். பில் கிளிண்டன் பதவியில் இருக்கும்போதே, நியூயார்க் நகரிலிருந்து ஹிலாரி செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருப்பவர் தேர்தலில் வெற்றிபெறுவது அதுதான் முதல் தடவை. அரசியலில் வெகுவாக முன்னேறிய ஹிலாரி, 2008-ல் அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஆவதற்காக கட்சியில் ஒபாமா போட்டியிட்டபோது, அவருக்கு எதிராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர், ஒபாமாவின் நிர்வாகத்தில் வெளியுறவு அமைச்சராக 2013 வரை பணியாற்றினார். பெர்னி சாண்டர்ஸுக்கு எதிராகப் போட்டியிட்டு ஜனநாயகக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராக கடந்த ஜூலை 26-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆக எல்லாத் தகுதிகளையும் பெற்றவர். ஆனாலும், பல கருத்துக் கணிப்புகளில் கணிசமான அமெரிக்கக் குடிமக்கள் அவரது நம்பகத்தன்மை கேள்விக்கு உரியது என்கிறார்கள். காரணம் என்ன?

சவுதி அரேபியாவிலிருந்து பணம்

ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஹிலாரியை நமது பழைய திரைப்படங்களில் வரும் வில்லியாகச் சித்தரிக்கிறார்கள். நான் பதவிக்கு வந்தால் ஹிலாரியைச் சிறைக்கு அனுப்புவேன் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். ‘கிளிண்டன் நடத்தும் அறக்கட்டளைக்குப் பணம் கொடுத்த சவுதி அரேபியா அரசுதான், ஐஎஸ்ஐஎஸ்ஸுக்கும் பணம் கொடுக்கிறது. ஆனால், இதைப் பற்றி ஹிலாரிக்குத் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்சே குற்றம்சாட்டியிருக்கிறார். இது உண்மையாகவே இருந்தாலும், சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா பெருமளவு ஆயுதங்களை விற்கிறது என்பதும் உண்மை. இந்த வியாபாரத்தை ட்ரம்ப் வந்தாலும் தடுக்க முடியாது என்பதும் உண்மை. எந்த அமெரிக்க அதிபரும் சவுதி அரேபியாவைப் பகைத்துக்கொள்ள முடியாது.

இவருக்கு ட்ரம்பை விடப் பெரிய எதிரி மின்னஞ்சல் விவகாரம் என்று சொல்லலாம். வெளியுறவு அமைச்சராக இருந்த சமயத்தில், அவர் அரசு மின்னஞ்சல் சர்வரைப் பயன்படுத்தாமல், தனது சொந்த சர்வரை அரசு விவகாரங்களுக்குப் பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு. சவுகரியத்துக்காகப் பயன்படுத்தினேன், அரசு ரகசியங்களை வெளியிடுவதற்கு அல்ல என்று அவர் சொல்கிறார். செய்தது முட்டாள்தனம், திருட்டுத்தனம் அல்ல என்பது அவரது வாதம். ஆனால், அரசு ரகசியங்களை அவர் யாருடன் பகிர்ந்துகொண்டார் என்பது இன்னும் சரிவரத் தெரியவில்லை. அவரது சர்வர் ஹேக்கர்களினால் (குறிப்பாக ரஷ்ய ஹேக்கர்களினால்) தாக்கப்பட்டிருக்கும் வாய்ப்பும் இருக்கிறது. தாக்கிய சுவடுகளையே அழித்துவிடக்கூடிய தாக்குதல்களையும் செய்ய முடியும்.

30,000-க்கும் மேற்பட்ட சொந்த மின்னஞ்சல்களை அவர் அழித்துவிட்டார். அவற்றோடு அவர் வெளியில் சொல்ல விரும்பாத ரகசியங்களும் அழிக்கப்பட்டிருக்கலாம். இதை விசாரித்த அமெரிக்கப் புலனாய்வுத் துறை அவருக்கு எதிராக எந்தச் சான்றும் இல்லை என்று கடந்த ஜூலை மாதத்தில் அறிவித்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் விசாரணை செய்வோம் என்று சொல்லியிருக்கிறது. இதனால் அவரது வெற்றிவாய்ப்பு குறையும் என்று சொல்ல முடியாது என்றாலும், அமெரிக்க அதிபர் ஆன பிறகு பல சவால்களை அவர் சந்திக்க நேரிடும். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(அமெரிக்காவைச் சுற்றுவோம்)

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

பி.ஏ. கிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x