Last Updated : 10 Nov, 2016 09:07 AM

 

Published : 10 Nov 2016 09:07 AM
Last Updated : 10 Nov 2016 09:07 AM

ட்ரம்பினுடையது சரித்திர வெற்றி!

ட்ரம்பை ஆதரிப்பவர்கள்கூட அவர் வெற்றி பெறுவார் என்று உண்மையாக நம்பியதாகத் தெரியவில்லை.

சான் பிரான்சிஸ்கோவில் இந்தக் கட்டுரையைத் தொடங்கும்போது இரவு 12 மணி. ட்ரம்ப் வெற்றி பெற்றார் என்று சிறிது நேரத்துக்கு முன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரது வெற்றிப் பேச்சு முடிந்து சில நிமிடங்கள் ஆகியிருக்கின்றன. மிகப் பணிவோடும் இதுவரை காட்டாத நாகரிகத்துடனும் பேசினார். ஹிலாரி கிளின்டனைச் சிறைக்கு அனுப்புவேன் என்று பயமுறுத்தாமல், நாட்டுக்கு அவர் செய்த சேவைக்கு நன்றி சொன்னார். எல்லா அமெரிக்கர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் எல்லோருக்குமான அதிபராக இருப்பேன்; சிலருக்கும் மட்டும் அல்ல என்றும் சொன்னார்.

அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்

பலருக்கு அதிர்ச்சி. பலருக்கு மகிழ்ச்சி. இன்று காலையில்கூட எனக்குத் தெரிந்த யாரும் ட்ரம்பை ஆதரிப்பவர்கள்கூட அவர் வெற்றி பெறுவார் என்று உண்மையாக நம்பியதாகத் தெரியவில்லை. ‘ஐநூற்று முப்பத்து எட்டு’ என்ற இணையத்தளம் கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பது - இரவு ஒன்பது மணி வரை ஹிலாரிக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று சொல்லிக்கொண்டிருந்த்து.

ட்ரம்பினுடையது சரித்திர வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. ஹிலாரியை மட்டுமல்ல, அமெரிக்காவின் முக்கியமான பணக்காரர்கள், பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள், குடியரசுக் கட்சியின் முக்கிய புள்ளிகள் என்று பலரை எதிர்த்து அவர் வெற்றி பெற்றிருக்கிறார். அரசியலில், பொதுப்பணியில் எந்த அனுபவம் இல்லாத ஒருவர் வெள்ளை மாளிகைக்குச் செல்வது இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன். அவரைப் போல வேறு யாராவது பெண்களைப் பற்றியோ அல்லது வேறு பல பிரச்சினைகளைப் பற்றியோ பேசியிருந்தால், இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார்கள். ட்ரம்ப், ட்ரம்பாக இருப்பதால் இன்று வெள்ளை மாளிகைக்குச் செல்லவிருக்கிறார்.

வெற்றிக்குக் காரணம் என்ன?

ஜனநாயகக் கட்சியின் கோட்டை என்று கருதப்படும் மாகாணங்கள்கூட ட்ரம்பின் பக்கம் சாய்ந்திருக்கின்றன. உடனடியாகத் தோன்றும் காரணங்கள் இவை. முதலாவதாக, மறுபடியும் அமெரிக்காவை மகத்தானதாக ஆக்கு வோம் என்று ரொனால்ட் ரீகன் பாணியில் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது (வெற்றியுரையிலும் இதைச் சொன்னார்). இரண்டாவது, குடியரசுக் கட்சி பெண்களுக்கும் சிறு பான்மையினருக்கும் ஆதரவாகப் பேசி னால்தான் கட்சி நிலைக்கும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால் ட்ரம்ப் அதற்கு நேர்மாறான முடிவை எடுத்தார். சில பத்திரிகைகள் குடியரசு கட்சியின் அழிவு தடுக்க முடியாதது என்றுகூட எழுதின. ஆனால் மக்கள் என்ன நினைக் கிறார்கள் என்பது பற்றி அவருக்குத் தெளிவு இருந்ததால் தனது நிலையில் உறுதியாக நின்றார். மூன்றாவதாக, ஜனநாயகக் கட்சி எட்டாண்டுகள் ஆட்சி நடத்திவிட்டது, மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கலாம். நான்காவதாக, மெக்ஸிகோவிலிருந்தும் இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் (குறிப்பாக சிரியாவிலிருந்து) மக்கள் குடியேறுவதை ஜனநாயகக் கட்சி தடுக்காது என்று மக்கள் நிச்சயமாக நினைத்தார்கள். ஐந்தாவதாக, மிக முக்கியமாக, ட்ரம்ப் உலகமயமாக்குதலுக்கு எதிராக இருந்தார். அமெரிக்காவிலிருந்து வேலைகள் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்குச் செல்லக் கூடாது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஹிலாரியின் தோல்விக்குக் காரணம் என்ன?

ஹிலாரியைப் போல தகுதி பெற்ற ஒருவர் கிடைப்பது கடினம். இருந்தாலும் மக்கள் அவரைத் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்பது வியப்பைத் தருகிறது. கலிபோர்னியா மாகாணத்தின் முடிவுகள் இதுவரை வரவில்லை. ட்ரம்புக்குக் கிடைத்ததைவிட அதிக மக்கள் ஓட்டுக்கள் அவருக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அல்கோருக்கு நடந்தது இவருக்கும் நடக்கலாம். ஆனால் பெருவாரியான மாகாணங்கள் ஹிலாரியைத் தேர்ந்தெடுக்கவில்லை. தோல்விக்கு முதல் காரணம் அவருக்கு நினைத்த அளவுக்குப் பெண்கள் ஓட்டுக்கள் கிடைக்கவில்லை என்று சொல்லலாம். இரண்டாவது புலனாய்வுத் துறை மின்னஞ்சல் விவகாரத்தில் அவர் எந்த கிரிமினல் குற்றமும் செய்யவில்லை என்று தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு சொன்னாலும், மக்கள் அவர் கவனமில்லாமல் நடந்துகொண்டார் என்று நினைத்தார்கள். மூன்றாவது ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் பலர் ஓட்டு போடப் போகவில்லை என்று நினைக்கிறேன். அது பல மாகாணங்களில் நிலையை ட்ரம்புக்குச் சாதகமாக ஆக்கியிருக்கலாம். நான்காவதாக, மிக முக்கியமாக, அவர் பெண் என்பதால் பலர் அவருக்கு ஓட்டு போடவில்லை என்பதே உண்மை. இன்னும் பல அமெரிக்க மக்கள் பெண் ஒருவர் அதிபராகி, திறமையோடு செயல்பட முடியும் என்பதை நம்ப மறுத்திருக்கிறார்கள்.

உலகம் எவ்வாறு எதிர்கொள்ளும்?

மேற்கத்திய நாடுகள் ட்ரம்ப், பதவிக்கு வருவதை விரும்பவில்லை என்பது வெளிப்படை. எனவே அவற்றோடு நிலைமை சீரடைய சில காலம் எடுக்கும். ரஷியாவோடு பகைத்துக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை என்று ட்ரம்ப் பகிரங்கமாகப் பேசியிருக்கிறார். ரஷியாவுக்கே க்ரிமியா சொந்தம் என்று பொருள்படப் பேசியிருக்கிறார். எனவே ரஷிய அமெரிக்க உறவு நிச்சயம் சீரடையும். ஐரோப்பாவில் இப்போது நடைபெறும் யுத்த பயமுறுத்தல்கள் குறையும். சிரியாவில் நடக்கும் போரிலும் இரு நாடுகளும் இணைந்து ஐஎஸ்ஸை அழிக்க முயற்சி செய்யலாம். சீனாவுடன் உறவு பலவீனமடையலாம். இந்தியாவை அவர் உண்மையாகவே விரும்புகிறார், மோடியை அவர் மதிக்கிறார் என்று என்னுடைய இந்துத்துவா நண்பர்கள் சொல்கிறார்கள். இந்தியாவுக்கு நண்பராக இருப்பாரோ இல்லையோ பாகிஸ்தானுக்கு அவர் நண்பராக நிச்சயம் இருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பி.ஏ. கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x