Published : 24 Nov 2016 09:02 AM
Last Updated : 24 Nov 2016 09:02 AM
தொடர்ச்சியான கள்ளப் பொருளாதார ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியே பணமதிப்பு நீக்க நடவடிக்கை
எந்த ஒரு பிரச்சினை குறித்தும் நான்கு பொருளாதார அறிஞர்கள் கூடி விவாதித்தால் ஐந்து விதமான கருத்துகள் ஏற்படும் என்பார்கள். ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை உடனடியாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகக் கள்ளப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் அனைத்தையுமே மோடி அரசு இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று பொருள்பட ஒரு பேச்சு உலவுகிறது. அது சரியல்ல.
திடீர் நடவடிக்கை அல்ல
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கறுப்புப் பணம் தொடர்பான விவாதம் பெரிதான சூழலில், இதுகுறித்து ஆராய நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான குழு 2011-ல் நியமிக்கப்பட்டது. மோடி அரசு பொறுப்பேற்றதுமே இக்குழுவின் அறிக்கையைப் பரிசீலித்தது. கள்ளப் பொருளாதாரத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த வங்கிச் சேவையின் கீழ் அனைவரையும் கொண்டுவருவது முக்கியம் என்ற முடிவுக்கு அது வந்தது. இது நீண்ட காலமாகப் பேசப்பட்டுவந்த ஒன்று. அதாவது, அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, வருமானவரிக் கணக்கு உள்ளிட்டவற்றை ஒன்றோடு ஒன்று பிணைப்பதும் கூடுமான வரை பணமில்லாப் பொருளாதாரச் செயல்பாட்டை ஊக்குவிப்பதும். இதையும் அடிப்படையாகக் கொண்டே மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஆதார் திட்டம், அனைவருக்குமான வங்கிச் சேவைத் திட்டம் உள்ளிட்டவை அமலாக்கப்பட்டன. எனினும், போதிய தீவிரத்தோடு இவை செயல்படுத்தப்படவில்லை.
மோடி அரசு இதில் தீவிரமான கவனம் செலுத்தியது. அதன்படி, ‘ஆதார் திட்டம்’ முழு வீச்சில் செயல்படுத்தப்படலானது. வங்கிகளில் கணக்கு இல்லாதவர்களுக்குக் கணக்கு தொடங்கும் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டு, ‘ஜன் தன் திட்ட’மாக முழு மூச்சில் செயல்படுத்தப்பட்டு, 25 கோடிக்கும் அதிகமான சேமிப்புக் கணக்குகள் இதன் கீழ் தொடங்கப்பட்டன. இந்தக் கணக்குத் தொடங்கியவர்களுக்கு ‘ரூபாய் கார்டு’ என்ற பண அட்டையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, வங்கிக் கணக்கு எண், ஆதார் எண், செல்பேசி எண் மூன்றும் இணைக்கப்பட்டு கிராமப்புற - நகர்ப்புற அரசு வேலைவுறுதித் திட்டம், ஓய்வூதியம், சமையல் எரிவாயு மானியம் போன்றவற்றை நேரடியாகப் பயனாளிகள் கணக்கில் சேர்க்கும் ‘ஜாம் திட்டம்’ அமல்படுத்தப்பட்டது. இதேபோல, வருமானவரி செலுத்துவோரின் கணக்கு எண் (பான்), ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் மூன்றும் இணைக்கப்பட்டன.
கள்ளப் பொருளாதாரத்தின் கை ஓங்கிய முக்கியமான துறையான ரியல் எஸ்டேட் துறையைச் சுத்திகரிக்க, ‘ரியல் எஸ்டேட் ஒழுங்காற்று மசோதா’ கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதேபோல, கறுப்புப் பணம் பெருமளவில் பதுக்கப்படும் இன்னொரு வடிவமான தங்க விற்பனையைச் சுத்திகரிக்க ‘ரூ.2 லட்சம் மதிப்புக்கு மேல் வாங்கப்படும் தங்க நகைகள் மீது 1% உற்பத்தி வரி விதிக்கும் நடவடிக்கை’ அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. தங்க நகை வியாபாரிகள், நகை உற்பத்தியாளர்களின் கடும் எதிர்ப்பு, கிளர்ச்சிகளின் விளைவாக இம்முடிவு திரும்பப் பெறப்பட்டாலும் மீண்டும் வேறு வடிவில் இது தொடர்பிலான நடவடிக்கை நீளும் என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே அறிவித்து, சிறு அபராதத்துடன் வரி செலுத்தும் திட்டம் இந்த ஆண்டின் மத்தியப் பகுதியில் அறிவிக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பின்னரே, ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானது.
கறுப்புப் பணம் மட்டுமல்லாது, எல்லைக்கு அப்பாலிருந்து அச்சடிக்கப்பட்டு தீவிரவாதிகளுக்காக அனுப்பப்படும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க இந்நடவடிக்கை உதவும். மேலும், கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதத் தொழில்களின் ரத்த நாளம் கறுப்புப் பணம் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிடப்பில் இருந்த முடிவு
புழக்கத்திலிருக்கும் ரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டு புதிய நோட்டுகளைக் கொண்டுவர வேண்டிய நடைமுறை 2011 முதலே அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருந்தது. மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் இதுபற்றிய விவாதம் மீண்டும் நடந்தது. இந்த ஆண்டு மே மாதம் மோடி இதற்கு ஒப்புதல் தந்ததும் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான நடைமுறைகள் ஒவ்வொன்றாகத் தொடங்கின.
புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகளில் இருந்ததைப் போன்ற பாதுகாப்பு அம்சங்கள், மெஜந்தா நிறத்தில் அச்சிடப்பட்டுள்ள புதிய ரூ.2,000 நோட்டிலும் இடம் பெற்றுள்ளன. இவை மூன்று வகைப்படும். முதல் வகை, வெறுங்கண்ணால் பார்த்தாலே தெரியும். இரண்டாவது வகை கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய இயந்திரங்களின் உதவியால் பார்க்கும்படி இருக்கும். மூன்றாவது வகை அம்சங்கள் வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள பெரிய ஸ்கேன் இயந்திரங்களில் மட்டுமே தெரியும். முன்னதாக மேலதிகப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் பரிசீலனையில் இருந்தது. எனினும், இம்முறை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அப்படிச் செய்தால், மேலும் பல மாதங்கள் இந்நடவடிக்கை தள்ளிப்போகும் என்பதே காரணம்.
அரசுக்கு எதிர்பாராத லாபம்!
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கும்போதெல்லாம், கறுப்புப் பணமாகப் பதுக்கியவர்கள் அவற்றில் கணிசமான பங்கை அரசின் கருவூலத்துக்குக் கொண்டுவர மாட்டார்கள்; எரித்துவிடுவார்கள் அல்லது வேறு வகையில் அழித்துவிடுவார்கள். இது அரசுக்கு ‘வரவு’ஆகிவிடும். 1978-ல் சாமானிய மக்களிடையே அதிகம் புழங்காத உயர் முகமதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தபோது, 25% நோட்டுகள் அரசிடம் திரும்பி வரவில்லை. இந்த முறையும் அப்படி 25% நோட்டுகள் அரசுக்குத் திரும்பி வரவில்லை என்றால், அதன் ரொக்க மதிப்பு மட்டும் ரூ.2.5 லட்சம் கோடியாக இருக்கும் என்கிறார்கள். திரும்பாத நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அரசுக்கான வரவு மேலும் அதிகரிக்கும்.
பொதுவாக, ரூபாய் நோட்டைப் புழக்கத்துக்கு விடும் ரிசர்வ் வங்கி, ‘அந்தப் பணத்தின் மதிப்புக்கு நிதிப் பொறுப்பை ஏற்பதாக’ உறுதிமொழி அளிக்கிறது. இப்போது அந்தப் பொறுப்பு குறைகிறது. இப்படிக் குறையும் பொறுப்பானது, மத்திய அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் ‘வரவு’ ஆகச் சேர்க்கப்படும். இந்த மதிப்புக்கு வரக்கூடிய காலகட்டத்தில் செலவுகளைக் கூடுதலாக அரசு மேற்கொள்ளலாம். புதிய திட்டங்களைத் தீட்டலாம்!
- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT