Published : 04 Nov 2022 06:49 AM
Last Updated : 04 Nov 2022 06:49 AM
சமீபத்தில் நடந்துமுடிந்துள்ள பொறியியல் கல்விக் கலந்தாய்வில் இரண்டு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டுவரை அரசுக் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துவந்த மாணவர்களின் கவனம், இந்த ஆண்டு தனியார் கல்லூரிகளின் பக்கம் திரும்பியுள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தனியார் கல்லூரிகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதை அலட்சியமாகக் கடந்துவிட முடியாது. இந்த நிலைமைக்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டும். தவறினால் எல்லோருக்கும் சம வாய்ப்பு என்ற சமூகநீதி நோக்கம் தோற்றுவிடும். இது தனியார் - அரசுக் கல்லூரிகளுக்கான ஓட்டப்பந்தயமல்ல. நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்கவிருக்கும் இளம் பொறியாளர்களை நாம் எப்படி உருவாக்க வேண்டும், அவர்கள் எப்படிப்பட்ட சூழல்களில் பயில வேண்டும் என்பதற்கான வரைமுறைகளை நிர்ணயிக்கும் ஓர் ஆரோக்கியமான முயற்சிதான்.
தேசியக் கல்விக் கொள்கை: அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அரசு நிதியுதவிபெறும் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. நம் நாட்டில் தற்போது தேசியக் கல்விக் கொள்கை - 2020 நடைமுறையில் உள்ளது. கல்விக் கொள்கை-1986இல் கல்லூரிகளுக்குச் சுயாட்சி வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், பேராசிரியர் ஞானம் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு 1990இல் யுஜிசிக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கை உயிரோட்டமான மூன்று அம்சங்களின் பின்னணியில் அமைந்திருந்தது. ஒன்று, புதுமையான கல்வி - மேம்பட்ட ஆராய்ச்சி போன்ற நிலைகளில் சாதிக்க கல்வி நிலையங்களுக்குச் சுதந்திரம் கொடுத்தல்; இரண்டு, அதிகார, அரசியல் அழுத்தங்கள் வராத வண்ணம் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்; மூன்றாவது அம்சத்தை பின்னால் பார்க்கலாம்.
சுயாட்சிக் கல்வி நிலையங்கள்: இந்த அறிக்கையைப் பின்பற்றி அரசுக் கல்லூரிகளுக்கு 1990களில் சுயாட்சி அளிக்கப்பட்டது. அடுத்த நிலையில் தனியார் நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. தற்போது இந்திய அளவில் சுமார் 871 கல்லூரிகள் (தனியார் 689, அரசு 182) சுயாட்சி பெற்றுள்ளன. யுஜிசி - அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) அளித்த பரிந்துரைகளின்படி சுயாட்சிக் கல்லூரிகளின் நிர்வாகத்தை வழிநடத்த ஒவ்வொரு கல்லூரிக்கும் ஆட்சிக் குழு வேண்டும். அந்தக் குழுவின் தலைவராக கல்வி, தொழில் சார்ந்தவர்கள் மட்டுமே அமர்த்தப்பட வேண்டும். கல்லூரியின் முதல்வர், இயக்குநர் அக்குழுவின் செயலர் பொறுப்பை ஏற்க வேண்டும்.
சுயாட்சியின் உயர்நிலை: கல்வி நிலையங்களுக்குச் சுயாட்சி வேண்டும் என்பது கல்விக் கொள்கை - 2020இன் முக்கியப் பரிந்துரைகளில் ஒன்று. அது முழுமையானதாகவும் இருக்க வேண்டும். அதாவது, கல்விசார் (academic), நிர்வாகம் (administrative), நிதி (financial), மற்றும் மேலாண்மை (managerial) என்று வகைப்படுத்தப்பட்ட சுயாட்சிதான் கல்வி நிலையங்களை அடுத்த உயர்நிலைக்குக் கொண்டுசெல்லும் என்று புதிய கல்விக் கொள்கை நம்புகிறது.
சுதந்திரம் ஈட்டும் பரிசுகள்: நம் நாட்டில் தனியார் கல்வி நிலையங்கள் கடந்த 30 ஆண்டுகளாக ஊக்கப்படுத்தப்படுகின்றன. ஒரு கல்வி நிலையத்தின் வெற்றி அதன் சுதந்திரத்தின் எல்லையைச் சார்ந்தது. உலக அளவில் கோலோச்சுகின்ற தனியார் பல்கலைக்கழகங்கள் இதை உறுதிசெய்கின்றன. 400 ஆண்டுகளை நெருங்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகம், அதிக எண்ணிக்கையிலான நோபல் பரிசுகளை (161) ஈட்டியுள்ளது. தனியார் கல்லூரிகள் இயல்பாகவே சுதந்திரம் பெற்றுள்ளதால் இப்படிப்பட்ட சிகரங்களைத் தொடுகின்றன.
பெயரளவில் சுயாட்சி: இந்தியாவில் அரசுக் கல்லூரிகளுக்குச் சுயாட்சி அளித்த பிறகும்கூட அளவிடக்கூடிய வளர்ச்சியை அவை எட்டவில்லை. கொள்கையளவில் சுயாட்சி வழங்கப்பட்டாலும், அதன் கடிவாளம் அதிகாரிகள் கையில்தான் இருந்தது. கல்வி நிலையங்களுக்கு நிதி உதவி - பல அங்கீகாரங்களைப் பெற சுயாட்சி என்கின்ற போர்வை அவசியமாகிறது என்பதால், அதிகாரபூர்வமாக இதை நீக்கிவிட முடியாது. திருத்தப்பட்ட ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பட்டியலைச் சமர்ப்பிப்பது, நிதிபெறுவது என்பது அவர்களின் உச்சநிலைக் கலை. சுயாட்சி என்கிற இயங்கமைப்பு, கோப்புகளில் மட்டும் ஒளிவீசிக் கொண்டிருக்கும். செயலளவில் முடியாட்சி கட்டவிழ்க்கப்பட்டிருக்கிறது.
மேம்படுத்தப்பட்ட தணிக்கை: ஞானம் அறிக்கையின் மூன்றாவது அம்சம் மிகச் சிறப்பானது. ஒரு நிறுவனத்துக்குச் சுதந்திரம் கொடுக்கும்போது அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட வேண்டும். சுதந்திரம் எந்த அளவுக்கு நீளுகிறதோ அதே அளவில் தணிக்கைகளும் நுழைய வேண்டும். கல்விசார், நிர்வாகம், நிதி, மேலாண்மை எனத் தணிக்கையை வகைப்படுத்திக் கண்காணிக்கலாமே. ஆசிரியர்களின் செயல்திறனை அனைத்துக் கோணங்களிலும் அளப்பதற்கான வழிமுறைகளை யுஜிசி, அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை வரையறுத்துக் கொடுத்துள்ளன. சமீபத்தில் நியூயார்க் பல்கலைக்கழகம் 84 வயதான பேராசிரியர் ஜோன்ஸ் என்பவரை அதிருப்தியின் காரணமாகப் பணிநீக்கம் செய்துள்ளது. காரணம் அதிகாரத் தோரணை. அதிகாரத் தோரணையைக் காட்டினால் வீழ்சியே விளையும். குறைகளும் குற்றங்களும் உடனுக்குடன் வேரறுக்கப்பட்டு கல்லூரிகள் சீராக வளர வேண்டிய சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதுதான் சுயாட்சியின் உன்னத நிலை.
கல்வி நிறுவனங்களின் தரவரிசை: தனியார் கல்வி நிலையங்களில் பெரும்பாலானவற்றால் ஊதியக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. இருந்தபோதும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் கல்லூரிகள் தரத்தின் பெரும்பாலான அலகுகளைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வருகின்றன. தேசிய நிறுவனத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) இந்தக் கல்வியாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை ஜூலை மாதம் வெளியிட்டது. கடந்த காலத்தில் அரசுக் கல்வி நிறுவனங்கள் உயர்ந்த தரத்தைப் பிடித்திருந்தன. நிலைமையை உணர்ந்த தனியார் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டன. கால ஓட்டத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. விழிப்புள்ள மாணவர்கள் தரவரிசையில் உயர்ந்த இடங்களைப் பிடித்துள்ள கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது இயல்பான மாற்றமே. அனைத்துக் கல்லூரிகளுக்கும் தன்னாட்சி என்கிற யுஜிசியின் சமீபத்திய முடிவு வரவேற்கத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் நிபுணர்களின் அறிவுரைகளை உள்வாங்கி தேசியக் கல்விக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் பரிந்துரைகளை மதித்து, அவை செயல்படத் தகுந்த சூழலை உருவாக்கிப் பேணிப் பாதுகாத்தால் அரசுக் கல்வி நிறுவனங்கள் உலகளாவிய அங்கீகாரத்தை ஈட்டி வளம் சேர்க்கும். - சி.கோதண்டராமன் புதுவை பொறியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வர், தொடர்புக்கு: skramane@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT