Published : 15 Nov 2016 09:03 AM
Last Updated : 15 Nov 2016 09:03 AM
காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர்
நாதுராம் விநாயக் கோட்சேவும் நாராயண தத்தாத்ரேய ஆப்தேவும் 1949 நவம்பர் 15 காலை 7.52 மணிக்கு தூக்கு மேடைக்குக் அழைத்துச்செல்லப்பட்டனர். 8 மணிக்கு இருவரும் அந்தரத்தில் தொங்கினர். அரை மணி நேரம். மருத்துவர் அவர்களது மரணத்தை உறுதிப்படுத்தினார். உடனே, அம்பாலா சிறை வளாகத்தில் அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. சாம்பல் சாகர் நதியில் சந்தடி இல்லாமல் கலக்கப்பட்டது.
தூக்கு மேடைக்குச் சென்றபோது, கோட்சே ‘அகண்ட பாரத்’ (ஒன்றுபட்ட இந்தியா) எனக் கோஷமிட… ‘அமர் ரஹே’ (எப்போதும் நிலைத் திருக்கும்) என ஆப்தே பதில் கோஷமிட்டபடி சென்றார் என்னும் செய்தி, அடுத்த நாள் (நவ.16) பத்திரிகையில் வந்தது. இந்து முறைப் படி சடங்குகள் செய்யப்படவில்லை. அவர்கள் உடலைச் சிறையில் எரித்தது தவறு என எழுதப் பட்ட துண்டுப் பிரசுரங்களும் அப்போது வெளி வந்தன. கோட்சே தூக்கிலிடப்பட்ட அன்று, அம்பாலா சிறைக்குள் இரண்டு தென்னிந்தியர்கள் அத்துமீறி நுழைந்தனர் என்ற செய்தியும் அப்போது பேசப்பட்டது.
ஒன்பது பேர்
கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நாதுராம் கோட்சே, (38 வயது) நாராயண தத்தாத்ரேய ஆப்தே (34), விஷ்ணு ராமகிருஷ்ண கர்கரே (38), திகம்பர் ராமச்சந்திர பட்கே (37), கோபால கோட்சே (27) மதன்லால் பாவா (20), ஷங்கர் கிஸ்தையா (20), தத்தாத்ரேய சதாசிவ பராசுரே (47), விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆகிய ஒன்பது பேர். இவர்களில் இருவருக்குத் தூக்கு, மூன்று பேருக்கு ஆயுள். ஒருவர் அப்ரூவர் ஆனதால் விடுதலை. மூவரின் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை. இவர்களில் கோட்சே மட்டும் கடைசிவரை தான் செய்தது சரி என வாதித்தார்.
மகாராஷ்டிரம் மாவல் குன்றுப் பகுதியில் வாழ்ந்த சித்பவான் பிராமணர்கள் தேசப் பற்றுடையவர்கள், உறுதியானவர்கள் என்பதற்கு வரலாற்றில் மட்டுமல்ல நாட்டார் வழக்காறுகளிலும் சான்றுகள் உள்ளன என்கின்றனர். அப்படிப்பட்ட மரபில் வந்தவர்கள்தாம் கோட்சேவும் ஆப்தேவும்!
கோட்சேயின் லட்சியம்
நாதுராம் என்பதற்கு மராட்டியில் மூக்குத்தி என்பது பொருள். கோட்சே சிறுவயதில் மூக்குத்தி அணிந்திருந்தார். அதே பெயரால் அழைக்கப்பட்டார். இதனால், அவரது ஆரம்பகாலப் பெயர் (ராமச்சந்திரா) மறைந்து, நாதுராம் நிரந்தரமானது. தந்தை விநாயக் வாமன்ராவ் கோட்சே. தாய் லட்சுமி. தந்தை தபால் துறைப் பணியாளர். தென் மகாராஷ்டிரம் புணே மாவட்டம் பாரமதி பகுதி. கோட்சே புணேயில் ஆங்கிலம் வழிக் கல்வி படித்தவர். சிறுவயதில் சம்ஸ்கிருதம் வழி வேதம், கீதை படிப்பு.
இவர், துறைமுக வேலை, பழ வியாபாரம், டயர் பழுது நீக்கல், தையல், ஓட்டுநர், பத்திரிகை ஆசிரியர் (அக்ரானி - மராட்டி) எனப் பல வேலைகள் பார்த்தவர். கோட்சேக்கு ரத்தத்தைக் கண்டால் ஆகாது. காந்தியை மிகவும் நேசித்தவர். பெண் தொடர்பைத் தவிர்த்தவர். காப்பி, இனிப்பு விரும்பி. காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு சிறைக்குப் போனவர்.
‘லட்சியம் சரியானதாக இருந்தால், அதை அடைய எந்த வழியையும் பின்பற்றலாம்’ என்னும் மாக்கியவல்லியின் கொள்கையில் பிடிப்புடையவர் கோட்சே. ‘தர்மத்தை நிலைநாட்ட அதர்மத்தைப் பின்பற்றலாம்’ என்னும் இதிகாச கோட்பாடும் பிடிக்கும்.
கோட்சே நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்தபோது, “காந்தி சுயநலம் இல்லாதவர். நாட்டுக்காகத் துன்பங்களை ஏற்றவர். சொந்த ஆதாயத்துக்காக எதுவும் செய்யவில்லை. மக்கள் மனதில் விழிப்புணர்வைக் கொண்டுவந்தவர்” என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். காந்தியைச் சுடும்போதுகூட மண்டியிட்டு வணங்கிவிட்டுத்தான் சுட்டார் என்கின்றன குறிப்புகள். இப்படி எல்லாம் இருந்தாலும், கோட்சே தன் குற்றத்தைச் சரி என்றே வாதிட்டார். கடைசி வரை தன் தவறை அவர் உணரவில்லை.
காந்தியின் கொலைக் குற்றத்துக்காகத் தூக்கில் தொங்கிய இன்னொருவர் தத்தாத்ரேய நாராயண ஆப்தே. இவரும் மகாராஷ்டிரர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அகமது நகர் அமெரிக்கன் மிஷன் பள்ளியின் கணித ஆசிரியர். 1934 முதல் கோட்சேவிடம் பழக்கம்.
இவரைப் பொதுவாக பண்டிட்ஜீ என அழைத்தனர். நல்ல முகக்களை; சரளமான ஆங்கிலப் பேச்சு. மேற்கத்திய உடை எல்லாம் இவரது மூலதனம். சோதிட நம்பிக்கை உள்ளவர். முதல் மனைவியை விவாகரத்து செய்தவர். பெண் பித்தர் என்றும் டெல்லி போலீஸார் இவரைப் பெண்ணைக் காட்டித்தான் பிடித்தனர் என்றும் குறிப்புகள் உள்ளன. இவருக்குச் சாக விருப்பமில்லை. கருணை மனு கொடுத்தார். அது நிராகரிக்கப்பட்டது.
மற்றவர்களின் பின்னணி
ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே (1919 - 2006) நாதுராம் கோட்சேயின் தம்பி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னர்தான் காந்தியைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டார். 1964-ல் விடுதலை பெற்ற பின் புணே யில் 42 ஆண்டுகள் வாழ்ந்தார். காந்தி கொலை தொடர்பானவர்களில் கடைசியாக இறந்தவர்.
கோபால் கோட்சே, காந்தியின் கொலை தொடர்பாக ஆங்கிலத்திலும் மராட்டியிலும் 9 புத்தகங்கள் எழுதியுள்ளார். காந்தி குண்டு பட்டு வீழ்ந்தபோது ‘ஹே ராம்’ என்று முணுமுணுத்தார் என்பதை அழுத்தமாக மறுத்துப் பேசியவர். அவர் விடுதலை பெற்ற வருடத்தில் நடந்த விநாயகர் விசர்ஜனக் கூட்டத்தில் (1965) இதையே விரிவாகச் சொன்னார். கோபால் கோட்சேயின் மனைவி, கணவரின் கருத்துக்கு மாறுபடாதவர். காந்தி பற்றிய அட்டன்பரோ திரைப்படம் ஆதாரபூர்வமானதல்ல என்றார் இவர். கோபால் கோட்சேயின் ‘Why I Assassinated Mahatma Gandhi’ என்ற நூல் தமிழில் (நான் ஏன் மகாத்மா காந்தியைக் கொலை செய்தேன்) மொழிபெயர்க்கப்பட்டு, இலவசமாகத் தனிச்சுற்றுக்குச் சென்றது என்பது பலர் அறியாதது.
ஆயுள் தண்டனை பெற்ற ராமகிருஷ்ண கர்கரேயும் மகாராஷ்டிரர்தான். இளமையில், வறுமையில் வாடியவர். சின்னச் சின்ன வேலைகள் பார்த்தவர். நவகாளி படுகொலையால் மிகவும் பாதிக்கப்பட்டவர். சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின் 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.
ஆயுள் தண்டனை பெற்ற மதன்லால் பாவா பஞ்சாபிக்காரர். திகம்பர ராமச்சந்திர பட்கே அப்ரூவராக மாறியதால் விடுதலை பெற்றார். இவர் கோட்சேயின் ஆட்களால் கொல்லப்படுவார் என்ற வதந்தியால் பயந்து, மும்பை காவலர் குடியிருப்பிலேயே வாழ்ந்தார். ஷங்கர் சிஸ்தையா, வி.டி.சாவர்க்கர், தத்தாத்ரேய பராசுரே மூவரும் விடுதலையாயினர்.
முதல் கொலை முயற்சி
கோட்சே பற்றிய வலைதளம், அவர் காந்தியைக் கொல்ல ஐந்து முறை முயற்சி செய்ததாகவும் ஆறாவது முறை வெற்றி கிடைத்தது என்றும் சொல்கிறது. இது போன்ற தவறான தகவல்கள் மேலும் உள்ளன. காந்தியைக் கொல்ல நடந்த முதல் முயற்சி பிர்லா மாளிகையில் நடந்தது.
ஜனவரி 20-ம் தேதி (1948) பிர்லா மாளிகை யில் மதன்லால் கை எறி குண்டை வீசியபோது குறி தப்பியது. அவரை சுலோசனா என்ற பெண் அடையா ளம் கண்டார். அவருடன் வந்த கோட்சே, ஆப்தே, கர்கரே ஆகியோர் தப்பிவிட்டனர். டெல்லி போலீ ஸார் மதன்லாலை முரட்டுத்தனமாக விசாரித்த போது, காந்திக்கு எதிராக நடந்த சதி கசிய ஆரம்பித்தது. பிர்லா மந்திரில் காந்திக்கு எதிராக எழுப்பப்பட்ட கோஷம் வெறுமையானதல்ல என்பதும் தெரிய ஆரம்பித்தது.
போலீஸார் மதன்லாலின் தலை, உடம்புப் பகுதிகளைக் கோணிப்பையால் மறைத்து, கண்கள் மட்டும் தெரியும்படி துவாரமிட்டு முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். அவர் சொன்ன பல விவரங்களை போலீஸார் விசாரித்திருந்தால், காந்தியின் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும் என்ற கருத்தும் அப்போது சொல்லப்பட்டது.
முன்னூறு ரூபாய்க்கு பிஸ்டல்
இதற்கிடையில், கோட்சே புணே சென்றுவிட்டார். தம்பி கோபாலிடம் ரூ.200 கொடுத்து ரிவால்வர் ஒன்று வாங்கும்படி அனுப்பினார். மறுபடியும் கோட்சே டெல்லி வந்தார். தம்பியால் ரிவால்வர் வாங்க முடியவில்லை.
இரண்டாவது முயற்சியில் ஈடுபட்ட கோட்சே, ஆப்தேவையும், கர்கரேவையும் உதவிக்கு அழைத்துக்கொண்டார். குவாலியர் கங்காதரன் என்பவரிடமிருந்து ரூ.300 கொடுத்து கறுப்பு நிற பெரட்டா பிஸ்டல் ஒன்றை வாங்கிக்கொண்டார். ஜனவரி 29-ல் டெல்லிக்கு வந்தார்.
பிர்லா மாளிகையின் பின்புறமுள்ள காட்டுப் பகுதியில், பிஸ்டலைக் கையாளும் முறையைப் பழகிக்கொண்டார். மொத்தம் 20 குண்டுகள் இருந்தன. சுட்டுப் பழக 13 குண்டுகள் பயன்பட்டன. மீதமிருந்த 7 குண்டுகளில் மூன்று காந்திக்குப் போதும் என நம்பினார்.
இரண்டு யோசனைகள்
காந்தியைக் கொலை செய்யும் திட்டம் விவாதிக்கப்பட்டது. நண்பர்கள் இரண்டு வழிகளைச் சொன்னார்கள். பர்தா அணிந்த இளம் பெண்ணாக மாறுவேடத்தில் செல்லலாம். பெரிய கேமராவில் பிஸ்டலை மறைத்துக்கொண்டு செல்லலாம். இந்த இரண்டு வழிகளையும் கோட்சே நிராகரித்துவிட்டார்.
காந்தியின் முன்னே நின்று சுட்டுவிட்டு, போலீ ஸாரிடம் அகப்படுவதே சரியென அவர் கூறினார். அப்போது, டெல்லியில் ஃபேஷனாக இருந்த ராணுவ மாடல் உடையை அணிந்துகொண்டார், பிஸ்டலை இடுப்பில் செருகிக்கொண்டார்.
காந்தியின் பாதுகாப்பு அதிகாரி டெல்லி போக்கு வரத்து நெரிசலைச் சரிசெய்யச் சென்றுவிட்டார். அது கோட்சேக்கு வசதியாக இருந்தது. தடையின்றி பிர்லா மாளிகைக்குள் நுழைந்துவிட்டார். மாலை 5.20-க்கு அவரது பிஸ்டல் வெடித்தது. 6 மணிக்கு அகில இந்திய வானொலி காந்தியின் இறப்பை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
- அ.கா.பெருமாள்,
நாட்டுப்புறவியலாளர், ‘சடங்கில் கரைந்த கலைகள்', ‘சிவாலய ஓட்டம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com
காந்தி கொலைக் குற்றவாளி கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் நவம்பர் 15
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT