Published : 29 Nov 2016 07:50 AM
Last Updated : 29 Nov 2016 07:50 AM

உலக நாடுகளின் பார்வையாளர் தேசம் - பாலஸ்தீனம்!

நவம்பர் 29-ம் தேதியை ‘பாலஸ்தீன மக்களுக்கு உலக ஆதரவு தினமாக’ ஐ.நா. சபை அறிவித்து அதன்படியே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. மன்னிக்கவும்; அனுசரிக்கப்படுகிறது.

“சரி.. ஏதோ நடக்கப் போகிறது... ஐ.நா.வே சொல்லி விட்டது” என்று பாலஸ்தீனிய மக்களில் சிலருக்கேனும் நம்பிக்கை தோன்றியிருக்கும்.

பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபை ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது. 1947 மே மாதம் இக்குழு, தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி, யூத நாடு - அரபு நாடு என்று இரண்டாகப் பிரித்து, தனி பாலஸ்தீனம் அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. இது செயல்படுத்தப்பட்டு இருந்தால், 1948, அக்டோபர் 1-ல் இரண்டு நாடுகளும் உருவாகி இருக்கும். சில குறைகள் இருந்தாலும் யூதர் தரப்பு, இந்த யோசனையை ஏற்றுக் கொண்டது. தங்கள் நிலம் பங்கு போடப் படுவதை, அரபு தரப்பு கடுமையாக எதிர்த்தது.

‘பாலஸ்தீனப் பிரிவினைத் திட்டம்’ ஐ.நா. பொதுச்சபையில் முன் வைக்கப்பட்டது. (தீர்மானம் 181) சபைக்கு வந்து வாக்களிப் பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருந்தால் மட்டுமே தீர்மானம் வெற்றி பெறும். 1947 நவம்பர் 26 அன்றே தீர்மானத் தின் மீது வாக்கெடுப்பு நடந்து இருக்க வேண்டும். ஆனால் மூன்றில் இரண்டு பங்கு பலம் கிடைப்பது அரிது என்று கருதி, வேண்டும் என்றே மூன்று நாட்களுக்கு வாக்கெடுப்பு தள்ளிப் போடப்பட்டது.

“எங்களை விலைக்கு வாங்க முயற்சி நடக்கிறது” என்று ஜவஹர்லால் நேரு, காட்டமாகக் கூறியதாகவும், “வாக்கெடுப்பில் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும், இல்லையேல் உயிருக்கே ஆபத்து” என்று, தான் மிரட்டப்பட்டதாக, அப்போது ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதியாக இருந்த, விஜயலட்சுமி பண்டிட் (நேருவின் சகோதரி), வெளிப்படையாக அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

1947, நவம்பர் 29-ம் தேதி பிரிவினைத் தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. 46 ஓட்டுகள் பதிவாகின. தீர்மானத்துக்கு ஆதரவாக 33 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்து, 3-ல் 2 பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரித்தன. இந்தியா, கியூபா, பாகிஸ்தான், அரபு நாடுகள் எதிர்த்தன. இங்கிலாந்து, சீனா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தன. (வாக் களிக்காமல் விலகி இருப்பதற்காக, சீனாவுக்கு மிகப் பெரிய அளவில் நிதியுதவி உத்தரவாதம் வழங்கப்பட்டதாகப் புகார் உண்டு).

இதன் பிறகும் பிரச்சினை நீண்டு கொண்டேதான் இருந்தது. இரு தரப்புக்கும் இடையே சண்டைகளும் நடந்த வண்ணம் இருந்தன. ஐ.நா.வும் தீர்மானங்களை நிறை வேற்றிய வண்ணம் இருந்தது. 1967 நவம்பர் 22-ல், ஐ.நா. தனது 1382 ஆவது கூட்டத்தில், இப்பிரச்சினை குறித்து தீர்மானம் 242 மூலம், மத்திய கிழக்கின் விபரீத சூழலைப் பற்றிய தனது தொடர்ந்த அக்கறை, கவலையைத் தெரியப்படுத்தியது.

ஊஹூம். கள நிலவரம் மாறவே இல்லை. உண்மையில், நிலைமை மேலும் கலவரம் ஆனது. 1973 அக்டோபர் 22-ல் ஒரு தீர்மானம் (எண் 338) நிறைவேற்றப்பட்டது. “உடனடி சண்டை நிறுத்தம், தீர்மானம் 242 (1947)-ன் அம்சங்களை நிறைவேற்ற நடவடிக்கைகள்...” ஆகியவற்றை இத்தீர்மானம் வலியுறுத்தியது.

1978 மார்ச் 19-ல் மற்றொரு தீர்மானம் (எண் 425) லெபனான் நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.

இத்தீர்மானம் செயல்படுத்தப்பட, ஐ.நா. பொதுக் காரியதரிசி, களத்துக்கு சென்று உதவ, உறுதி செய்ய கவுன்சில் கேட்டுக்கொண்டது. ஆனால் ஐ.நா. சபை அப்படித்தான் நம்பியது; இன்னமும் நம்பிக்கொண்டு இருக்கிறது. ஆக்கிரமிப் பாளர்களுக்கு எதிராக நெருக்கடி ஏற்படுத் தப்பட வேண்டும்; அவர்களை அமைதியை நோக்கி செலுத்த வேண்டும்; கட்டாயப்படுத்த வேண்டும். இந்தத் திசையில் இதுவரையில் எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில்தான்,1988 நவம்பர் 15 அன்று, தானாக சுதந்திரம் அறிவித்துக் கொண்டது பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ.). அரபு நாடுகளுக்கு வெளியே, இந்த அமைப்பை அங்கீகரித்த முதல் நாடு இந்தியா.

ஐ.நா.வின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு, 2011-ல் பாலஸ்தீனம் விண்ணப்பித்தது. இதற்கு பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் தேவை. இந்தக் கோரிக்கையை கவுன்சில் நிராகரித்தது. உறுப்பினர் ஆவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இதற்கு அடுத்த நிலைக்கு பாலஸ்தீனம் முயன்றது.

ஐ.நா. மன்றத்தில் ஒரு நாடு அல்லது ஒரு சர்வதேச நிறுவனம், ‘பார்வையாளர் அந்தஸ்து’ பெற முடியும். இதற்கு பொதுச் சபை ஒப்புதல் போதும். 2012 நவம்பர் 29-ல் ‘உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அமைப்பு’ என்று அங்கீகரித்து. ஐ.நா. பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றி பி.எல்.ஓ.வைச் சேர்த்துக் கொண்டது.

2015 செப்டம்பர் 14 அன்று, ஐ.நா. பொதுக்குழு, ‘பார்வையாளர் அமைப்பு’ என்பதில் இருந்து, ‘பார்வையாளர் நாடு’ என்று பாலஸ்தீனத்தைத் தரம் உயர்த்தியது.

பார்வையாளருக்கு என்று சில கட்டுப்பாடுகள் உள்ளன. பொதுக்குழுவில் பேசவோ, தீர்மானங்களை முன்வைக்கவோ, ஓட்டளிக்கவோ அதிகாரம் இல்லை.

நடைமுறை சார்ந்த விவகாரங்களில் (procedural activities) வாக்குரிமை உண்டு; தீர்மானங்களில், பார்வையாளராகக் கையெழுத்து இடலாம். மேலும், பார்வையாளர் தேசத்தின் கருத்துகள், ஐ.நா. மன்றத்தின் ஆவணமாகப் பதிவேறும். மற்றபடி, பார்வையாளர்தான்!

ஒரு நாட்டில் அநியாயம் அரங்கேறுகிற போது, சர்வதேச விதிமுறைகளைக் காரணம் காட்டி, பிற நாடுகள் வெறுமனே பார்த்துக் கொண்டு இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம்.

இது விஷயத்தில், பாலஸ்தீனம் ஒருபடி மேல். தனக்கு நியாயம் கேட்க முடியாமல், ஐ.நா. சபையில், தானே ஒரு பார்வையாள ராய் நின்று கொண்டு இருக்கிறது.

மற்ற உரிமைகள் எல்லாம் இருக்கட்டும். ஐ.நா.வில் பாலஸ்தீனம், ஒரு அங்கத்தினராக சேர்க்கப்படும் நாள்வரை, சர்வதேச அமைப்புகள் வடிக்கும் கண்ணீர் எல்லாம், வெறும் நீலிக் கண்ணீராகவே இருக்கும்.

சமீப காலங்களில் சற்றே பாதை விலகிப் பயணிப்பது போலத் தோன்றினாலும், இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்தின் நம்பிக்கைக்கு உரிய தோழனாக, அதன் உரிமைகளை மீட்டு எடுப்பதில் முனைந்து செயல்படும் தூதுவனாகவே இருந்து வரு கிறது. ஒரு நாட்டுடன் இணக்கம், வேறொரு நாட்டுடன் பிணக்கு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே வருகிறது.

பாலஸ்தீனப் பிரச்சினையில் நமது நிலை குறித்து 1938-ம் ஆண்டிலேயே மகாத்மா காந்தி, தெளிவாகக் குறிப்பிடுகிறார். ('தி ஹரிஜன்' தலையங்கம் - 26 நவ. 1938)

“யூதர்களுக்காக நான் இரக்கப்படு கிறேன். ஆனால் இந்த இரக்கம், நீதியின் தேவைகளை என் கண் முன்னால் மறைத்து விடாது. யூதர்களுக்கான (தனி) தேசம் என்கிற கோரிக்கை, என்னை ஈர்க்கவில்லை. பூமியின் பிற நாட்டு மக்களைப் போலவே அவர்களும், தாம் பிறந்த நாட்டையே தனது வீடாகக் கொண்டு, ஏன் சேர்ந்து வாழக் கூடாது..? (யூதர்களின் கோரிக்கை) மனித இனத்துக்கு எதிரான குற்றமாக மாறிவிடக் கூடாது.”

உலகம் உணர்ந்து கொள்ள வேண்டிய உண்மை ஒன்று உள்ளது. ‘தர்மத்துக்கு’ ஏதோ குரல் கொடுப்பதை விடவும், தர்மத்துக்காக ஏதேனும் செய்வதே பொருள் பொதிந்ததாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x