Published : 13 Nov 2016 12:50 PM
Last Updated : 13 Nov 2016 12:50 PM
அதிகபட்ச பாசாங்குத்தனம் கொண்ட நாடு அமெரிக்கா என்று அதன் சமீபத்திய அதிபர் தேர்தல் முடிவு தெளிவாக விளக்கிவிட்டது. அமெரிக்க அதிபர் பொறுப்புக்குத் தேவையான ஆகச் சிறந்த தகுதி கொண்ட வேட்பாளர் என்று ஊடகங்களாலும் அறிஞர்களாலும் கருதப்பட்ட ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன் பல கடைசி நிமிடப் பிரச்சினைகள் எழுந்தாலும் நிச்சயமாக வென்றுவிடுவார் என்று எல்லாத் தேர்தல் கணிப்புகளும் அறிவித்தன. முதல் முறையாக ஒரு பெண்மணியை அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுத்து அமெரிக்கா வரலாறு படைக்கப்போகிறது என்று பெண் சமூகம் எதிர்பார்த்துக் காத்திருந்தது.
மூன்று முறை நடந்த வேட்பாளர்களின் நேரடி விவாதத்தில் ஹிலாரியின் கைதான் ஓங்கியிருந்தது என்கிற காரணம் பெரிய விஷயமில்லை. ஹிலாரியை எதிர்த்தவர் அதிபர் பதவிக்குக் கொஞ்சமும் பொருந்தாதவர் என்பதில் விவரமுள்ள எவருக்கும் சந்தேகமில்லை.
தகர்ந்த நம்பிக்கை
குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட டொனால்டு ட்ரம்ப் அரசியல் மற்றும் ஆளுகையின் அனுபவமும் சற்றும் இல்லாதவர். ரியல் எஸ்டேட் பிசினஸில் எக்கச்சக்கப் பொருள் ஈட்டியவர். வரி ஏய்ப்பு செய்தவர்; சற்றும் நாகரிகமில்லாமல், வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளைச் சொல்பவர்; பெண்களைத் துச்சமாக நினைப்பவர்; முஸ்லிம்களையும் அமெரிக்காவில் இருக்கும் மெக்ஸிகர்களையும் அனுமதி இல்லா மல் நுழைந்த அந்நியர்களையும் நாடு கடத்த வேண்டும் என்று பேசியவர்; வெள்ளையரின் வேலை யெல்லாம் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போய் விட்டது என்று முழங்கியவர். கறுப்பர்களைத் தூஷிப் பவர்; சுற்றுச் சூழல் பாதிப்பை மறுப்பவர். இப்படிப் பட்டவரை அமெரிக்க மக்கள் நிச்சயமாகப் புறக்கணிப்பார்கள் என்று பரவலாக நம்பப்பட்டது.
ஆனால், அமெரிக்க மக்கள் எல்லோரையும் முட்டாளாக்கிவிட்டார்கள். பெருவாரியாக ட்ரம்புக்கு வாக்களித்து (289 தேர்வாளர் குழு வாக்குகள்; இலக்கு-270; ஹிலாரிக்குக் கிடைத்தது 218) அவரை அதிபர் ஸ்தானத்தில் அமர்த்திவிட்டார்கள். ஹிலாரி தோற்றுப்போனார். அது மட்டுமல்ல; அமெரிக்க காங்கிரஸின் அவை மற்றும் செனட் அவையிலும் இப்போது குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது. டொனால்டு ட்ரம்ப் அசுர பலம் கொண்டவராக இருப்பார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நியமிப்பார். பெண்களுக்குச் சாதகமான கருத்தடை தேர்வுரிமையை நிராகரிக்கச்செய்வார். ஒபாமாவின் சுகாதாரத் திட்டத்தை நிறுத்துவார். தாக்கப்படப்போவது பெண்களும் குடியேறிகளும் கறுப்பர்களும்தான்.
கற்பிதங்களின் தேசம்
ஹிலாரி பத்தரை மாற்றுத் தங்கம் இல்லைதான். அவருடைய கணவர் பில் கிளின்டன் அதிபர் பதவி வகித்த காலத்திலேயே அவர் பெண்களிடையே மதிப்பை இழந்தார். கணவரின் செக்ஸ் லீலைகள் அம்பலமானபோதும் ஹிலாரி வாய் மூடியிருந்தார். அதிபரின் மனைவி என்கிற அந்தஸ்தை இழக்க விரும்பாததே காரணம் என்று பெண்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
அவர் நம்பகத்தன்மை அற்றவர் என்ற கருத்து பல ஆண்டுகளாகச் சுற்றிவந்தது. அவர் செயலராக இருக்கையில் அரசின் ரகசியக் கோப்புகளைத் தனது சொந்த இ-மெயிலில் பதிவிறக்கம் செய்தார் என்ற குற்றச்சாட்டு, தேர்தலுக்கு முன் எஃப்பிஐயால் விடுவிக்கப்பட்டபோதும் கடைசி வரை துரத்திற்று. அவரது கிளின்டன் ஃபௌண்டேஷனுக்குக் குவித்த பணத்தைப் பற்றிய கேள்விகள் இருந்தன. ஹிலாரி திமிர் பிடித்தவர் என்றார்கள். ஆனால், அவர் ஒரு பெண் என்பதால் அவை ஊதிப் பெரிதாக்கப்பட்டன என்கிறார்கள் பெண் எழுத்தாளர்கள். 30 ஆண்டுகளாக ஹிலாரி தனியாக, புரவலர் எவரின் துணையும் இல்லாமல் தன் மீது சுமத்தப்பட்டுவரும் அவதூறுகளைச் சமாளித்துவருகிறார். அதைவிட அதிகத் தவறுகள் செய்த ஆண்கள் கண்டனத்தி லிருந்து தப்பிவிடுகிறார்கள் என்று இருபாலரும் நம்புகிறார்கள்.
அமெரிக்க சமூகம் பல விஷயங்களை மறைக்கப்பார்க்கிறது. அடிமை ஒழிப்பு சாசனம் வந்த பிறகு, நிறவெறி போய்விட்டது என்று நினைக்க ஆசைப்படுகிறது. ஒரு கறுப்பரை அதிபராகத் தேர்ந்தெடுத்ததை மிகப் பெரிய அங்கீகாரமாகப் பறைசாற்றிற்று. ஆனால், அவர் எட்டு ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையிலும் கறுப்பின மக்களுக்கு வெள்ளைப் போலீஸார் மூலம் அனுபவிக்க நேரும் கொடுமைகள் தொடர்கின்றன. எங்களுக்கும் வாழ உரிமை உண்டு, நாங்களும் அமெரிக்கர்கள் என்று கோஷங்களும் புதிய கறுப்பின அமைப்புகளும் தோன்றியிருக்கின்றன. மிக முற்போக்கான உலகின் ஆகச் சிறந்த ஜனநாயகம் என்று மார்தட்டிக்கொள்ளும் நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை 1920-ல்தான் வந்தது. அத்துடன் பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டதாக நினைக்கிறது. ஆனால், இதுவரை ஒரு பெண் அதிபராகக் கூடும் என்கிற எண்ணம் எழாமல் பார்த்துக்கொண்டது.
தவறான தேர்வா?
ஊழல் புகாரில் சிக்கியிராத ஜனநாயகப் போட்டியாளர் பெர்னீ ஸாண்டர்ஸுக்கு பதில் ஹிலாரியைக் கட்சிப் பிரமுகர்கள் முன்மொழிந்ததற்குக் காரணம், பின்னவரது குடும்பச் செல்வாக்கு தங்களுக்கு (அவர் அதிபராக வந்தால்) உதவியாக இருக்கும் என்கிற சுயநலத்தால்தான் என்று சிலர் எண்ணுகிறார்கள். ஸாண்டர்ஸ் அவருக்குப் பதில் நின்றிருந்தால் நிச்சயம் டொனால்டு ட்ரம்ப் வென்றிருக்க மாட்டார் என்று இப்போது சொல்லப்படுகிறது. ஆணாதிக்கமும் நிறவெறியும் வெள்ளை அமெரிக்கரின் ரத்தத்தில் கலந்திருக்கும் குணம் என்று இப்போது எல்லோரும் விமர்சிக்கிறார்கள்: ‘நாம் ஒப்புக்கொள்வோம் - நாம் அடிப்படையில் நிறவெறி கொண்டவர்கள்; பெண்கள் கையில் அதிகாரம் அளிக்க விரும்பாதவர்கள்; பெண்களை இரண்டாம் பட்சமாக நினைப்பவர்கள்.’
எட்டு ஆண்டுகள் ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்க அதிபரின் ஆட்சிக்குப் பிறகு, ஒரு பெண் அதிபராக வருவது என்பது அமெரிக்க சமூகத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்திருக்கும் என்கிறார் ஒரு அறிஞர்.
ஒரு விஷயத்தை ஹிலாரி கவனிக்கத் தவறிவிட்டார். அமெரிக்க வெள்ளையர் மத்தியில் சில காலமாக மிகுந்த கோபமும் நிராசையும் ஏற்பட்டிருந்தது. அவர்களது வாழ்வாதாரங்கள் சரிந்திருந்தன. வேலைவாய்ப்பு குறைந்திருந்தது. உலகமயமாக்கலின் விளைவும் தொழில்நுட்ப ஆதிக்கமும் அந்நியக் குடியேறிகள்/ நிபுணர்கள் அதிகம் சம்பாதிப்பதும் மிகுந்த கிளர்ச்சியை ஏற்படுத்தின. உழைக்கும் வெள்ளை வர்க்கத்தினரின் கோபத்தை, ட்ரம்ப் மிகச் சரியாகப் புரிந்துகொண்டார். ஹிலாரி தனது பரப்புரையில் ட்ரம்ப் பெண் விரோதி, இனவாதி என்று அதிகம் சாடினாரே தவிர, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லவில்லை. ட்ரம்ப் அறிஞரா, திறமை உள்ளவரா, ஆபத்தானவரா என்று மக்கள் பார்க்கவில்லை. சுற்றுச்சூழல், வெளியுறவுக் கொள்கை, பெண் உரிமை, இனவாதம் எக்கேடுகெட்டுப் போகட்டும். ஒரு ஆண் - அவர்களது மொழியைப் பேசினார். அவர்களது உள்ளார்ந்த வெறுப்பைப் பிரதிபலித்தார். அவரே இப்போது அவர்களின் அதிபர்! அதிபராக ஒரு பெண்ணா? ஆதாம் காலம் தொட்டுத் தெரியுமே, பெண்ணை நம்பக் கூடாது!
- வாஸந்தி, எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT