Last Updated : 21 Nov, 2016 10:01 AM

 

Published : 21 Nov 2016 10:01 AM
Last Updated : 21 Nov 2016 10:01 AM

தடையற்ற சுதந்திரங்கள்

சான்பிரான்சிஸ்கோ நகரத்தின் பிரதான வீதிகள் குறுக்கும் நெடுக்குமாக க்ரிட் (grid) முறையில் அமைக்கப்பட்டவை. ஒரு வீதி கிழக்கிலிருந்து மேற்காகப் போய்க்கொண்டிருந்தால், அதை வெட்டிக்கொண்டு இன்னொரு வீதி வடக்கிலிருந்து தெற்காகப் போய்க்கொண்டிருக்கும். நான் சென்ற புதன்கிழமை மிஷன் வீதியையும் 13-வது வீதியையும் இணைக்கும் முனையில் நின்றுகொண்டிருந்தேன். பாதசாரிகள் கடக்கும் சிக்னல் விழவில்லை.

என்னுடன் சிலர் நின்றுகொண்டிருந்தார்கள். சில ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள். சில மெக்சிகோ காரர்கள். வயதான வெள்ளைக்காரர் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார். அவர் திடீரென்று வானத்தை நோக்கி உரத்த குரலில் பேசினார். “கடவுளே, இவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதற்காகத்தான் நீ ட்ரம்பை அனுப்பியிருக்கிறாய்”. இந்த நகரில் முதன்முதலாக அப்போதுதான் ட்ரம்பின் ஆதரவாளரைப் பார்க்கிறேன். ஆப்பிரிக்க - அமெரிக்கர்களில் ஒருவர் உயரமும் பருமனுமாக இருந்தார். அவர் சுண்டுவிரலால் தள்ளினால் வெள்ளை வயோதிகர் பறந்துவிடுவார். ஆனால், அவர் ‘‘இந்தப் பெரியவருக்கு வாயைக் கொடுத்ததும் கடவுள். இது அமெரிக்கா. அதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம்’’ என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.

உழைத்துப் பிழைப்பவர்கள்

நான் தெருவைக் கடந்து பதினாறாவது வீதியில் இருக்கும் முடிதிருத்தகத்துக்கு வந்தேன். ஒரு சீனப் பெண்மணி முடி திருத்தினார். 21 டாலர்கள். ‘‘வாழ்க்கை எப்படி நடக்கிறது?’’ என்று கேட்டேன். ‘‘1,000 டாலர்கள் போதும். வாழ்க்கை கழிந்துவிடும். வெள்ளைக்காரர் என்றால், அவருக்கு 3,000 டாலர்கள் வேண்டும். 1,000 டாலரில் வாழ்க்கை நடத்துபவர்கள் வேண்டாம், 3,000 டாலர் கேட்பவர் கள்தான் வேண்டும் என்று ட்ரம்ப் சொல்கிறார்’’ என்றார். கூடவே, ‘‘இது அமெரிக்கா. ட்ரம்பினால் என்னைப் போன்று உழைத்துப் பிழைப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது’’ என்றும் சொன்னார்.

இங்கு சாதாரண மக்கள் நம்பிக்கையை இழக்க வில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அமெ ரிக்கா தங்களுக்குக் கொடுத்திருக்கும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பறித்துக்கொள்ளாது என்பதில் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. உழைப்பதற்கும், நினைத்ததைப் பேசுவதற்கும் உயிர் வாழ்வதற்கும் சுதந்திரம் இருக்கிறது. அவற்றை யாரும் பறித்துக்கொள்ள முடியாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

அமெரிக்க அரசுகளின் கடுமையான விமர்சகரான சாம்ஸ்கி 2008-ம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், “அமெரிக்காவை விடச் சுதந்திரமான நாடு உலகிலேயே கிடையாது. இங்கிருக்கும் பேச்சுச் சுதந்திரம் உலகில் எங்கும் கிடையாது’’ என்றார். கூடவே, ‘‘இது சுதந்திர நாடு. ஆனால், இறுகிய கொள்கைகளைக் கொண்டது” என்று சொன்னார். இரண்டு கட்சிகளும் முதலாளித்துவத்தில் நம்பிக்கை வைத்திருப்பதால், அதை யார், என்ன பேசினாலும் அசைக்க முடியாது என்று நினைக்கிறார்கள்.

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒன்று இருக்கிறது என்பது நமக்கு ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால் உண்மை. இடதுசாரிகள் இங்கு பல்கலைக்கழகங்களில் கிடைப்பார்கள். மக்கள் மத்தியில் கிடைப்பது மிகவும் அரிது. முதலாளித்துவத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்களே இங்கு அனேகமாக அனைவரும் என்று சொல்லலாம். அவர்களது நம்பிக்கையை அசைத்து, அவர்களை இடதுபக்கம் திருப்ப அமெரிக்கா பெரிய பிரச்சினைகளை ஏதும் அதன் வரலாற்றில் சந்திக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பணக்காரர்களை ‘உங்களது சொத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்’ என்று உரத்த குரலில் சொன்ன, ஒரே குறிப்பிடத்தக்க தலைவர் சென்ற நூற்றாண்டின் இருபது முப்பதுகளில் இயங்கிய ஹுயி லாங் என்பவர். லூசியானா மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். அமெரிக்க செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1935-ல் கொலை செய்யப்பட்ட அவர்கூட ‘நான் சோஷலிஸ்ட் அல்லன்’ என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

எனவே, அமெரிக்கா தனக்குத்தானே அமைத்துக் கொண்டுள்ள முதலாளித்துவ வட்டத்துக்குள் இருந்துகொண்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம். யாரும் ஒன்றும் செய்ய முடியாது. கம்யூனிஸ்ட்டுகளும் பேசலாம். கேட்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். ஜான் ஆலிவர் என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சியாளர் நடத்தும் நிகழ்ச்சி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும். ட்ரம்ப் வெற்றி பெற்றவுடன் அவர் நடத்திய நிகழ்ச்சியில் அவர் ட்ரம்பைப் பற்றிப் பேசிய பாணியில், இந்தியாவில் எந்தத் தலைவர்களைப் பற்றியும் பேச முடியாது. அவர் சொன்னதில் திருப்பிச் சொல்லக் கூடியது இது:

“இந்தப் படத்தில் என்ன தவறு இருக்கிறது’’ என்பதன் மனித வடிவம் ட்ரம்ப்.

பேச்சுச் சுதந்திரம் எப்போது கிடைத்தது?

அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டன் ‘‘பேச்சுச் சுதந்திரம் இல்லாவிட்டால், ஆட்டு மந்தைகள் கசாப்புக் கடைக்கு இழுத்துச் செல்லப்படுவதுபோல நாம் இழுத்துச் செல்லப்படுவோம்’’ என்றார். சுதந்திரம் பெற்ற சில ஆண்டுகளிலேயே அடிப்படைச் சுதந்திரங்களும் வந்துவிட்டன. 1791-ல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் பேச்சு, எழுத்துச் சுதந்திரத்துக்கு எதிராகச் சட்டங்கள் கொண்டுவருவதற்குத் தடை விதிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்தத் திருத்தம் நீதிமன்றங்களினால் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறது. உதாரணமாக, 1996-ல் அமெரிக்க காங்கிரஸ், இணையத்துக்குச் சில தடைகளை விதித்து கொண்டுவந்த சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம், முதல் திருத்தத்துக்கு எதிரானது என்று தள்ளுபடி செய்துவிட்டது.

இந்தியாவில் நடக்குமா?

இது போன்ற சுதந்திரங்கள் இங்கு இல்லாத காரணம், நமக்கு மதங்கள் மீது இருக்கும் அசாதாரணமான பற்று. தலைவர்கள் மீது இருக்கும் கண்மூடித்தனமான பக்தி, மதம் மற்றும் தலைவர்களைப் பொறுத்தவரை சில கோடுகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை யார் தாண்டினாலும் மக்கள் பொங்கி எழுந்து விடுவார்கள்.

200 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இருந்துவரும் சுதந்திரம், இங்கும் நாம் போராடினால் கிடைக்கும். ஆனால், அதற்கு முன்னால் நாம் ‘பொங்கி எழுவதை’க் குறைத்துக்கொள்ள வேண்டும்.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x