Published : 06 Oct 2022 06:56 AM
Last Updated : 06 Oct 2022 06:56 AM
பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது தமிழகத்தில் அடிக்கடி எழும் கோரிக்கைதான். இக்கோரிக்கையை முன்வைத்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.எழிலன் நடத்திவரும் ‘அறம் செய்ய விரும்பு’ தொண்டு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவாக உள்ள ஓர் அதிகாரத்தை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை எப்படிப் புரிந்துகொள்வது?
அதிகாரங்களின் பட்டியல்: இந்தியா ஒரு கூட்டாட்சி நாடு. மத்திய அரசு, மாநில அரசு என இரட்டை ஆட்சிமுறையைக் கொண்டது. எனவே, இரு அரசுகளின் அதிகாரங்களும் இந்திய அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுக்கான அதிகாரங்கள் மத்தியப் பட்டியலில் உள்ளன. மாநில அரசுகளுக்கான அதிகாரங்கள் மாநிலப் பட்டியலில் உள்ளன. மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவான அதிகாரங்களைக் கொண்டது பொதுப் பட்டியல் (Concurrent list). தற்போது மத்தியப் பட்டியலில் 97 அதிகாரங்களும், மாநிலப் பட்டியலில் 66 அதிகாரங்களும், பொதுப் பட்டியலில் 47 அதிகாரங்களும் உள்ளன. அடிப்படையில் இந்த மூன்று அதிகாரங்களைத் தவிர்த்து, எஞ்சிய அதிகாரங்களும் (Residuary powers) உள்ளன. இவை மத்திய, மாநிலப் பட்டியல்கள் எதிலும் பட்டியலிடப்படாதவை. இவை அனைத்திலும் மத்திய அரசுக்கே அதிகாரம்.
இதில், பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் என இரண்டு அரசுகளுமே சட்டம் இயற்ற முடியும். இது பரவலாகப் பொதுப் பட்டியல் என்று அழைக்கபட்டாலும், ஒத்திசைவுப் பட்டியல் என்று குறிப்பிடுவதே சரியானது. இரு அரசுகளும் ஒத்திசைவோடு செயல்பட வேண்டும் என்பதுதான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். ஆனால் நடைமுறையில், மத்திய அரசின் சட்டங்களுக்கு மாநில அரசுகள்தாம் ஒத்திசைகின்றன. பொதுப் பட்டியலில் மத்திய அரசு ஒத்திசையும் நிலையைக் காண முடிவதில்லை. பொதுப் பட்டியலில் ஓர் அதிகாரத்தில் மாநில அரசுகள் சேர்ந்து நிறைவேற்றும் தீர்மானங்கள் மத்திய அரசைக் கட்டுப்படுத்துவதில்லை. பொதுப் பட்டியல் என்பது பொதுவான வரையறைக்குள் இருந்தாலும் மத்திய அரசே அதில் மேலாதிக்கம் செலுத்துகிறது.
நெருக்கடிநிலையின் விளைவுகள்: மாநிலப் பட்டியலிலிருந்து எந்த அதிகாரத்தையும் எந்த நேரத்திலும் மாற்றும் அதிகாரமும் மத்திய அரசுக்கு இருக்கிறது. 1976இல் இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடிநிலை அமலில் இருந்தபோது காடுகள் நிர்வாகம், கல்வி, எடை & அளவிடல், விலங்குகள் & பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகிய ஐந்து அதிகாரங்களை அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம், பொதுப் பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றியது. சர்தார் ஸ்வரண்சிங் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை இந்திரா காந்தி மேற்கொண்டார்.
இதன் மூலம் இந்த அதிகாரங்களில் மாநிலச் சட்டப்பேரவைகளுக்கு இருந்த முழு அதிகார வரம்பு, பொதுப் பட்டியலுக்கு மாறியது. நெருக்கடிநிலை முடிந்த பிறகும் பறித்த உரிமைகளை இந்திரா காந்தி அரசு, மாநிலங்களின் கைகளுக்கு மாற்றவில்லை. இந்திரா காந்திக்குப் பின் வந்த எந்த மத்திய அரசும் அந்த அதிகாரங்களை மாநிலங்களுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் ஆட்சியின் நெருக்கடிநிலையை இன்று வரை கடுமையாக விமர்சிக்கும் பாஜகவும், இந்திரா காந்தியின் அந்த உரிமைப் பறிப்பு விஷயத்தில் அமைதி காக்கிறது. அன்று பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது குறித்த சிந்தனை காங்கிரஸைப் போலவே பாஜகவுக்கும் இல்லை.
தொடரும் கோரிக்கை...: இன்றைய சூழலில் பொதுப் பட்டியலில் உள்ள ஓர் அதிகாரத்தில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, மாநில அரசுகளால் எதிர்ப்புக் குரலை மட்டுமே எழுப்ப முடிகிறது. பொதுப் பட்டியல் சார்ந்த அதிகாரங்களில் மத்திய அரசின் சட்டத்தைப் பெரும்பாலான மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், அதை ஏற்காத மாநில அரசுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. மத்தியில் ஆளும் கட்சி பல மாநிலங்களையும் ஆள்கிறபோது பொதுப் பட்டியலில் மத்திய அரசின் சட்டம் எளிதாக அமலாகிவிடுகிறது. உதாரணமாக, நீட் நுழைவுத்தேர்வைத் தமிழக அரசு எதிர்க்கிறது. ஆனாலும், தமிழகத்தில் நுழைவுத்தேர்வு உள்ளது. இதுபோன்ற சூழலில் எதிர்க்கும் மாநிலங்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை என்பதுதான் இதிலுள்ள பலவீனம்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை தமிழகத்தில் புதிதல்ல. முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோர் தொடர்ந்து எழுப்பிய கோரிக்கைதான். கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் அந்த அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் கடந்த ஆண்டு தனிநபர் மசோதாவில் குறிப்பிட்டிருந்தார். நீட் நுழைவுத்தேர்வு, புதிய தேசியக் கல்விக் கொள்கை போன்றவை தமிழகத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் சூழலில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை உயர் நீதிமன்றப் படியேறியிருப்பது, அதன் மீதான கவன ஈர்ப்பை அதிகரித்துள்ளது.
என்னதான் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும், அது யாருக்கும் நிரந்தரமானது அல்ல என்பதே நிதர்சனம். எந்த அதிகாரத்தையும் எங்கும் மாற்றிக்கொள்ள முடியும் என்கிற வாய்ப்போடுதான் அதிகாரப் பட்டியல்களில் ஒவ்வொன்றும் இருக்கிறது. நெருக்கடிநிலையின்போது மாநிலங்களின் எந்த ஒப்புதலுமின்றி ஐந்து அதிகாரங்களும் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. நெருக்கடிநிலை அதற்கான வாய்ப்பை வழங்கியது. நடைமுறையில் மாநிலப் பட்டியலில் உள்ள ஓர் அதிகாரத்தை மாநிலங்கள் ஒப்புதல்படி மத்தியப் பட்டியலுக்கோ பொதுப் பட்டியலுக்கோ மாற்ற முடியும். மாற்றப்பட்ட அந்த அதிகாரத்தை மீண்டும் மாநிலங்களுக்கே திரும்ப வழங்க வேண்டும் என்றால், மத்திய அரசே முன்வந்து வழங்கவும் முடியும். ஆனால், அது ஏன் நடைபெறவில்லை என்பதுதான் கேள்வி.
டி.கார்த்திக்
தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in
To Read in English: Powers in Concurrent List- A persisting Demand!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT