Published : 09 Nov 2016 09:08 AM
Last Updated : 09 Nov 2016 09:08 AM
அமெரிக்காவின் வறுமை இந்திய வறுமை போன்றது அல்ல.
உலகின் எல்லா நாடுகளையும்போல அமெரிக்காவிலும் உங்களையும் என்னையும்போன்ற சாதாரண மக்கள்தான் அதிகம். இவர்களில் ஏழை மக்கள் ஐந்து கோடிப் பேர் இருப்பார்கள். அதாவது, அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 16%. மத்தியதரத்தினர் 50%-க்கும் அதிகம். எனவே, அமெரிக்கா ஒரு மத்திய வர்க்கத்தினர் நாடு என்று சொன்னால் சரியாக இருக்கும்.
உண்ண உடையும், இருக்க இடமும் அனேகமாக எல்லோருக்கும் இங்கு கிடைத்துவிடும் என்பது நிச்சயம். அமெரிக்காவின் வறுமை இந்திய வறுமை போன்றது அல்ல. இந்தியாவில் 50%-க்கு மேலான மக்களுக்கு இருக்க இடம் சரியாகக் கிடைக்கவில்லை என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. சத்துள்ள உணவும் நம்மில் பலருக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. அமெரிக்காவில் மாதம் இரண்டாயிரம் டாலர்களுக்குக் கீழ் சம்பாதிக்கும் குடும்பங்கள் (நான்கு பேர் கொண்டது) வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக அறியப்படுகிறார்கள். நான்கு பேர் கொண்ட குடும்பம் மாதம் 800 டாலர்கள் செலவுசெய்தால் நல்ல சத்துள்ள உணவு கிடைக்கும். இங்கு பொதுப் பள்ளிக்கூடங்களில் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி இலவசம். எனவே, மிகவும் எளிய நிலையில் இருக்கும் குடும்பம்கூட இந்தியாவின் கீழ் மத்தியதரக் குடும்பத்தைவிட அதிகம் சம்பாதிக்கிறது. வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வாங்க முடிகிறது என்று சொல்லலாம்.
அமெரிக்க ஏழைகளும், சிறுபான்மையினரும், கீழ் மத்தியதர வர்க்கத்தினரும் 50%-மாவது இருப்பார்கள். இவர்கள் ஜனநாயகத்தை எப்படி அணுகுகிறார்கள்?
எளிய மக்களும் ஜனநாயகமும்
சென்ற நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அமெரிக்காவின் மக்களை லட்சக்கணக்கில் பொதுப் பிரச்சினைக்காகத் திரட்ட முடிந்தது. உதாரணமாக, மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் நடந்த மக்கள் உரிமை இயக்கத்தில் திரள் திரளாக மக்கள் பங்குபெற்றனர். ஆனால், இன்று அது போன்ற இயக்கத்தை நடத்துவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. போராடுவது எந்தப் பயனையும் தராது என்று இன்றைய சிறுபான்மையினரும் கீழ் நடுத்தர வர்க்க மக்களும் நினைத்துவிட்டார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் தங்கள் ஜனநாயக உரிமையின் அடையாளமான வாக்கைப் பதிவுசெய்யக்கூடத் தயங்குகிறார்கள். நமது நாட்டில் பணக்காரர்கள் ஓட்டு போட வருவதற்கு யோசிப்பார்கள். நமது தலைவர்களின் தலையெழுத்தை நிர்ணயிப்பது பெரும்பாலும் ஏழை மக்களே. இங்கு ஏழைகள் ஓட்டு போடத் தயங்குகிறார்கள். குறிப்பாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் ஹிஸ்பானிக்குகளும் பொதுவாக ஓட்டு போடத் தயங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. 2012-ல் ஒபாமா போட்டியிட்டதால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிக ஓட்டு போட்டார்கள். இந்தத் தேர்தலில் அவர்கள் பெருமளவு ஓட்டு போட்டால், ஹிலாரி கிளிண்டனுக்குச் சாதகமாக இருக்கும். ஹிஸ்பானிக்குகளும் பெருமளவில் ஓட்டு போட வருவார்கள் என்று சில செய்திகள் சொல்கின்றன. இது உண்மையாகவே நடந்தால், சிறுபான்மையினர் பெருமளவில் ஓட்டு போடுவது இதுவே முதல்தடவையாக இருக்கும். ஆனால், வெள்ளை ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர மக்கள், குறிப்பாக ஆண்கள், ஜனநாயகத்தை வேறுவிதமாக அணுகுகிறார்கள்.
வெள்ளையரின் அணுகுமுறை
இவர்கள் குடியரசுக் கட்சிக்குப் பெருவாரியாக வாக்களிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதற்கு நான்கு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. நேற்றைய கட்டுரையில் கூறியதுபோல மதம் ஒரு காரணம். சென்ற வருடம் ஹிலாரி கிளிண்டன் பெண்கள் கூட்டம் ஒன்றில் பேசும்போது, மத நம்பிக்கைகளும் அதன் கட்டுமான அடிப்படைகளும் மாற வேண்டும் என்று சொன்னார். இதைப் பிடித்துக்கொண்டு அவர் கிறிஸ்துவ மதத்துக்கு எதிரி என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. இரண்டாவது காரணம், கருத்தடைக்கு எதிரான பிரச்சாரம். கருத்தடையை ஆதரிப்பவர்கள் ‘குழந்தைக் கொல்லிகள்’என்ற பரப்புரையை மக்கள் எளிதாக நம்பிவிடுகிறார்கள். மூன்றாவது, துப்பாக்கி. அமெரிக்க அரசியல் சட்டம் மக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதை அனுமதிக்கிறது. உலகிலேயே அதிக துப்பாக்கிகள் வைத்துக்கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. மக்கள்தொகையைவிட மக்களிடம் இருக்கும் துப்பாக்கிகள் அதிகம். குடியரசுக் கட்சி துப்பாக்கிக்குத் தடை கொண்டு வர யோசிக்கும் என்பதால், வெள்ளை ஆண்கள் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டு போடுவார்கள். நான்காவது காரணம், பயம். குழு மனப்பான்மை என்பது நமக்கு மட்டும் சொந்தமல்ல. வெள்ளையரை முழுமையாக ஆதரிக்கும் ஒரே கட்சி, குடியரசுக் கட்சி என்று தீர்மானமாக இருக்கும் ஆண்களில் பெரும்பான்மையானவர்கள் வெள்ளை ஏழைகள்.
தாராளமான மக்கள்
அணுகுமுறை வேறாக இருப்பதால் அமெரிக்க மக்கள் வெவ்வேறு அணிகளில் பிரிந்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யாமல் நிற்கின்றனர் என்று நினைப்பது தவறு. உலகிலேயே மிகவும் தாராளமாக மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடு எது என்று இந்த ஆண்டு ஒரு கணக்கெடுப்பு நடந்தது. முதலிடத்தில் மியான்மர். இரண்டாவது இடத்தில் அமெரிக்கா. பணம் படைத்த நாடுகளில் மிகவும் தாராளமானது அமெரிக்காதான். இந்தியா 106-வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.44% - சுமார் 220 பில்லியன் டாலர்கள் தானமாக ஒவ்வொரு ஆண்டும் பல நல்ல காரியங்களுக்காக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, நமது நாட்டிலிருந்து செல்லும் பல மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் உதவித்தொகை பெறுவதில் வெற்றி அடைவது அமெரிக்காவில் தாராள மனம் படைத் தவர்கள் அதிகம் இருப்பதால்தான். இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்வது ஒன்றிருக்கிறது. அமெரிக்கப் பணக்காரர்கள் அதிகம் தானம் வழங்குகிறார்கள் என்பது உண்மை. ஆனால், ஏழைகளும் வழங்குகிறார்கள். சொல்லப்போனால், பணக்கார அமெரிக்கா தனது வருமானத்தில் 1.3% தானம் செய்கிறது என்றால், ஏழை அமெரிக்கா 3.2% செய்கிறது. வருமான வரிச் சலுகைகள் ஏதும் இன்றிச் செய்கிறது. அமெரிக்காவின் சாதாரண மக்கள் மிகவும் தாராளமானவர்கள்.
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT