Published : 19 Sep 2022 07:20 AM
Last Updated : 19 Sep 2022 07:20 AM
பெரியார் வானொலியில் பேசினாரா என்று கேட்டால், காந்தி கொல்லப்பட்டபோது நிலவிய கொந்தளிப்பான சூழலில் பேசிய அமைதிப் பேச்சைத்தான் பெரும்பாலானோர் குறிப்பிடுவர்; அநேகமாக அதுதான் பெரியாரின் முதல் ஒலிபரப்பு. காந்தி மறைந்த மறுநாள் (31.1.1948) திருச்சி வானொலி நிலையத்திலிருந்து அப்பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அது 1939இல் தொடங்கப்பட்ட திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலியால் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகும். சென்னையில் 1924 ஜூலை 31 அன்று முறையான வானொலி ஒலிபரப்பு முதன்முதலாகத் தொடங்கியது. இந்த ஒலிபரப்பைப் பெரியார் கேட்டிருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட அந்த நாளில், அவர் திருவனந்தபுரம் மத்திய சிறையில் இருந்தார். வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு இரண்டாம் முறை சிறைவாசத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார். அது சிறைவாசத்தின் 15ஆம் நாள். அறிவியல் முன்னேற்ற நடவடிக்கையில் தமிழ்நாடு முதல் அடியை எடுத்துவைத்த நேரத்தில், அவர் கேரளத்தில் சமூகச் சமத்துவ முயற்சியில் ஓர் அடியை முன்வைத்தார்.
பெரியாரின் ஒலிபரப்புகள்: அகில இந்திய வானொலி தொடங்கப்பட்ட காலம் முதல் பெரியார் மறைவு வரையிலான (1938-1973) 35 ஆண்டுகளில், இப்போது கிடைக்கும் ஆவணங்களின் ஆதாரப்படி, ஆறு முறை பெரியாரின் பேச்சு ஒலிபரப்பாகியுள்ளது. 1948இல் காந்தி காலமானபோது மக்களை அமைதிப்படுத்துவதற்கான உரை, 1965இல் சீனப் போர் நிகழ்ந்தபோது மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான உரை, 1972இல் ராஜாஜி காலமானபோது ஆற்றிய இரங்கல் உரை என மூன்று உரைகளைப் பெரியார் நிகழ்த்தியுள்ளார். தவிர, நேர்முகம் என்ற வகையில் மேலும் 3 ஒலிபரப்புகள் நிகழ்ந்துள்ளன. 1968 இல் கே.பி.கணபதி (மாறன்) என்ற வானொலிக் கலைஞர் கண்டது முதலாவது நேர்முகம். 1970இல் மத்திய இணை அமைச்சர் எஸ்.சந்திரசேகர் நிகழ்த்தியது இரண்டாவதும், மூன்றாவதும் நிறைவானதுமான நேர்முகம் 1973இல் ஒலிபரப்பானதாகும். இந்த நேர்காணலில் பெரியாரோடு பேசியவர் ஜி.சுப்பிரமணியம் என்ற வானொலி அலுவலர். இந்த மூன்று பேச்சுகள், மூன்று நேர்முகம் ஆகியவற்றின் விவரங்களைக் கவனித்துப் படிக்கும் வாசகர்களுக்கு இவை இயல்பானதாகவே தோன்றும், ஒன்றைத் தவிர. மத்திய அமைச்சர் பெரியாரை நேர்முகம் கண்டார் என்பதுதான் அது. இந்திரா காந்தியின் அமைச்சரவையில் குடும்பக் கட்டுப்பாட்டுத் துறை இணை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எஸ்.சந்திரசேகர் (1918-2001). குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாகப் பெரியாரிடம் ஆலோசனை கேட்பதற்காக வந்த அவர், பெரியாரை (அடையாறு) வீட்டில் நேர்முகம் கண்டார். பெரியாரின் கருத்துகளைப் பெற்று ஆச்சரியமடைந்த அமைச்சர் ஒரு கருத்தை ‘மூலமான கருத்து’ (original suggestion) என்று மனமகிழ்ந்து சொன்னார்.
50% இடஒதுக்கீடு: அமைச்சர்: “ரெண்டு குழந்தை போதும்னு சொல்றோம். அதுல என்ன கஷ்டம்னா, இப்போ ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்டால் கஷ்டம் இல்லை. இரண்டும் பொண்ணா போய்விட்டது என்றால் இன்னும் ஒன்றுக்கு ட்ரை (Try) பண்றாரு ஆளு, ஆண் குழந்தை வேணும்னு. அதுக்கு எப்படி அவங்கள எஜுகேட் (Educate) பண்றதுன்னு எனக்குத் தெரியல. பெண் குழந்தை பிறந்தாலும் அதோடு நிறுத்திக்கலாம், ஒண்ணும் கஷ்டம் இல்லை. பெண்ணும் ஆணும் ஒண்ணுன்னு சொல்றதுக்கு நம்மால முடியல. நான் சொல்றது என்னன்னா, ரெண்டு குழந்தை இருந்தா போதும். இதை எப்படி மக்களுக்குச் சொல்றது?"
இதுதான் அமைச்சரின் கேள்வி, சந்தேகம்.: பெரியார்: “அந்த எண்ணம் மக்கள் மனசுல இருந்து மாற வேண்டுமானால் 50 சதவீதம் பெண்களுக்கு உத்தியோகம், 50 சதவீதம் ஆம்பளைக்கு உத்தியோகம் (என்று செய்துவிட வேண்டும்). ஒரு ஆபீஸ்ல 100 உத்தியோகஸ்தர்கள் இருந்தா 50 பெண்கள் இருக்காங்களான்னு கேட்கணும். இல்லாவிட்டால், அதைப் போடுன்னு சொல்லணும். அப்ப பெத்தவங்களுக்கு ஆண் இருந்தாலும் ஒண்ணு, பெண் இருந்தாலும் ஒண்ணு என்றாகும். இந்த ஆம்பளை எல்லாம் உத்தியோகம் பார்க்கிறார்கள், பொம்பளைங்க எல்லாம் வீட்ல இருக்காங்க. அதனால நமக்கு ஆம்பளப் புள்ள ஒண்ணு வேணும்னு தோணுது. அவன் சம்பாதிக்கிறான் என்று தோணுது. அதனால நாம் ஈக்குவலைஸ் (equalise) பண்ணிட்டா உத்தியோகத்தை ஆளுக்குப் பாதின்னு’’ (ஆதாரம்: பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், திருத்தப்பட்ட பதிப்பு). இதைக் கேட்ட அமைச்சர் ‘‘இந்த யோசனை நல்லா இருக்குது. ‘ஒரிஜினல் சஜஷன்’. இதை நாங்க எக்ஸாமின் பண்ணிப் பார்க்கிறோம்” என்றார். இந்த நேர்முகம் 8 மார்ச் 1970இல் சென்னை வானொலியில் ஒலிபரப்பானது. பெரியார் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு கேட்கிறார். ஆனால் 35%-ஐயே 75 ஆண்டுகளுக்குப் பின்னும் நாடு இன்னும் நடைமுறைப்படுத்தத் தயாராகவில்லை.
இறுதி ஊர்வல வர்ணனை: அமைச்சரின் இந்த நேர்முகத்திற்குப் பிறகு 18.10.1973இல் திருச்சி வானொலியில் ஜி.சுப்ரமணியம் கண்ட நேர்முகம் ஒலிபரப்பானது. இது ஒலிபரப்பான இரண்டு மாதங்களில் (24.12.73) பெரியார் காலமானார். அரசு மரியாதையுடன் நிகழ்ந்த இறுதி ஊர்வலத்தை அப்போதிருந்த ஒரே மக்கள் தொடர்பு ஊடகமான வானொலி நேரலையாக ஒலிபரப்பியது. 25.12.73 அன்று பிற்பகல் 2:45 மணிக்கு அதுவரை வரலாறு கண்டிருக்காத மனிதரின் இறுதி ஊர்வல வர்ணனை தொடங்கி ஒலித்தது. வானொலியில் அதுதான் பெரியார் தொடர்பான நிறைவான ஒலிபரப்பு. மறைவு வரை மொத்தம் ஆறு ஒலிபரப்புகளே பெரியாருக்குச் செய்யப்பட்டிருந்த நிலையில், வானொலியில் இப்போது ஆண்டுக்கு இரண்டு நிகழ்ச்சிகளாவது (பிறந்த நாள், நினைவு நாள்) இடம்பெறுகின்றன. முதலாம் ஆண்டு நினைவுரையைத் தில்லை வில்லாளன் தொடக்கிவைத்தார். வானொலி ஒலிபரப்பைப் பெரியார் பயன்படுத்தினாரோ இல்லையோ, அரசாங்கம் தன்நோக்கத்திற்காகப் பெரியாரைப் பயன்படுத்திக்கொண்டது என்று உணர முடிகிறது. மக்களை அமைதிப்படுத்தவும், ஒற்றுமைப்படுத்தவும், நாட்டுத் தலைவரைக் கௌரவப்படுத்தவும், மக்களை முன்னேற்றவும் என அரசு பெரியாரின் பேச்சைப் பயன்படுத்திக்கொண்டது. வான் அலைகள் அரசுக்கு அல்ல, மக்களுக்கு உரிமையானது என்ற 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தீர்ப்பு பெரியார் காலத்தில் வந்திருந்தால், நாம் வாழும் தமிழ்நாடு நாம் இப்போது வாழும் தமிழ்நாடாக இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. - பழ. அதியமான், உதவி இயக்குநர் (ஓய்வு), சென்னை அகில இந்திய வானொலி நிலையம். தொடர்புக்கு: athiy61@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT