Published : 11 Nov 2016 09:29 AM
Last Updated : 11 Nov 2016 09:29 AM
இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் நெருக்கமடைய வாய்ப்புள்ள தருணம் இது
சென்னை புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் ஒரு திருமணம் நடந்தது (1680). மணமகன் பெயர் எலிஹூ யேல். மணமகள் மார்கரெட். ஏல் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைவராக இங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார். பாஸ்டனில் பிறந்தவர். பெரிய வணிகர். பின்னால் உலகப் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்துக்குப் பெருங்கொடை அளித்தவர்.
அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வணிகம் 17-ம் நூற்றாண்டிலிருந்தே நடந்துவந்திருக்க வேண்டும். அமெரிக்க விடுதலைப் போரின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘பாஸ்டன் தேநீர் விருந்’தில் அமெரிக்கப் போராளிகள் கடலில் தூக்கியெறிந்தது இந்தியாவிலிருந்து வந்த தேயிலைச் சிப்பங்களைத்தான். நமக்கு மிகவும் பிடித்த உருளைக் கிழங்கு, மிளகாய், தக்காளி, மக்காச்சோளம் போன்றவை இந்தியாவுக்கு அமெரிக்கக் கண்டத்திலிருந்துதான் வந்தன என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
விடுதலைக்கு முன்
இந்தியர்கள் அமெரிக்காவில் 19-ம் நூற்றாண்டிலேயே குடியேறத் தொடங்கிவிட்டனர். விவேகானந்தரின் சிகாகோ பேச்சு நாம் அனைவரும் அறிந்ததே. நமது தலைவர்களில் அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் போன்றவர்கள் அமெரிக்காவில் பயின்றவர்கள். அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களுக்கு ஆதரவாக 1907-ல் லாலா லஜபதிராய் அங்கு பயணம் செய்தார். ஆனால், இந்தியாவில் விடுதலைப் போர் நடக்கிறது அதற்கு ஆதரவு தர வேண்டும் என்று முதலில் நினைத்தவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த ரூஸ்வெல்ட். 1942-ல் இந்தியாவுக்கு விடுதலை தர பிரிட்டனை வலியுறுத்தக் கோரி காந்தி ரூஸ்வெல்ட்டுக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில்தான் இந்தியா விடுதலை அடைந்தால் உலக நாடுகள் அனைத்தும் விடுதலை அடையும் என்று காந்தி குறிப்பிடுகிறார்.
1949-ல் நேரு அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார். பனிப்போர் தொடங்கிய காலம் அது. அமெரிக்காவும் ரஷ்யாவும் இரு துருவங்களாக இருந்தன. ஆனால், நேரு தெளிவாகச் சொன்னார்: ‘நாங்கள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்க்கிறோம். ஆனால், பதிலாக நாங்கள் வாங்கிய சுதந்திரத்தின் எந்தப் பகுதியையும் இழக்க விரும்பவில்லை’. நேரு இருந்த வரை இந்திய அமெரிக்க உறவு சீராகவே இருந்தது. ஆனால், 50-களில் அமெரிக்கா உலகின் சர்வாதிகாரிகள் அனைவரையும் தூக்கிப் பிடித்து நிறுத்திக்கொண்டிருந்தது. எனவே, இந்தியாவின் ஆதரவு அதற்கு உலக அரங்கில் கிடைக்கவில்லை.
இருந்தாலும் நேருவை உலகின் பெருந்தலைவர்களில் ஒருவர், ஜனநாயகத்தின் பாதுகாவலர் என்பதால் அனைவரும் மதித்தனர். குறிப்பாக, கென்னடி மதித்தார். அதனால்தான் 1962-ல் இந்திய - சீனப் போர் நடந்தபோது, நேருவால் கென்னடிக்கு அமெரிக்க விமானப் படையின் நேரடி உதவியைக் கோரிக் கடிதம் எழுத முடிந்தது. அமெரிக்காவும் எந்த உதவியையும் செய்யத் தயாராக இருந்தது என்று சொல்ல வேண்டும்.
இந்திரா காந்தி பதவிக்கு வந்த சமயத்தில், வியட்நாம் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. ஆசிய நாடுகளின் விடுதலைக்கு உழைத்த இந்தியா, வியட்நாம் விடுதலை வீரர்கள் பக்கம் நின்றது. இதனால், அமெரிக்க - இந்திய உறவு ஆட்டம் கண்டது. நிக்ஸன் பதவிக்கு வந்ததும் உறவு மிகவும் பலவீனம் அடைந்தது. வங்கதேசப் போரின்போது வங்காள விரிகுடாவுக்கு அமெரிக்கப் போர்க் கப்பல் ஒன்றை அனுப்பி இந்தியாவைப் பயமுறுத்த அமெரிக்கா முயற்சிசெய்தது. இரு நாடுகளுக்கும் உறவு சீரடைய வெகுநாள் ஆனது. ராஜீவ் காந்தி பதவி ஏற்ற பிறகுதான் சீரடைந்தது என்று சொல்லலாம். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியாவில் தாராளமயமாக்கல் வலுவடையத் தொடங்கியது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கம் ஏற்படத் தொடங்கியது. நம்மவர் அங்கு செல்லத் துவங்கினர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள்
1965 வரை அமெரிக்காவில் 50,000-க்கும் குறைவாகவே இந்தியர்கள் இருந்தனர். இன்று சுமார் 40 லட்சம் பேர் இருக்கின்றனர். இந்தியர்கள் அமெரிக்காவுக்குத் தேவையாக இருந்தார்கள். படித்த இந்தியர்களுக்கும் அமெரிக்கா தேவையாக இருந்தது. இந்தியாவின் எல்லா சமூகத்தினரும் இங்கு இருக்கின்றனர். இந்துக்கள் 51%, கிறிஸ்தவர்கள் 18%, முஸ்லிம்கள் 10%, சீக்கியர்கள் 5%. இவர்களில் இந்தியாவில் பிறந்தவர்கள் 87%-க்கும் மேல். அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறையின் மையத்தில் இயங்குபவர்களில் முக்கியமானவர்கள் இந்தியர்கள். எனவே, இந்தியாவுடன் இணக்கத்தைத்தான் அமெரிக்கா விரும்பும். கடந்த 70 ஆண்டுகளில் இந்திய - அமெரிக்க உறவு மிகவும் நெருக்கமடைய அதிக வாய்ப்புள்ள தருணம் இப்போதுதான் என்று துணிவாகச் சொல்லலாம்.அதே நேரத்தில், அமெரிக்காவால் பாகிஸ்தானை விட்டுக்கொடுக்கவும் முடியாது.
பாகிஸ்தான் பிரச்சினை
அமெரிக்காவோடு ராணுவக் கூட்டணி அமைத்துக் கொண்டால்தான் பிழைக்க முடியும் என்ற ஒரே உறுதியோடு பாகிஸ்தான் பல ஆண்டுகளாச் செயலாற்றி வந்தது. சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடந்த போருக்கு அமெரிக்க உதவி பாகிஸ்தான் வழியாகவே சென்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சீன - அமெரிக்க உறவு ஏற்படுவதற்கு சென்ற நூற்றாண்டின் 70-களில் பாகிஸ்தான்தான் உதவிசெய்தது. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே உறவு சென்ற நூற்றாண்டின் இறுதி வரை நெருக்கமாகவே இருந்தது. 2001 செப்டம்பர் 11-ல் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல் எல்லா வற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டது. ஆனால், பாகிஸ் தான் இன்று பயங்கரவாதிகளின் மையமாக மாறிவிட்டது. அமெரிக்காவுக்கு இரண்டும் கெட்டான் நிலைமை. பாகிஸ்தானுடன் நெருக்கமாக நிச்சயமாக இருக்க முடியாது. ஆனால், முழுவதும் கைவிட்டால் சீனா விட்ட இடத்தைப் பிடித்துக்கொள்ளும் அபாயம். இதோ ட்ரம்ப் அதிபராகிவிட்டார். புதிய அதிபரை இந்திய அரசு எவ்வாறு கையாள வேண்டும்?
(அமெரிக்காவைச் சுற்றுவோம்)
- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT