Published : 01 Nov 2016 05:38 PM
Last Updated : 01 Nov 2016 05:38 PM
இணையத்தில் படித்ததாக நண்பர் ஒருவர் சொன்ன கதை இது.
இரு ரயில் தண்டவாளங்கள் அருகருகே உள்ளன. ஒரு தண்டவாளத்தில் ரயில் எப்போதும் வராது. மற்றொன்றில் ரயில் வந்துகொண்டே இருக்கும். ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடுகிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ரயில் வருகிறது. தூரத்தில் இருக்கும் நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். அருகில் ட்ராக் மாற்றும் கருவி இருந்தால் யாரைக் காப்பாற்றுவீர்கள்.
இப்படி ஒரு கேள்வி ஒரு கூட்டத்தில் கேட்கப்பட்டது.
அதில் பலர் 10 குழந்தைகளின் உயிர் முக்கியம் என்று கூறினர். சிலர் மட்டும் ஒரு குழந்தையைக் காப்பாற்றுவதே சிறந்தது என்றனர்.
நாம் யாரும் சூப்பர் ஸ்டாரோ, சூப்பர் மேனோ இல்லை. ஒரு பக்கம் மட்டுமே நம்மால் கவனம் செலுத்தி காப்பாற்ற முடியும். உண்மையில் என்ன செய்வோம்? என்று கூட்டத்தை நடத்துபவர் கேள்வி கேட்டார்.
10 பேர் உயிர் முக்கியம். ஒரு குழந்தை மட்டும் விளையாடும் தண்டவாளத்தில் ட்ராக் மாற்றிவிடுவோம் என்று பெரும்பாலானோர் கூறினர்.
ரயில் வரும் என்று தெரிந்தும் தவறு செய்யும் குழந்தைகளைக் காப்பாற்றத் தயாராகும் நீங்கள், ஏன் ரயில் வராத இடத்தில் இருக்கும் குழந்தையைக் காப்பாற்றத் துணிவதில்லை என்று கூட்டத்தை நடத்துபவர் கேட்டார்.
கூட்டத்தில் மவுனமே பதிலாய் வந்தது.
நல்லதை தனியாக செய்பவர் தண்டிக்கப்படுகிறார். தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள் என்று கூட்டம் நடத்திய நண்பர் முத்தாய்ப்பாய் முடித்தார்.
அந்தக் கூட்டத்துக்குப் பிறகும் அந்தக் கேள்வி விவாதத்தை எழுப்பியது.
அந்த 10 பேர் குழந்தைகளாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவர்களைக் காப்பாற்றவே முயற்சி நடக்கும் என்பது தெரிகிறது. இதில் எந்த தவறும் செய்யாத அப்பாவிக் குழந்தை பலிகடா ஆக்கப்படுகிறது.
புனைவாக சொல்லப்பட்டதுதான் என்றாலும், நிஜத்தில் குழந்தைகள் விஷயத்தில் இதுதான் நடக்கிறது. வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உரிமை மீறல்களால், வாய்ப்பு மறுக்கப்படுவதால், வன்முறையால் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.
திருவள்ளூர் மாவட்டத்தில் செல்லக்கடி கடித்ததற்காக 3 வயது குழந்தையை தாய்மாமனே கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேச மாநிலம், பாக்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஷிவ் தத் - சுமிதா தம்பதியரின் 10 மாதக் குழந்தை கிருஷ்ணா. காய்ச்சலால் அவதிப்பட்ட கிருஷ்ணாவை அரசு மருத்துவமனையில் சேர்க்கும்போது, கையூட்டு கேட்டு தகராறு செய்த வேளையில், குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதனால் பத்து மாதக் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.
ராஜஸ்தானைச் சேர்ந்த நேகா கோயல், தனக்கு இரண்டாவதும் பெண் குழந்தையாக பிறந்து விட்டதே என்ற விரக்தியடைந்து, தான் பெற்ற 4 மாத பெண் குழந்தையை 17 முறை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
திருச்சி லட்சுமி பிரபாவின் 3 வயது ஆண் குழந்தையை ரோஸ்லீன் பாக்கியமேரி சுடிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். காரணம், செல்போன் ரீசார்ஜ் கடை உரிமையாளர் லட்சுமி பிரபா, பாக்கியமேரியை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.
பொள்ளாச்சி அருகே சஞ்சித் என்ற இளைஞன் 8 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார்.
மும்பை செம்பூர் குப்பை கிடங்கில் தாயால் வீசி எறியப்பட்ட பச்சிளம் குழந்தையை எலிகள் கடித்துக் குதறியதால் பரிதாபமாக இறந்தது.
பிரான்ஸின் வடக்கு பகுதியில் துணி துவைக்கும் இயந்திரத்தில் வைத்து பூட்டி 3 வயது குழந்தையை கொலை செய்த குற்றத்தில் பெற்றோர்கள் இருவரும் கைதாகினர்.
செகாந்திராபாத்தில் மகளை பாலியல் ரீதியாக கணவர் துன்புறுத்துகிறார் என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர், தனது மகளை கொலை செய்தார். மகளை கொன்று, கணவனிடம் இருந்து அவளுக்கு விடுதலை பெற்று கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மனைவி தனது பேச்சைக் கேட்காமல் குழந்தை பெற்றுக் கொண்டதால் கோபமடைந்த சென்னை இன்ஜீனியர், பிறந்து நான்கு நாட்களே ஆன குழந்தையை கிணற்றில் போட்டு கொடூரமாகக் கொலை செய்தார்.
மும்பையில் 20 ரூபாயை திருடியபோது ஏழு வயது சிறுமி கையும் களவுமாக பிடித்ததால் அந்தக் குழந்தையை பக்கத்து வீட்டுக்காரர் கொலை செய்தார்.
தூத்துக்குடியில், கடன் பிரச்சினை தொடர்பான தகராறில் சாட்சி சொன்ன பெற்றோரைப் பழிவாங்கும் நோக்கத்தில், அவர்களின் 15 வயது மகள் உஷாவை ட்ரம்மில் வைத்து அடைத்தனர்.
இவையெல்லாம் வீட்டுக்குள் நடக்கும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து செய்தித்தாள்களில் அண்மையில் வெளிவந்த செய்திகள்.
வீட்டுக்கு வெளியேயும் குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் ஊடகங்கள் உரக்கச் சொல்கின்றன.
ஆசிரியரின் நாற்காலியில் அமர்ந்ததால் 3-ம் வகுப்பு மாணவனை பள்ளி நிறுவனர் பிரம்பால் தாக்கினார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கட்டணம் செலுத்தாத 250 மாணவர்களை அறையில் பூட்டி வைத்து பள்ளி நிர்வாகம் தண்டனை வழங்கியது.
பெரம்பலூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர் ஒருவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி, அடித்து, துன்புறுத்திய ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலுள்ள தனியார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியை சரியாக கவனிக்காத மாணவர் முதுகில் அதிக எடை உள்ள மாணவர் ஒருவரை தூக்கிக் கொண்டு ஓட கட்டளையிட்டார்.
இப்படி குழந்தைகள் மீது நடக்கும் வன்முறைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
*
உலகத்தில் நடக்கும் எந்த அசம்பாவிதத்திலும், இயற்கைப் பேரிடரிலும், மழை வெள்ளத்திலும், அதிகம் நாசமாக்கப்படுவது, சூறையாடுப்படுவது குழந்தைகள்தான். ஏனெனில் அவர்கள் சக்தியற்றவர்களாக, ஆற்றலற்றவர்களாக இருப்பதே காரணம்.
அதனாலேயே அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு உரிமை மீறலும், உரிமை மறுப்பும் வன்முறை வடிவமாக நிகழ்த்தப்படுகிறது.
ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய இரு அணுகுண்டு வீச்சுகளால் உடனடியாகவும் காலப் போக்கிலும் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,50,000 பேர். இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் சதைப் பிண்டங்களாக, கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களில் இல்லா மாற்றுத் திறனாளிகளாக குழந்தைகள் பிறக்கின்றனர்.
ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு வெளியிட்ட ஆற்றலைப் போல 1000 மடங்கு சக்தி வாய்ந்தது சுனாமி பேரலை. இதில் இந்தியாவில் மட்டும் 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நின்றார்கள். இதில் அதிகம் இறந்ததும், கல்வி பாதிக்கப்பட்டதும், காணாமல் போனதும் குழந்தைகள்தான்.
கும்பகோணத்தில் 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியானார்கள். 16 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
கடந்த டிசம்பர் மாத மழை வெள்ளத்தில் நிர்க்கதியாய் நின்றவர்கள் குழந்தைகள்தான்.
உலகம் முழுவதும், ஒவ்வொரு ஏழு நொடிகளுக்கும், பதினைந்து வயதிற்குக் கீழ் உள்ள ஒரு சிறுமிக்குத் திருமணம் நடக்கிறது என்று 'சேவ் தி சில்ட்ரன்' (Save the Children ) என்று தொண்டு நிறுவனம் அதன் அறிக்கையில் கூறுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதில் வடசென்னையில் 5 முதல் 12 வயது வரையுள்ள சில குழந்தைகளுக்கு அலகு குத்தப்பட்டது. குழந்தைகள் வேண்டாம் என மறுத்தும் கட்டாயப்படுத்தி அலகு குத்தப்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அக்குழந்தைகள் கதறித் துடித்தனர்.
அடியாத மாடு படியாது?, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், முருங்கையை ஒடிச்சு வளர்க்க வேண்டும், குழந்தையை அடிச்சு வளர்க்க வேண்டும் என்கிற பழமொழிகள்கூட வெளிப்படுத்துவது என்னவென்றால், இயல்பாக நாம் குழந்தைகளை நசுக்கலாம், சூறையாடலாம் என்பதுதான்.
குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று நாம் சொல்வதெல்லாம் மேற்கோளுக்காக மட்டும்தான், குறிக்கோளாக இல்லை.
போற்றப்பட வேண்டிய, கொண்டாடப் பட வேண்டிய குழந்தைகளை இன்னமும் பலர் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
உரிமை மீறல்கள்?
உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்புக்கான உரிமை என ஐ.நா.சபை நான்குவிதமான உரிமைகளைப் பிரித்தது. 1992-ம் ஆண்டு இந்தியா இதில் கையெழுத்திட்டது. ஆனாலும், இன்றளவும் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக இந்த நாட்டில் குழந்தைகள் இருப்பது என்பது வேதனை தரக் கூடியது. ஐ.நா.வின் வரையறைப்படி 18 வயது வரை உள்ள அனைத்து மனிதர்களும் குழந்தைகள்தான். ஆனால், அவர்களை சமூகம் உரிமையற்றவர்களாகவே பார்க்கிறது.
உரிமை என்பது என்ன?
உரிமை என்பது கேட்டுப் பெறுவதல்ல, பிறப்பால் வருவது. சாதி, மதம், நிறம், இனம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால், பல குழந்தைகளுக்கு பிறப்பதற்கான உரிமையே மறுக்கப்படுகிறது.
உயிர் வாழ்வதற்கான உரிமையை எல்லா குழந்தைகளும் பெறாததன் அடையாளமே கருக்கொலை, பெண் சிசுக் கொலை.
திருவண்ணாமலையில் ஆண்டுக்கு 2 ஆயிரம் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் ஆனந்தி கைது செய்யப்பட்டார். முறையான மருத்துவம் படிக்காத ஆனந்தி, மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராக இருந்ததும், அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்ததும் மாநில சிசுவதை தடுப்புக் குழுவினர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனந்தி என்ற ஒற்றை நபர் 2000 குழந்தைகள் உயிர் வாழ்வதற்கான உரிமையை கருவிலேயே அழித்திருக்கிறார்.
(தேவநேயன்)
குழந்தைகளின் உரிமைகள் எப்போது ஆரம்பிக்கிறது? என்ற கேள்வியுடன் தோழமை குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயனை சந்தித்தித்தேன்.
"கருவாக அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும்போதிருந்தே குழந்தைகளுக்கான உரிமைகள் தொடங்கிவிடுகிறது. எனவே, கருக்கலைப்பு செய்யாமல் குழந்தையைக் காப்பது முதல் உரிமை. ஆணா, பெண்ணா, மாற்றுத்திறனாளியா என இனம் கண்டறிவது மிகப் பெரிய உரிமை மீறல்.
முறையாக கர்ப்பத்தை பதிவு செய்வது, கர்ப்ப கால பராமரிப்பை உறுதி செய்வது, கரு கர்ப்பப்பையில் சரியான முறையில் தங்கி இருக்கிறதா என்பதை சரிபார்ப்பது, மூளை வளர்ச்சிக்கு சத்தான சரிவிகித உணவு , ஆளுமையுடன் கூடிய முழுமையான வளர்ச்சிக்கு சாதகமான சூழலும், ஆரோக்கியமும் குடும்பத்தில் நிலவுவது, நல்ல மனநிலையுடன் தாய் இருப்பது போன்றவையும் குழந்தையின் உரிமைகள்தான்.
கல்லானாலும் கணவன், குவார்ட்டர் குடித்தாலும் புருஷன் என்றே மனைவி நினைக்கலாம். ஆனால் குடித்துவிட்டு வரும் கணவன் கருவுற்றிருக்கும் மனைவியை அடிக்கும்போது குழந்தையும் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும். மூளை வளர்ச்சி குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கும் ஆபத்தும் நேரிடும். குடி அடுத்த தலைமுறையை இப்படியும் அழிக்கும்.
சத்தான சரிவிகித உணவு என்பது எது? இயற்கை உணவா, பாத்திரங்கள் அல்லது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவா என்பதையும் கவனிக்க வேண்டும்.
குழந்தையின் எடையை மாதா மாதம் கண்காணிப்பதோடு, தடுப்பூசிகளை தவிர்க்காமல் போட வேண்டும். குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவே ஸ்கேன் செய்யப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிவதற்கே ஸ்கேன் செய்யப்படுகிறது. இது சட்டப்படி குற்றம்.
கருவுற்ற காலத்திலிருந்து இரண்டு வயதுவரை சத்தான சரிவிகித உணவை அந்தக் குழந்தை உண்ணுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும். கர்ப்பகால பராமரிப்பை சரியாக செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்டுவது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் வழக்கம். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் சுரப்பது ஒரு இயற்கை நிகழ்வு. அதை முறைப்படி தொடர வேண்டும். தாய்ப்பால் தரப்படுவதும் குறிப்பாக சீம் பால் கொடுக்கப்பதும் குழந்தையின் அடிப்படை உரிமை.
ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும்பொழுது குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்று திட்டுகிறோமே, அதற்குக் காரணம் குழந்தைகள் அல்ல. கருவுற்ற முதல் 1000 நாட்கள் குழந்தையின் மிக முக்கிய காலகட்டம். அந்த காலகட்டத்தில் தேவையான பராமரிப்பை செய்யாவிட்டால் குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி கேள்விக்குரியதாகிவிடும். இன்றைக்கு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறந்து பிறப்பதற்குக் காரணம், அதற்கானத் திட்டம் சரியாக வேலை செய்யவில்லை என்பதுதான். எனவே குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு 1000 நாட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்" என்றார் தேவநேயன்.
இந்த உரிமைகள் எப்போது மறுக்கப்படுகிறதோ, மீறப்படுகிறதோ அதுவே குழந்தைகள் மீதான வன்முறையை நாம் ஊக்குவிக்கிறோம் என்பதை உறுதி செய்துவிடும்.
அது என்ன 1000 நாட்கள்? அதனால் என்ன மாற்றங்கள் நிகழும்? குழந்தைகளுக்கு 1000 நாட்களில் தரப்பட வேண்டிய முக்கியத்துவம் என்ன?
அடுத்த அத்தியாயத்தில் பகிரலாம்!
க.நாகப்பன், தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT