Last Updated : 30 Nov, 2016 09:37 AM

 

Published : 30 Nov 2016 09:37 AM
Last Updated : 30 Nov 2016 09:37 AM

இந்தியா ஏற வேண்டிய படிகள்!

ஊழலில் பெருமளவு ஈடுபடுபவர்கள் அரசு ஊழியர்களாகத்தான் இருப்பார்கள்



திருட்டுப் பணத்தை வெளியில் கொண்டுவருவதில் அரசு ஓரளவு வெற்றியடைந் திருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது முழு வெற்றிக்கு முதல் படியாகத்தான் இருக்க முடியும். இன்னும் பல படிகள் ஏற வேண்டும். அரசு இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

வருமான வரி குறித்த சட்டங்கள் வலுவாக்கப்பட வேண்டும். சட்டங்களை மீறுபவர்களுக்கு அபராதத்தோடு கடுமையான சிறைத் தண்டனையும் வழங்க வேண்டும்.

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன் கொடைகள் ரூ.2,000-க்கு மேல் இருந்தால், அவை செக் மூலமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ வழங்கப்பட வேண்டும். எவ்வளவு பணம், யார் கொடுத்தார்கள் என்பதைப் பகிரங்கமாகத் தங்கள் வலைதளங்களில் அறிவிக்க வேண்டும்.

வரி வீதங்களைச் சீரமைக்க வேண்டும். இப்போது பணக்காரர்கள் மீது விதிக்கப்படும் வரி வீதம் அதிகம் என்று சொல்ல முடியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இதைவிட அதிகம் (ட்ரம்ப் மாற்றம் செய்யலாம் என்றாலும்). எனவே, 30% என்பது சரியான உச்ச வரம்பு. இதை நிச்சயம் குறைக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மேல் இருப்பவர்களுக்குத்தான் வருமான வரி விதிக்க வேண்டும். விலக்குகளை அடியோடு ஒழிக்க வேண்டும் அல்லது வெகுவாகக் குறைக்க வேண்டும்.

பினாமி சொத்துகளைக் கைப்பற்றி, ஏலம் விட்டுக் கிடைக்கும் வருவாயை மாநில அரசுக்குக் கொடுக்க வேண்டும். அந்த வருவாயை அரசு ஊழியர் சம்பளத்துக்குச் செலவிடக் கூடாது. மக்கள் நலத் திட்டங்களுக்கு மட்டும் செலவிட வேண்டும். நிலமோ, வீடோ, மனையோ, கடையோ வாங்குவது செக் மூலம்தான் நடக்க வேண்டும்.

கறுப்புப் பணம் யாரிடமிருக்கிறது என்று மக்களிடம் கேட்டால், அவர்கள் முதலில் அரசியல்வாதிகளிடம் இருக்கிறது என்பார்கள். பினாமியை ஒழித்து, மற்றைய சமாச்சாரங்களுக்கு செக் மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால், அரசியல்வாதிகள் ஓரளவு வழிக்கு வந்து விடுவார்கள். ஆனால், அவர்களுடன் மக்கள் கொடுக்கும் பட்டியலில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்டுகள் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் கறுப்புப் பணத்தோடு பிடிபட்டால், தொழில் செய்வதற்குக் கொடுக்கப்படும் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்கள் சில வருடங்களாவது சிறையில் கழிக்க வேண்டும்.

நமது நாட்டில் எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பது யாருக்கும் சரியாகத் தெரியாது. 22,000 டன் என்கிறார்கள். அதாவது, 1 ட்ரில்லியன் டாலர்கள். சராசரியாக ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் இந்தத் தங்கத்தை விற்றால் குறைந்தது ரூ. 2.5 லட்சம் கிடைக்கும். ஆனால், தங்கம் சேர்ந்துகொண்டே இருக்கிறது. சென்ற ஆண்டு 900 டன்களுக்கும் மேல் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தங்கத்தின் மீது கடுமையான கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும். 10 கிராமுக்கு மேல் தங்கத்தை ரொக்கத்தில் விற்கத் தடை விதிக்க வேண்டும். எந்தக் கடையிலும் தினமும் 5%-க்கு மேல் தங்கத்தை ரொக்கத்தில் விற்கத் தடை விதிக்க வேண்டும்.

சொத்துப் பதிவுக் கட்டணம் அதன் மதிப்பில் 5 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. விளைச்சல் நிலங்கள் மனைகளாக மாற்றப்படுவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அல்லது, தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

பி நோட்டுகள் என்று அழைக்கப்படும் ‘பார்டிசிபேடரி’ நோட்டுகள் தடை செய்யப்பட வேண்டும். அல்லது தீவிரக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

வெளிநாட்டில் இருக்கும் நமது பணத்தின் மொத்த மதிப்பைப் பற்றி பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினையைப் பற்றித் தொடர்ந்து எழுதி வரும் பேராசிரியர் வைத்தியநாதன், பணத்தின் மதிப்பு 1.4 ட்ரில்லியன் டாலர்கள் (ரூ. 90 லட்சம் கோடி) என்று 2009-லேயே மதிப்பிட்டிருந்தார். 2007-ல் உலக வங்கி சுமார் 200 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிட்டிருந்தது.

இந்தியா சுண்டைக்காய் நாடு அல்ல. அதன் பொருளாதார வலிமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. எனவே, இந்தியா உண்மையாகவே நினைத்தால், வெளிநாட்டில் பதுக்கியிருக்கும் பணத்தை வெளியில் கொண்டுவர முடியும். பணம் பதுக்கியிருப்பது தெரியவந்தால், அபராதம் மட்டுமல்லாமல், கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படுமாறு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.

ஹவாலா முறையில் பணத்தை இந்தியாவுக்கு அனுப்புவதை வெளிநாட்டில், குறிப்பாக மத்தியக் கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் எளிய மக்கள் விரும்புகிறார்கள். எனவே, ஹவாலா வர்த்தகத்தைத் தடை செய்வதைவிட அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான வழிமுறைகளைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

நமது அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத் தவே முடியாது என்ற ஒரு மாயை இன்று வரை நிலவுகிறது. ஊழலில் பெருமளவு ஈடுபடுபவர்கள் அவர்களாகத்தான் இருப் பார்கள். ஆனால், அவர்கள் தண்டிக்கப் படுவதே இல்லை. காரணம், அரசுகளின் மெத்தனம். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் லஞ்சக் குற்றத்துக்காக ஆண்டுக்குச் சராசரியாக 27 பேர் மட்டும் தண்டிக்கப் படுகிறார்கள் என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளிவிவரம் என்று நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். மற்றைய மாநிலங்களிலும் மத்திய அரசிலும் இதே கதைதான். அரசு ஊழியர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டங்கள் ஏற்கெனவே இருக் கின்றன. அவற்றை அமலாக்குவதில்தான் அரசுகள் தயங்குகின்றன. அந்தத் தயக்கம் மாற வேண்டும்.

கடைசியாக, ஆனால் மிக முக்கியமாக, நமது நீதிமன்றங்கள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழ வேண்டும். ஊழல், பதுக்கல், கறுப்புப் பண விவகாரங்களை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைப்பது பற்றி மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தோடு கலந்து ஆலோசித்து, ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

நடக்குமா?

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: tigerclaw@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x