Published : 11 Sep 2022 11:45 AM
Last Updated : 11 Sep 2022 11:45 AM
மகாகவி பாரதி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர். தன் பாடல்கள் வழியாக மக்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தியவர். இந்த அடையாளத்துக்கு அப்பால், தமிழுக்குப் பெருந்தொண்டு புரிந்தவர் பாரதி.
தமிழில் மரபுக் கவிதை, புதுக் கவிதை என இரண்டு வடிவங்கள் இருக்கின்றன. மரபுக் கவிதை வடிவத்தில் எழுதிவந்த பாரதி, மேற்கில் உருவான ‘வசன கவிதை’ என்னும் வடிவத்தின்பால் ஈர்க்கப்பட்டு, ‘இவ்வுலகம் இனிது...’ மூலம் தமிழில் புதுக் கவிதை வரலாற்றைத் தொடங்கிவைத்தார். அந்த வகையில் வால்ட் விட்மனின் கவிதைகள் பாரதிக்கு முன்னுதாரணமாக இருந்தன எனச் சொல்லப்படுகிறது. புதுக் கவிதைதான் இனி தமிழில் கோலோச்சப்போகிறது என்று பாரதி முன்பே உணர்ந்திருந்தார் என்கிற வகையில் அவருடைய இந்த முயற்சியைப் பார்க்கலாம்.
வ.வே.சுப்பிரமணியத்தின் ‘குளத்தங்கரை அரச மரம்’ (1917) என்னும் சிறுகதைதான் தமிழில் முதல் சிறுகதையாகச் சொல்லப் பட்டது. ஆனால், அதற்கு முன்பு 1910இல் ‘அதிலொரு பங்கு’ என்னும் தலைப்பில் பாரதி எழுதிய கதைதான் தமிழின் முதல் சிறுகதை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மேற்குலகில் உருவானது சிறுகதை வடிவம். ஆங்கிலப் புலமை பெற்றிருந்த பாரதி, மேற்குலகில் நடைபெற்ற இலக்கிய மாற்றத்தைக் கவனித்து வந்திருக்கிறார். அதன் அடிப்படையில் இந்த வடிவத்தைத் தமிழில் முயன்றுபார்த்துள்ளார்.
‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் / தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’ எனத் தன் பாடல் வரியின்வழி மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பாரதி பேசியுள்ளார். தமிழ் மொழிக்கு மொழி பெயர்ப்புகள் வளம் சேர்க்கும் என்பதை அறிந்து, பல மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்துள்ளார். தமிழ், சம்ஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிப் புலமை கொண்டவர் பாரதி. கீதையை மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலக் கவிஞர் ஜான்ஸ்கரின் கவிதையை ‘கற்பனையூர்’ என்ற தலைப்பில் தமிழாக்கியுள்ளார். வேதரிஷிகளின் பாடல்களைத் தமிழாக்கி யுள்ளார். வங்கக் கவி பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ பாடலை மொழி பெயர்த்துள்ளார். தாகூர் சிறுகதைகள், விவேகானந்தர் சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல மொழி பெயர்ப்புகளைச் செய்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT