Published : 08 Sep 2022 06:31 AM
Last Updated : 08 Sep 2022 06:31 AM

சுதந்திரச் சுடர்கள் | ‘கூட்டாட்சி’ செழிக்கிறதா?

ஹரீஷ் கரே 

சுதந்திரத்துக்குப் பிறகு மக்களுடைய மனங்களில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை காங்கிரஸ் தலைமை உணர்ந்துகொண்டது. கட்சியிலும் அதற்கேற்ற மாற்றங்களைச் செய்தது, தென்னிந்தியர்களை காங்கிரஸ் கட்சித் தலைவர்களாக நியமித்தது.

1960இல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக சஞ்சீவ ரெட்டி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்த டி. சஞ்சீவய்யாவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. 1964இல் காமராஜர் சகாப்தம் தொடங்கியது.

காமராஜர் அரசியலில் பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் செல்வாக்கு பெற்ற ‘கிங் மேக்கர்’ ஆனார். அது தமிழ்நாட்டில் வளர்ந்துவந்த திராவிட செல்வாக்குக்கு எதிர் சக்தியாக விளங்கியது.

அரசியல் நிர்வாகத்தில் காங்கிரஸ் கட்சி இப்படி திறமையுள்ள ஸ்தாபனமாக வளர்ந்துவந்த அதே வேளையில், நாட்டை நவீனப்படுத்த வேண்டிய அதன் தலைவர்கள் மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஆட்சி செய்யத் தவறியதால் கூட்டரசின் வலு குறையத் தொடங்கியது.

1962 இல் நிகழ்ந்த சீனப் படையெடுப்பும் 1965இல் பாகிஸ்தானுடனான போரும் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தி, தேசிய உணர்வுக்குப் புத்துயிர் ஊட்டின. ஆனால், பொருளாதாரரீதியாக மக்களுடைய வாழ்க்கைத்தரம் மோசமானது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி வலுவான மத்திய அரசு இருந்தால்தான் நாடு முன்னேறும் என்கிற காங்கிரஸின் கருத்து சரிதானா என்று மக்களிடம் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

1966-67இல் ஏற்பட்ட கடுமையான உணவு தானியப் பற்றாக்குறை அவர்களுடைய வாதங்களுக்கு வலுசேர்த்தது. 1967 பொதுத் தேர்தலில் பல மாநிலங்களில், காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.

அதற்கு முந்தைய மூன்றாண்டுகள் செல்வாக்குமிக்க காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் 1967 தேர்தலில் திமுகவின் மாணவர் அணித் தலைவரிடம் தோல்வி அடைந்தார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிகழ்வானது, ‘வலுவான மத்திய அரசு’ என்கிற காங்கிரஸ் தலைமையிலான நிர்வாக முறையால் களைத்துப்போன மக்களுடைய எதிர்வினையாக மாறியது.

இந்திரா காந்தியின் போர்க்குணம்

மாநில அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளை மக்கள் ஏற்றுக்கொண்டதைப் போல, சில மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அமைந்தாலும், வலுவான மத்திய அரசு அவசியம் என்று கருதியவர்கள் தங்களுடைய நிலையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.

மத்திய அரசின் ஆதிக்கத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் இந்திரா காந்தி இறங்கினார். தன்னுடைய சிந்தனை வேகத்துக்கேற்ப செயல்பட முடியாத மூத்த தலைவர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை 1969 இல் உடைத்தார், 1971இல் மக்களவை பொதுத் தேர்தலை ஓராண்டு முன்னதாக அறிவித்து, மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே வேளையில் பொதுத் தேர்தலை நடத்தும் நடைமுறையை மாற்றினார்.

பாகிஸ்தானுடனான போரில் பெருவெற்றி பெற்றதாலும் வங்கதேசம் என்கிற புதிய அரசை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்ததாலும் இந்திரா காந்திக்கு நாடு முழுவதும் செல்வாக்கு அதிகரித்திருந்தது. அதையொட்டிய பொதுத் தேர்தல் அவருக்கிருக்கும் செல்வாக்கை அறிவதற்கான கருத்தறியும் பொதுவாக்கெடுப்பு போலவே மாறியது.

‘இந்திரா காங்கிரஸ்’ என்று அழைக்கப்பட்ட – அவருடைய தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. தனிப்பட்ட அவருடைய அரசியல் செல்வாக்கு, புதிய அரசியல் பாணியானது. காங்கிரஸ் கட்சிக்குள் அவர் தனிப்பெரும் தலைவரானார், மாநில காங்கிரஸ் தலைவர்கள் சுயசெல்வாக்கு இல்லாமல் செல்வாக்கிழந் தார்கள்.

பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி, இந்தியா சாதாரண நாடல்ல, கடுமையான முடிவுகளையும் எடுக்கவல்ல நாடு என்ற பெயரை சர்வதேச அரங்கில் இந்திரா ஏற்படுத்தினார். மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக இடைவிடாமல் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த கட்சிகளைக் கட்டுக்குள் வைக்க, நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார்.

இதற்கிடையில், இந்திரா காந்தி ஆட்சியில் வேளாண்மையில் நவீனத் தொழில்நுட்பங்களையும் வீரிய விதைகள், பூச்சிக்கொல்லி, உரம் ஆகியவற்றையும் பயன்படுத்தி பசுமைப் புரட்சி ஏற்பட்டது. உணவு தானிய உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்தது. இறக்குமதிக்கு அவசியமில்லாமல் போனது.

விவசாயத்தில் ஈடுபட்டுவந்த இடைநிலைச் சாதியினர் வருவாய் உயரவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே வேளை அரசியல், சமூக, பொருளாதாரத் தளங்களில் தங்களுக்கும் அதிக அதிகாரமும் பங்களிப்பும் வேண்டும் என்று விரும்பினர். அவர்களுடைய ஆசைகளை நிறைவேற்றும் வகையில் கட்சியின் அமைப்புகளில் மாற்றம் செய்ய இந்திரா காந்தி தவறினார்.

மாநிலங்களில் ஆட்சி செய்த மாற்றுக் கட்சி அரசுகளைக் கலைக்க அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்த அவர் தயங்கவேயில்லை. இதனால் பிற கட்சிகளுடன் சமரசம் கண்டு தீர்வுகளை ஏற்படுத்திய கலாச்சாரம் மறைந்தது. சமரசம் மூலம் தீர்வுகாண விரும்பாத போக்கால், காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டது.

சர்வதேச எல்லைக்கு அருகில் இருக்கும் பஞ்சாப், காஷ்மீர், அசாம் மாநிலங்களில் பிரிவினைப் போக்கும் மத்திய அரசுக்கு எதிரான விரோத மனப்பான்மையும் அதிகரித்தன. இம் மூன்று மாநிலங்களுடன் வட கிழக்கு மாநிலங்களிலும் பிரிவினைப் போக்கு தலைதூக்கியது. வடகிழக்கில் அரசுக்கு எதிரான கலகங்கள் அரசியல் சமரசங்களால் அல்ல, இரும்புக்கரத்தால்தான் ஒடுக்கப்பட்டன. இந்தத் தொடர் போராட்டங்களின் காரணமாக மத்திய அரசு களைத்துப் போனது. காங்கிரஸும் சமரசம் காண முடியாமல் திகைத்தது.

கூட்டாட்சி உணர்வு நீடிக்குமா?

கூட்டாட்சித் தத்துவத்தை உணர்ந்து அதைக் கடைப்பிடித்தால்தான் நிர்வாகம் நடத்த முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. பொருளாதார நிலையின் உச்சத்திலிருந்து 1992-1997 காலத்தில் நாடு சரிந்தது. எனவே, மத்திய அரசின் ஆணவமும் குறைந்தது. இதுவரை சோதித்துப் பார்க்கப்படாத அரசியல் கூட்டணி முறையை மாநிலக் கட்சிகள் இணைந்து முயன்றுபார்த்தன. அகில இந்திய தேசியக் கட்சிகளை ஒதுக்கிவிட்டு கூட்டணிகள் அமைந்தன.

1996இல் ஏற்பட்ட ‘ஐக்கிய முன்னணி அரசு’, அதிகாரப் பரவலாக்கலை முதன்மைக் கடமையாக வரித்தது. ஆனால் ஐக்கிய முன்னணி அரசு அப்படி அறிவித்த போதிலும் வலுவான மத்திய அரசு என்கிற கொள்கையை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு அதனால் எதையும் செய்ய முடியவில்லை.

மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை ஆராய்ந்து பரிந்துரை கூற நியமிக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா தலைமையிலான ஆணையமும் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் எந்தவிதப் பரிந்துரையையும் அளிக்க முயலவில்லை.

மாநிலங்களுக்கு இடையிலான பூசல்களைத் தீர்க்க மத்திய அரசை நடுவராக அழைக்கும் போக்கே நீடிக்கிறது. அனைத்திந்திய அடிப்படையிலான பொருளாதாரமும் அனைத்திந்திய அளவிலான நடுத்தர வர்க்கமும் உருவான நிகழ்வானது, மாநிலக் கட்சிகளின் சுயாட்சிக் கோரிக்கைகளுக்குத் தடைக்கற்களாகிவிட்டன.

மாநிலத் தலைவரான லாலு பிரசாத் செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக வளர்ந்தாலும் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் மத்திய அரசின் கருவியான மத்தியப் புலனாய்வுக் கழகத்தால் விசாரிக்கப்பட்டு சிறைத் தண்டனைக்கும் ஆளாகிவிட்டார்.

எது எப்படியிருந்தாலும், கூட்டாட்சி அரசு முறை திறன்மிக்கதாக விளங்கும் அளவுக்கு சமரசம் காண்பதும் விட்டுக்கொடுப்பதும் அவ்வப்போது தொடர்கிறது. மாநிலக் கட்சித் தலைவரான தேவ கவுடா 1996 ஆகஸ்ட் 15 இல் செங்கோட்டைக் கொத்தளத்திலிருந்து இந்தியில் உரையாற்றியதை இதற்கு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். ஐக்கிய முன்னணி அரசில் மாநிலக் கட்சிகள் தில்லி சிம்மாசனத்தை அடுத்தடுத்து கைப்பற்றின.

சர்தார் கே.எம். பணிக்கர் தேசிய அரசியலில் உத்தரப் பிரதேசத்தின் ஆதிக்கம் குறித்துக் கவலைப்பட்டு புத்தகம் எழுதியிருந்தார். அதற்கு நேர்மாறாக இது நடைபெற்றது. கடந்த ஐம்பதாண்டுகளில் கூட்டாட்சித் தத்துவத்தில் எதிரெதிராக நிற்கும் இருதரப்பும் செய்த அதிகாரத் துஷ்பிரயோகங்களாலும், தவறுகளாலும் தேர்தல்களில் தண்டனையும் பெற்றுவிட்டன. கடந்த ஐம்பதாண்டு கால அனுபவத்தின்படி பார்த்தால் வலுவான மத்திய அரசின் கீழ் இந்தக் கூட்டாட்சி உணர்வு நீடிக்கும் என்றே தெரிகிறது.

1997 ஆகஸ்ட் 15 ‘தி இந்து‘ சுதந்திரப் பொன் விழா சிறப்பு மலரில் வெளியான கட்டுரை

(ஹரீஷ் கரே, மூத்த பத்திரிகையாளர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர்)

நன்றி: ‘தி இந்து‘ ஆவணக் காப்பகம்
தமிழில்: வ. ரங்காசாரி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x