Published : 07 Sep 2022 06:36 AM
Last Updated : 07 Sep 2022 06:36 AM
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன் முதலாக 10 ஆயிரம் ரன்களை இந்தியாவின் சுனில் கவாஸ்கர் எடுத்ததுபோல, ஒரு நாள் போட்டிகளிலும் அந்தச் சாதனையை ஓர் இந்தியர்தான் படைத்தார். அவர், சச்சின் டெண்டுல்கர்.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் 1971இல் தொடங்கின. இந்தியா தன்னுடைய முதல் ஒரு நாள் போட்டியை 1974இல் விளையாடியது. டெஸ்ட் அரங்கில் பல சாதனைகளைப் படைத்த வீரர்கள் இருந்ததுபோலவே, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த வீரர்கள் இருந்தார்கள்.
என்றாலும் பத்தாயிரம் ரன்களை எட்டும் போட்டியில் ஒரு கட்டத்தில் இந்தியாவின் முகமது அசாரூதினும் சச்சின் டெண்டுல்கரும்தான் இருந்தார்கள். 2000இல் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடையை அசாரூதின் எதிர்கொண்டதால், கிரிக்கெட்டில் இல்லாமல் போனார்.
2000இலேயே 9,800 ரன்களைத் தாண்டிய சச்சின் டெண்டுல்கர், 2001இல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தூர் நேரு விளையாட்டு அரங்கில் தன்னுடைய 266ஆவது போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியபோது இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் எட்டினார்.
சர்வதேச அரங்கில் ஒரு நாள் கிரிக்கெட் தொடங்கி 30 ஆண்டுகள் கழித்து இந்த மைல்கல் எட்டப்பட்டது. 1989இல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான டெண்டுல்கர், 12 ஆண்டுகளில் இந்தச் சாதனையைப் படைத்தார்.
இந்தச் சாதனை மட்டுமல்ல, இன்றுவரை அதிக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் (463) பங்கேற்ற வீரர், அதிக ரன்களை (18,426) விளாசி ரன் குவிப்பில் முதலிடம் வகிக்கும் வீரர், ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் (49) விளாசிய வீரர் உள்ளிட்ட சாதனைகளும் சச்சின் டெண்டுல்கரிடமே உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT