Published : 06 Oct 2016 09:25 AM
Last Updated : 06 Oct 2016 09:25 AM

புற்றுநோய்க்கும் குங்குமப்பூவுக்கும் என்ன சம்பந்தம்?

சேமியா பாயசத்திலும் பால் பாயசத்திலும் குங்குமப்பூவைப் பார்த்தாலே மனம் மகிழும். அவற்றுக்குத் தங்கம் போன்ற ஒரு மஞ்சள் நிறத்தை அது அளிப்பதுடன், அதன் மதிப்பையும் பன்மடங்கு உயர்த்திவிடும். மனைவியும் தாயும் நம் மீது வைத்திருக்கும் அன்பின் அடையாளம் அது.

குங்குமப்பூவுக்கு வலுவான, நீடித்திருக்கும் நறுமணம் உண்டு. கசப்பும் இனிப்பும் கலந்ததொரு தனித்துவமான சுவை கொண்டது அந்தப் பூ. அதன் சாகுபடி குறைவாக இருப்பதால் விலையும் அதிகம். மதிப்புமிக்க பணப் பயிரான அதைப் பயிரிட அதிகமான மனித உழைப்பு தேவை. உலகின் விலையுயர்ந்த நறுமணப் பொருட்களில் ஒன்றான குங்குமப்பூ, மருத்துவக் குணங்களும் நோய் தீர்ப்புக் குணங்களும் நிறைந்தது. முதல் முதலாகக் குங்குமப் பூச் செடியைப் பயிரிடத் தொடங்கியவர்கள் கிரேக்கர்களே. அரேபியர்கள் கி.பி. 550 வாக்கில் குங்குமப்பூவைப் பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கும் பல காலம் முன்பிருந்தே காட்டுப் புதராகக் குங்குமப்பூ செடிகள் வளர்ந்திருக்கலாம் என யூகிக்கிறார்கள்.

‘சாஃப்ரான்’

அரபி மொழியில், ‘மஞ்சள் நிறமுள்ளது’ எனப் பொருள்படும் ‘சாஃப்ரான்’ என்ற சொல் குங்குமப்பூவுக்குச் சூட்டப்பட்டது. வட இந்தியாவில் அது கேசர், கேஷரா, கும்கும், அர்சிகா எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மத்தியத் தரைக் கடலின் கிழக்குக் கரைகளிலிருந்து இந்தியாவின் காஷ்மீர், லடாக் வரை பயிரிடப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் முதல் 2,100 மீட்டர் வரை உயர்ந்திருக்கும் பகுதிகளிலேயே அது வளரும். குங்குமப்பூ உற்பத்தியில் 95% ஈரான், ஸ்பெயின், இந்தியா ஆகிய நாடுகளில் நிகழ்கிறது. சுமார் 10% குங்குமப் பூ இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் காஷ்மீரிலும் இமாசலத்திலும் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பில் குங்குமப்பூ செடி பயிரிடப்படுகிறது.

ஸ்ரீநகரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாம்போர் என்னுமிடம் குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. அங்குள்ள மஞ்சள் பழுப்பு நிறமுள்ள மண்ணின் லேசான காரத்தன்மை உலகிலேயே உயர்தரமான குங்குமப்பூ விளைய உதவுகிறது. அது நீள நீளமான பட்டுநூலைப் போன்ற சூலக இழைகளை உடையது. அந்த இழைகள் கருஞ்சிவப்பு நிறமும் குமிழ் போன்ற வெளி முனைகளும் கொண்டிருக்கும். மணம், நிறம், மணமூட்டும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவை தரம் பிரிக்கப்படும். சூலக முடி இழைகளுடன் சூல் தண்டின் மேல் முனையையும், மகரந்தத் தாள்களையும் கலந்து கலப்படம் செய்வதுண்டு. தூய சூலக முடிகள் சிவப்பாகவும் ஆரஞ்சு நிற முனைகளுடனும் இருக்கும். சூல் தண்டு மஞ்சள் நிறமுள்ளது. அதுவும் விற்பனைக்கு வரும். ஆனால், அதற்குச் சூலக முடிகளைப் போன்ற நிறமும் மணமும் இருக்காது. அதற்குத் தனியாகச் சாயமும் மணமும் ஏற்றி விற்பார்கள். முனைகளில் ஆரஞ்சு நிறமில்லாத இழைகள் போலியானவை.

ஆறு கிலோ சூல் தண்டு மற்றும் சூல் முடியிலிருந்து ஒரு கிலோ குங்குமப்பூ கிடைக்கும். அவற்றைக் கிட்டத்தட்ட ஐம்பது கிலோ கிராம் எடையுள்ள புதிய மலர்களிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். அதாவது 1.5 லட்சம் மலர்கள் தேவைப்படும். ஒரு கிலோ பூவிலிருந்து 72 கிராம் சூலக முடிகள் கிடைக்கும். அதை உலர வைத்தால் 12 கிராம் குங்குமப்பூ கிடைக்கும்.

குங்குமப்பூ செடி ஆண்டு முழுவதும் பூக்கும். அதன் வேர்க் கிழங்கு ஒரே ஒரு பருவச் சாகுபடிக்கே உதவும். அதிலிருந்து முளைகளுள்ள துண்டுகளை வெட்டியெடுத்து நட்டு, புதிய செடிகளை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு செடியிலும் மூன்று அல்லது நான்கு மலர்களே பூக்கும். மலர் ஓரடி நீளம் வரை வளரும்.

வைகறைப் பொழுதில் மலர்களைக் கொய்து எடுத்துச் சென்று மகரந்தத் தாள்களைப் பிரித்தெடுப்பார்கள். அவற்றை அரை மணி நேரம் வெப்பக் காற்றைச் செலுத்தி உலர வைப்பார்கள். குங்குமப் பூவில் உள்ள வேதிகள் சிதையாமல் அது பக்குவமாக உலர்த்தப்பட வேண்டும். வெயில் மூலம் சூடாக்கப்பட்ட காற்றைச் செலுத்தி உலர வைக்கும் உத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. உலர்ந்த குங்குமப்பூவை வெயில் மற்றும் காற்றுப் படாமல் இறுக மூடி வைக்க வேண்டும்.

குங்குமப்பூவில் 150-க்கும் மேற்பட்ட ஆவியாகும் வேதிகள் உள்ளன. அவையே அதற்கு மணத்தையும் சுவையையும் அளிக்கின்றன. டெர்ப்பீன்கள், டெர்ப்பீன் ஆல்கஹால்கள் ஆகியவை ஆவியாகிறவை. அவற்றுடன் கரோட்டினாய்டு மற்றும் டெட்ரா டெர்ப்பீன் வேதிகளும் உள்ளன. இம்மியளவில் பொட்டாசியம், பாஸ்பரஸ், போரான் ஆகிய தனிமங்களும் அதில் உண்டு. அதிலுள்ள குரேசெட்டின் என்ற வேதி, புற்றுநோய் வராமல் தடுக்கும்.

மருத்துவப் பயன்கள்

உடல் வலிகளைக் குறைப்பது, மாதவிடாயை ஒழுங்குபடுத்துவது, உடலுக்கு ஊக்கமளிப்பது, புற்றுநோய்த் தடுப்பு, மூட்டு வலித் தடுப்பு, உயர் ரத்த அழுத்தத் தணிப்பு போன்றவற்றுக்கான ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருந்துகளில் குங்குமப்பூ பயன்படுகிறது. இருமல், தூக்கமின்மை, தோல் வறட்சி போன்ற கோளாறுகளுக்குக் குணமளிக்கிறது. ரத்தத்தைச் சுத்தி செய்கிறது. நறுமணப் பொருட்களிலும் சாயங்களிலும் சேர்க்கப்படுகிறது. கேக்குகள், மிட்டாய்கள், பாயசம் போன்ற இனிப்புகளில் கலக்கப்படுகிறது.

கலப்படத்தை அறிவது எப்படி?

சோளக் கொண்டையினுள்ளிருக்கிற குஞ்சத்தை உலர்த்திச் சாயமேற்றி, வாசனையூட்டி போலியாகவும் குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது. அது அசலைவிடத் தடித்த இழைகளாயிருக்கும், விலையும் மிகக் குறைவாயிருக்கும். தூய குங்குமப் பூவை விரல்களால் தேய்த்தால் எண்ணெய்ப் பசை தெரியும். அதன் மணம், நிறம், தன்மை ஆகியவை தனித்தன்மையுள்ளவை. வெதுவெதுப்பான நீரில் போலி குங்குமப்பூவின் சாயம் வெளுத்துவிடும். அது மூழ்கி, நீரின் அடியில் போய்த் தங்கும். தூய குங்குமப்பூ சற்று நேரம் மிதந்துவிட்டே மூழ்கும். அதன் நிறமும் அதிகமாக மங்காது. அதில் சில துளிகள் கந்தக அமிலத்தை விட்டால் அது முதலில் நீல நிறம் காட்டி, படிப்படியாகக் கருஞ்சிவப்பாகவும் இறுதியில் பிரகாசமான ரோஸ் சிவப்பாகவும் நிறம் மாறும்.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x