Last Updated : 29 Aug, 2022 06:45 AM

 

Published : 29 Aug 2022 06:45 AM
Last Updated : 29 Aug 2022 06:45 AM

சுதந்திரச் சுடர்கள்| மகளிர்: நிலமற்றவர்களுக்கு நிலம்

சமூக அநீதிக்கு எதிராகவும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்துவருபவர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன். பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சர்வோதய இயக்கத்தில் இணைந்தார்.

காந்தியவாதியான ஜெகநாதனைச் சந்திக்கும் சூழலை அது ஏற்படுத்தித்தந்தது. சமூக அக்கறை இருவரையும் இணைத்தது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து, அதை நிறைவேற்றிய லட்சியத் தம்பதி இவர்கள்.

காந்தியின் ஆன்மிகக் குருவான வினோபா பாவே வட இந்தியாவில் செயல்படுத்திய பூமிதான இயக்கம், பாதயாத்திரை (தங்கள் நிலத்தில் ஆறில் ஒரு பங்கை நிலமற்றவர்களுக்குத் தர வலியுறுத்தி நிலவுடைமையாளர்களைச் சந்திக்கும் யாத்திரை) போன்றவற்றில் ஜெகநாதன் பங்கேற்றார். அவர் தமிழ்நாடு திரும்பியதும் கிருஷ்ணம்மாளுடன் இணைந்து அந்தத் திட்டத்தை இங்கே செயல்படுத்தினார்.

கிராமங்களில்தான் இந்தியாவின் ஆன்மா இருக்கிறது என்கிற காந்தியின் கொள்கையைப் பின்பற்றியதால் கிராம மக்களிடையே இவர்கள் பணியாற்றினர். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று நினைத்தனர். அதன் ஒரு பகுதிதான் பூமிதான இயக்கம்.

1953 முதல் 1967 வரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தத் திட்டத்தின் மூலம் கிடைத்த காடும் கரம்புமான தரிசு நிலத்தைப் பண்படுத்தி விவசாய நிலமாக்கும் நோக்கத்துடன் 1968இல் ‘சர்வ சேவா விவசாயிகள் சங்கம்’ இந்தத் தம்பதியால் தொடங்கப்பட்டது.

இந்தச் சங்கத்தை கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் தம்பதி தொடங்கிய அதே ஆண்டில் நடைபெற்ற ஒரு கொடூர நிகழ்வு அவர்களின் பாதையை மாற்றியது. அன்றைய தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணியில் பெண்களும் குழந்தைகளுமாக 42 பேர் நிலவுடைமையாளர்களால் எரித்துக் கொல்லப்பட்டனர். அங்கே சென்ற இந்தத் தம்பதியினர் பாதிக்கப்பட்ட விவசாயக் கூலிகள் மத்தியில் வேலை செய்யத் தொடங்கினர்.

விவசாயக் கூலிகளை நிலவுடைமையாளர்கள் ஆக்கும் முனைப்புடன் 1981இல் ‘லாஃப்டி’ என்னும் அமைப்பை இவர்கள் தொடங்கினர். நிலவுடைமையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த அமைப்பு பாலமாகச் செயல்பட்டது. ஏழைகள் நிலத்தை வாங்குவதற்கு ஏதுவாகக் கடனுதவி பெறும் வழிகளை ஏற்படுத்தித்தரும் கூட்டுறவு அமைப்பாகவும் ‘லாஃப்டி’ செயல்பட்டது.

தமிழகத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நிலம் ஏழைகளுக்குப் போய்ச்சேர இந்த அமைப்பு உதவியது. பிஹாரில் 32 ஆயிரம் ஏக்கர் நிலம் பட்டியலினத்தவருக்குக் கிடைக்கவும் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் தம்பதி உதவியுள்ளனர்.

மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலாக அமைந்த இறால் பண்ணைகளுக்கு எதிராக ‘லாஃப்டி’ உறுப்பினர்களுடன் சேர்ந்து இவர்கள் போராடினர். தடியடி, குடிசை எரிப்பு, பொய்க் குற்றச்சாட்டு போன்றவற்றையெல்லாம் மீறி அகிம்சை வழியில் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் நிறுவனம் (NEERI) இதில் தலையிட்டு ஆய்வு செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிடும்வரை, இவர்களின் போராட்டம் தொடர்ந்தது. 2013இல் ஜெகநாதன் மறைந்த பிறகும் தன் சமூகப் பணிகளைத் தொடர்ந்துவருகிறார் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்.

- ப்ரதிமா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x