Published : 20 Jun 2014 11:11 AM
Last Updated : 20 Jun 2014 11:11 AM
உலகின் ஏதாவது ஒரு மூலையில் போர் நடந்துகொண்டே இருக்கிறது. போரின் கோரக் கரங்களிலிருந்து உயிர்பிழைக்க, குடும்பம்குடும்பமாக மக்கள் இடம்விட்டு இடம் செல்ல நேர்கிறது. ஒவ்வொரு நிமிடமும் எட்டுப் பேர் தங்கள் நாட்டைவிட்டு அகதிகளாக வேற்றிடம் தஞ்சம் புகுகின்றனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. இத்தகைய அகதிகளின் நிலைபற்றிய ஒரு ஆய் வரங்கை ஐ.நா. 1951-ல் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக 2000-ல் ஐ.நா. இயற்றிய ஒரு தீர்மானத்தில் 1951 கூட்டத்தின் 50-வது ஆண்டுவிழாவை ஒட்டி, ஜூன் 20-ம் தேதியை அகதிகளுக்கான ஒரு உலக நாளாக அறிவித்ததையொட்டி, 2001 முதல் அகதிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
உலகத்தில் 2011-ம் ஆண்டு வரை அகதிகளாக மாறும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள் சுமார் 4 கோடியே 33 லட்சம் பேர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் குழந்தைகள். தங்களுக்கு அடைக்கலம் தருமாறு பல்வேறு நாடுகளுக்கு அகதிகள் விண்ணப்பம் அளித்துள்ளனர். 171 நாடுகளில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 100 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டுக்குள்ளேயே அகதிகளாக இடம் பெயர்பவர்களும் உள்ளனர். அவர்களுக்கும் ஐ.நா. உதவிசெய்கிறது. 64 நாடுகளில் வசிக்கும் 35 லட்சம் பேரை நாடற்ற மனிதர்கள் என்று ஐ.நா. அடையாளம் கண்டுள்ளது. உலக அளவில் அவர்களது எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. தெரிவித்துள்ளது. பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகள் இந்தியாவிலும் உண்டு.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் அகதியானவர்கள், வங்கதேசப் போர், ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், திபெத் அகதிகள், பர்மா அகதிகள், இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் இந்தியாவில் உள்ள அகதிகளில் முக்கியமானவர்கள். நாகரிகம் வளராத காலத்தில் உணவுக்காகப் புதிய இடங்களைத் தேடிச்சென்ற மனிதர்கள், இன்று உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலைந்துதிரிகிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT