Published : 20 Oct 2016 09:26 AM
Last Updated : 20 Oct 2016 09:26 AM

காஷ்மீருக்குத் தேவை புதிய சூழலுக்கேற்ற புதிய தீர்வுகள்!

காஷ்மீரின் இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம், முழுக்க முழுக்க பாகிஸ்தானும் இந்தியாவின் மோசமான நிர்வாகமும்தான் கடந்த காலப் போர்களிலிருந்து கிடைத்த பாடங்கள், பயன்படுத்திய ராணுவ உத்திகள், தோன்றிய கருத்துகள் அடிப்படையில் ராணுவத் தளபதிகள் மட்டும் இப்போதைய மோதல்களில் ஈடுபடவில்லை; மிகவும் மோசமான நெருக்கடியை ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சந்தித்துக்கொண்டிருப்பதால், நாட்டின் தலைநகர் டெல்லி, மாநிலத் தலைநகர் நகர் ஆகியவற்றிலும் எண்ண அலைகளுடனும் கருத்து மோதல்களுடனும் தீர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். எல்லா தரப்பையும் சேர்ந்த அரசியல் தலைவர்களும் ராணுவ வியூக வகுப்பாளர்களும் உளவுத் துறை அதிகாரிகளும் மற்றவர்களும், ‘காஷ்மீரின் இப்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம், முழுக்க முழுக்க பாகிஸ்தானும் இந்தியாவின் மோசமான நிர்வாகமும்தான்’ என்ற ஒரே முடிவுக்கு வந்துள்ளனர்.

கடந்த கால நிலைமைகளையும் இப்போதைய யதார்த்த சூழலையும் பிரித்துப் பார்க்காத எவரையும் வரலாறு மன்னிக்காது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவாதத்துக்கும் மோதலுக்கும் உரிய விஷயமாக காஷ்மீர் திகழ்கிறது. காஷ்மீரில், பாகிஸ்தான் என்ன செய்கிறது என்பதைத் தொடர்ந்து கவனிப்பதே நம்முடைய உளவு அமைப்புகளுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் நிரந்தர வேலையாகிவிட்டது. மூன்று போர்களும் கணக்கற்ற மோதல்களும் நடந்தும் கூட காஷ்மீரில் விஷமம் செய்வதி லிருந்து பாகிஸ்தானை விலக்க முடியவில்லை.

எவருடனும் சேராத தீவிரவாதிகள்

அனந்தநாக் மாவட்டத்தின் கோகர்ணாக் என்ற இடத்தில் ஜூலை 8-ம் நாள் புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், பழைய காலமாக இருந்தால் ஒரு பொறியாகக் கிளம்பி, பிறகு அடங்கியிருக்கும். அப்படிப்பட்ட சந்தர்ப் பங்களில் பாகிஸ்தானின் பங்களிப்பும் நிச்சயம் அதில் இருக்கும். ஆனால், இந்த முறை இவ்வளவு நீண்ட காலத்துக்குக் கல்லெறிதலும் இளைஞர்களின் கிளர்ச்சியும் நீடிப்பதற்கு உண்மையான காரணங்கள் என்ன, இந்தச் சூழலுக்கு யார் காரணம் என்று நாம், நமக்குள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

100 நாட்களுக்கும் மேலாகத் தினமும் கிளர்ச்சிகள் நடக்கின்றன; 70 நாட்களுக்கும் மேல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்திருக்கிறது. பாதுகாப்புப் படையினர் உட்பட மோதல்களில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது. அசாதாரணமான சூழல் நிலவுவதை இவை காட்டுகின்றன. லஷ்கர்-இ-தொய்பா அல்லது ஜெய்ஷ்-இ-முகம்மது இவற்றில் ஈடுபடுகின்றன என்பதைக் காட்டும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஹிஸ்புல் முஜாஹிதீன் தொண்டர்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் தென்படுகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள் எந்த அமைப்பிலும் சேராத, படித்த, வேலை கிடைக்காத இளைஞர்கள். கல் வீசும் போராட்டக்காரர்களில் சிலருடைய வயது 10 முதல் 12 வரைதான் இருக்கும்.

எந்த அமைப்பிலும் சேராதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது புதிய அம்சமாகத் தெரிகிறது. இதற்கு முன்னால் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் இப்படிப் பங்கேற்பது உண்டு. 1988-க்குப் பிறகு வெளிநாட்டுத் தீவிரவாதிகள் காஷ்மீருக்கு வருவதும் வன்செயல்களில் ஈடுபடுவதும் நமக்குப் பழகிப்போன விஷயம். 1980-களில் ஆப்கானிஸ்தானத்து ஜிகாதிகள் காஷ்மீர் கிளர்ச்சிக்காரர்களின் கருத்துகளைக் கவர்ந்தனர். அதன் விளைவாக, 1990-கள் வரை போராட்டம் தொடர்ந்தது. ஆப்கானிஸ்தானில் போர் முடிந்துவிட்டதால் அங்கிருந்து திரும்பிய ஜிகாதிகள் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளில் சேர்ந்து கொண்டனர். பாகிஸ்தானிடமிருந்து ஆதரவும் உத்வேகமும் பெற்ற உள்நாட்டு ஹிஸ்புல் முஜாஹிதீன்களும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டனர். ஹிஸ்புல் முஜாஹிதீன்கள் காஷ்மீர இளைஞர்களின் விருப்பங்களை அதிகம் உள்வாங்கியவர்கள். 2000-க்குப் பிறகு, பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் ஹிஸ்புல் முஜாஹிதீன்களைவிட அதிக செல்வாக்கைப் பெற்றன.

அப்போது பாதுகாப்புப் படையினர் வெளிநாட்டுத் தீவிரவாதிகளைக் கடுமை யாக எதிர்த்துச் சண்டையிட்டபோதும், ஹிஸ்புல் முஜாஹிதீன்களைப் பேச்சுக்கு வருமாறு வற்புறுத்திக்கொண்டே இருந் தனர். 1988 முதல் பதவியிலிருந்த எல்லா பிரதமர்களும் - வாஜ்பாய், மன்மோகன் முக்கியமானவர்கள் - பாகிஸ்தானுக்கு நட்புக்கரம் நீட்டிக்கொண்டே இருந்தனர். இதற்கு இருவிதமான பலன்களும் கிடைத்தன. நிலைமை கட்டுமீறாமல் இருக்க அது உதவியது. காஷ்மீர் இளைஞர்களை அணுகியது நல்ல பலனைக் கொடுத்தது. நல்ல வேலை வாய்ப்பு, பொருளாதாரப் பலன்கள், மேம்படுத்தப்பட்ட தகவல்தொடர்பு வசதி களை இளைஞர்கள் நாடினர்.

மாற்றத்துக்கான அறிகுறிகள்

முன்பிருந்த அதே அதிருப்தியும் கிளர்ச்சிகளும்தான் இப்போதும் தொடர் கின்றன என்று யாராவது நினைத்தால் அது தவறு. 2013 இறுதியிலிருந்து காஷ்மீரின் அரசியல் சூழல் மாறிவிட்டது. இதை மத்திய அரசு கவனிக்கத் தவறியது. இப்போதுகூடத் தரைக்கு அடியில் என்ன நடக்கிறது என்று கவனிக்க அரசு தவறிவருகிறது. இது மோசமான கட்டமாக மாறிவிடும் என்ற அச்சம் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சரியாகப் புரிந்துகொள்ள மேலும் அவகாசம் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. புர்ஹான் வானி யார்? அவரைத் தியாகியாக ஹிஸ்புல் முஜாஹிதீனால் எப்படிச் சித்தரிக்க முடிந்தது? அவரை எப்படி சே குவேராவுடன் ஒப்பிடுகிறார்கள்? குறுகிய காலத்தில் எப்படி சாதாரண உலோகம் தங்கமாக ஜொலிக்கிறது? காஷ்மீரத்தின் வன்செயல் வரலாற்றில் இப்படியொரு காட்சி அரங்கேறியதே கிடையாது. முப்பதாண்டு கால காஷ்மீர வன்முறை வரலாற்றில் புதிய திருப்பம் என்ன சொல்கிறது என்பதை நகரும் டெல்லியும் கவலையோடு ஆராய வேண்டிய கட்டம் இது. போராட்டத்தின் தன்மையும் மாறியுள்ளது, இதையும் ஆராய வேண்டும். வதந்திகள் வன்செயல்களாக உருவாவதல்ல இந்நிகழ்வுகள்.

புர்ஹான் வானியின் மரணம் மக்களிடமிருந்து இப்படியொரு ஆக்ரோ ஷத்தை வெளிக்கொணர்ந்தது ஏன் என்று அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தளபதிகள், சாமானிய மக்கள் என்று அனைவருமே யோசிக்க வேண்டும். பெரிய தலைவர்கள் யாருமே இல்லாமல் இந்த இயக்கம் தானாகவே வடிவமெடுத்து வளர்கிறது. காஷ்மீரத்தின் நிலத்தட்டுக்குக் கீழே நகர்ந்துள்ள அடுக்குகள் எப்படிப்பட்டவை என்று டெல்லியில் இருப்பவர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. எனவே, சமூக அறிவியலாளர்கள், உளவியலாளர்கள், ராணுவ வியூகம் வகுப்பவர்கள், அரசியல் அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்; நிலைமையை எப்படிச் சீராக்குவது என்று புதிய வழிகளை யோசிக்க வேண்டும்.

(கட்டுரையாளர் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்).

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x