Published : 25 Jun 2014 07:00 AM
Last Updated : 25 Jun 2014 07:00 AM
ஜுன் 24 - எம்.எஸ்.வி-யின் 86-வது பிறந்த நாள்
எம்.எஸ்.வி-யின் பாடல்கள், ஒன்று உங்கள் கவலையைக் குறைக்கும் அல்லது பல மடங்காக அதிகரித்துவிடும்.
தொலைக்காட்சிகள் அவ்வளவாகப் புழக்கத்துக்கு வராத காலத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் கடந்துசெல்லும் தெருவின் ஏதோ ஒரு ஓட்டு வீட்டின் வானொலியிலிருந்து கசிந்து சாலைக்கு வருகிறது ஒரு பாடல். சற்று வருத்தம் தோய்ந்த மனநிலையில் இருக்கும் உங்களிடம் வந்தடையும் அந்தப் பாடல், ஒன்று உங்கள் கவலையைக் குறைக்கும் அல்லது பல மடங்காக அதிகரித்துவிடும். இந்த மாயங்களைச் செய்யும் பாடலை உருவாக்கிய, சிறிய உருவம் கொண்ட மாபெரும் கலைஞனுக்கு, அது எந்த ஆண்டு வெளியான படம் என்பதுகூட நினைவிருக்காது. கொஞ்சமா… ஆயிரக் கணக்கான பாடல்கள் அல்லவா? எத்தனை இனிமையான சாதனை?
விவிதபாரதியில் நேயர்கள் கடிதங்களை வாசிக்கும் குரல், “கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு இசை…” என்றவுடன் உங்கள் மனம் ‘எம்.எஸ். விஸ்வநாதன்' என்று அனிச்சையாக அந்தக் கணநேர வெற்றிடத்தை நிரப்பும். கண்ணதாசனும் எம்.எஸ்.வி-யும் ஒரே தேதியில் பிறந்தவர்கள் என்பது இயற்கையின் உன்னதமான நிகழ்தகவு என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தானோ என்னவோ அந்த மேதைகள் இணைந்து படைத்த பாடல்களெல்லாம் ஆவணங்கள், சாட்சிகளின் அவசியமின்றியே தமிழர்களின் சொத்துக்களாகிவிட்டன.
மூன்று தலைமுறைகளையும் தாண்டி தமிழர்கள் இசை, பாடல் ஆகிய சமாச்சாரங்களில் பரிச்சயம் கொண்டவர்களாக இருப்பதற்கு மிக முக்கியக் காரணி எம்.எஸ்.வி. நேற்றுடன் 86-வது வயதை பூர்த்திசெய்துள்ள அந்த மேதை, கால எல்லையற்ற இசையுலகில் நிச்சயம் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நிற்பார்.
அழகின் இசை
‘சித்திரமே நில்லடி.. முத்தமிட்டால்.. என்..ன்ன்..னடி…’ என்று தார்மீக உரிமையைக் காதலியிடம் காதலன் கேட்கும்போது, நாணத்துடன் மறுத்து நடக்கும் நாயகியின் அசைவுக்கு ஏற்ப அக்கார்டியன் இசைக் கருவியை இழைய விட்டிருக்கும் எம்.எஸ்.வி-யின் ரசனையை என்னவென்று சொல்வது! ‘புதிய பறவை’ படத்தின் ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடலில் நாயகியின் மனதில் பொங்கும் காதலுக்கு வாழ்த்து சொல்லும் தோழிகள்போல் வயலின்களும் புல்லாங்குழலும் தொடர்ந்து இசைப்பது அழகு.
கூடவே இருந்த கண்ணதாசன்
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி தொடங்கி ரஜினி, கமலின் தொடக்க காலம் முதல் அசைக்க முடியாத இசைச் சக்ரவர்த்தியாக இருந்தவர் அவர். இன்றும் பலரது இரவுகளில் கால ஓட்டத்தைப் பின்னுக்கு இழுத்து நினைவுகளில் திளைக்க வைக்கும் இசை அவருடையது.
80-களில் இளையராஜாவின் பாடல்களையும், எம்.எஸ்.வி-யின் பாடல்களையும் இணைந்தே உள்வாங்கி வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்த பலரும்கூட, மெட்டு என்றால் அது விஸ்வநாதன்தான் என்ற கருத்தை மனமார ஏற்றுக்கொள்வார்கள். அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் எம்.எஸ்.வி-யின் சாம்ராஜ்யத்தை, கால அடிப்படையில் மூன்றாகப் பிரித்துப் பார்க்க முடிகிறது. டி.கே.ராமமூர்த்தியின் இசைக் கூட்டணியில் அவர் தந்த பாடல்கள் முதலாவது காலகட்டம், அவரது பிரிவுக்குப் பின்னர் சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்ற முக்கிய நடிகர்களின் படங்களுக்குத் தந்த பாடல்கள் இரண்டாவது காலகட்டம், 70-களின் இறுதியில் கமல், ரஜினி போன்ற ‘புதுமுக' நடிகர்களின் படங்களுக்கு உருவாக்கிய பாடல்கள் அதாவது, இளையராஜாவின் ராஜ்ஜியம் வளரத் தொடங்கிய காலகட்டத்தில் தந்த பாடல்கள் மூன்றாவது காலகட்டம் என்று வகைப்படுத்தலாம். நடிகர்கள், இயக்குநர்கள் மாறினாலும் தனது கடைசிக் காலம் வரை எம்.எஸ்.வி-யின் இசைக்குத் துணையாக நின்றவர் கண்ணதாசன்தான்.
பீம்சிங், ஸ்ரீதர்…
1960-களில் பீம்சிங்குடன் இணைந்து எம்.எஸ்.வி. தந்த ‘ப' வரிசைப் படங்களின் பாடல்களை மட்டுமே வைத்து அவரது இசைத் திறமையை எடைபோடலாம். காதல், பாசம், குடும்ப உறவுகளில் சிக்கல், சோகம், தத்துவம் என்று பீம்சிங்கின் படங்கள் பேசிய அத்தனை விஷயங்களையும் இசையால் மொழிபெயர்த்தார் எம்.எஸ்.வி. ‘பாசமலர்' படத்தில் ‘மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்' பாடலில், பாசமுள்ள அண்ணனின் கற்பனையில் விரியும் அந்த அன்புலகத்தை இசையால் செதுக்கியிருப்பார். ‘படித்தால் மட்டும் போதுமா?' படத்தின் ‘பொன்னொன்று கண்டேன்' பாடலைக் கேட்பவர்கள், சிவாஜி, பாலாஜியுடன் இணைந்து மூன்றாவது நபராக இசையெனும் அந்த இன்பக்குளத்தில் நீந்துவது நிச்சயம்.
தமிழின் புதுமை இயக்குநரான ஸ்ரீதருடனான முதல் படமாக அமைந்த ‘சுமைதாங்கி'யில், ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' பாடல் இன்றும் சோர்வுறும் மனதை வருடும் இனிய பாடல். அந்தப் பாடலின் நிரவல் இசையில் உயர்ந்த லட்சியங்களின் உன்னதத்தை நம்மால் உணர முடியும். அதே படத்தின் ‘மயக்கமா? கலக்கமா?' பாடலில் சோர்வுற்ற மனதின் தனிமையை, அதன் அளவற்ற இசைக் கருவிகளால் எழுதியிருப்பார் எம்.எஸ்.வி. அந்த இணையின் மிகப் பெரிய வெற்றிப் படமான ‘காதலிக்க நேரமில்லை'யில், ‘விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலில் இருக்கும் இளமைத் துள்ளலும், ‘ராக்-அண்ட்' ரோலும் திரைக்கதையின் வேகத்தையே இரட்டிப்பாக்கிவிடும். அந்தப் படத்தின் ‘அனுபவம் புதுமை', 'என்ன பார்வை… உந்தன் பார்வை' பாடல்களைக் கடந்துவராத (அந்தக் கால) காதலர்கள் இருக்க முடியாது.
எண்பதுகளில் எம்.எஸ்.வி.
பாலசந்தருடனான அவரது கூட்டணி மிகப் பெரிய வெற்றியடைந்தது. பல்வேறு சூழலுக்கும் இசையமைக்கும் சவாலை எம்.எஸ்.வி-க்குத் தந்தார் பாலசந்தர். அவர்கள் கூட்டணியின் மிகப் பெரிய வெற்றிப் படமான ‘நினைத்தாலே இனிக்கும்' படத்தில், ரஜினி போடும் கராத்தே சண்டைக்கும் ஒரு பாடல் உண்டு. ‘சண்டப் பிரசண்டம்… டிஷ்யூம்… டிஷ்யூம்' என்று எஸ்.பி.பி-யின் உறுமலுடன் அதிரும் பாடல் அது. ‘யாதும் ஊரே’ பாடலில் சாக்ஸபோன் முழங்கும் அந்தக் கம்பீர முகப்பு இசைக்கு சிங்கப்பூரின் கடற்கரையும் இயற்கை அழகும் காட்டப்படும்போது மனம் சிலிர்க்கும். ஜெயப்பிரதாவின் மரணம் உறுதியாகிவிட்ட பின்னர், தாங்க முடியாத துயரம் தோய்ந்த முகங்களோடு முன்பு சுற்றிப்பார்த்த இடங்களைப் பார்த்தபடி கமலும் ஜெயப்ரதாவும் உறைந்து நிற்க, பின்னணியில் எம்.எஸ்.வி-யின் விரலசைவில் எஸ்.பி.பி- ஜானகி பாடும் ‘தானனன்ன னன… நினைத்தாலே இனிக்கும்' பாடலுக்கு ஒரு மாற்று உண்டா? பாடல் முழுவதும் பல்லவிதான். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு ராகத்தில் அமைத்திருப்பார் எம்.எஸ்.வி.
சிரஞ்சீவி நடித்த ‘47 நாட்கள்' படத்தில் வரும் ‘மான் கண்ட சொர்க்கங்கள்' பாடல், எட்டு நிமிடங்களுக்கு நீளும். ‘தாமரை பூவென்றான்… காகிதப் பூவானான்' என்று கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி., எஸ்.பி.பி. இருவரும் படத்தின் நாயகிக்காக உருகியிருப்பார்கள். இளம் தலைமுறையினர் அறிந்திருக்காத அற்புதமான புதையல் அந்தப் பாடல்.
80-களில் அவர் தந்த குறிப்பிடத்தகுந்த பாடல்களில் அக்னிசாட்சி படத்தில் வரும் ‘கனாக் காணும் கண்கள்' முக்கியமானது. சரிதாவின் மனதில் எழும் விசித்திர சித்திரங்களின் கோரத்தைத் தன் இசையால் உருவகித்திருப்பார் எம்.எஸ்.வி. இடையில் பாந்தமான குரலுடன் எஸ்.பி.பி. பாடும் அந்த மெட்டு, நம் மனதை நனைத்துவிடும்.
தனி இசைத் தொகுப்பாக, எம்.எஸ்.வி. வெளியிட்ட, ‘கிருஷ்ண கானம்' தொகுப்பில் இடம்பெற்ற ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' இன்றும் பல இசை நிகழ்ச்சிகளின் தொடக்கப் பாடலாக ஒலிக்கிறது. ‘ஆயர்பாடி மாளிகையில்’ என்று கண்ணனுக்காக அவர் இசைத்த மற்றொரு பாடல், இன்றும் பலரை நிம்மதியாக உறங்கவைக்கிறது. இசையின் யோகநிலை அதுதானே!
- வெ. சந்திரமோகன், chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT