Last Updated : 07 Oct, 2016 09:32 AM

 

Published : 07 Oct 2016 09:32 AM
Last Updated : 07 Oct 2016 09:32 AM

கார்த்திக் மரணமும் கண்ணகி நகர் காவல் நிலையமும்

அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையாததால் ஏற்படும் மன அழுத்தம் மனிதத் தன்மையைக் குறைக்கும். அதை எதிர்த்துக் கடக்கிற மனநிலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அரசால் புறக்கணிக்கப் படுகிற எல்லோரும் கழுத்துச் சங்கிலிகளை அறுக்கப் புறப்படுவதில்லை. சிலர் தவறான வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் தவறில் நமக்கும் பங்கிருக்கிறது!

காவல் நிலையத்தில் இரண்டு பேரை அடித்தே கொன்றுவிட்டார்கள் என்று கண்ணகி நகரிலிருந்து பதற்றத்தோடு தகவல் வந்தபோது, நான் டீக்கடையில் நின்றேன். “அவனுங்க செயின் அறுத்திருக்கிறானுங்க. போலீஸாண்ட மாட்டிக்கிட்டானுங்க. போலீஸ் ‘வழக்கப்படி’ விசாரிச்சுருக்கு. டாக்டராண்ட கொண்டுபோறப்போ கார்த்திக்குங்குற பையன் செத்துட்டாப்ல. இன்னொரு ஆளு சீரியஸா இருக்கப்ல” என்றார்கள் நண்பர்கள்.

கண்ணகி நகரில் எது நடந்தாலும் ஆவேசமாக வாதாடுவார் இசையரசு எனும் நண்பர். “இந்த மாதிரி குற்றம் செய்றவங்கள எப்படிப்பா ஆதரிக்கிறே?” என்றேன். பொங்கி எழுந்தார் அவர்.

“சென்னையில இருக்கிற 70 குடிசைப் பகுதி ஜனங்களக் கொண்டாந்து ஒண்ணாப் போட்டிருக்காங்க இங்க. முதல்ல 300 குடும்பம். இப்போ 17 ஆயிரம் குடும்பங்க.

ரிக்‌ஷா ஓட்டுறது, வீடுகள்ல பாத்திரம் கழுவுறதுனு டவுனுக்குள்ள சின்னச் சின்ன வேலைங்கள செஞ்சவங்கள 20 கிலோ மீட்டரு தள்ளிக் கொண்டாந்து போட்டுட்டுப் போய்ட்டாங்க. பழைய வேலைக்குப் போகணும்னா போய்வர்றதே பெரும் கஷ்டம். இங்கயும் எந்த வேலையும் இல்லை. எல்லாப் பிள்ளைங்களும் படிக்கற அளவுக்கு ஸ்கூல் இல்ல. ஜனங்களுக்குன்னு ஒரே ஒரு சமூக நலக்கூடம் இருந்துச்சு. அதையும் போலீஸ்காரங்க எடுத்துக்கிட்டு, போலீஸ் ஸ்டேஷனா மாத்திக்கிட்டாங்க. குழந்தைகளுக்காக 25 அங்கன்வாடிகள் இருக்க வேண்டிய இடத்துல 7தான் இருக்கு” என்றார்.

“இப்போ போலீஸ் பிடியில செத்த பையன்கூட, சிந்தாதிரிப்பேட்டை சேரிலருந்து வந்தவன்தான். அவன் மேல ஏற்கெனவே போலீஸ் கேஸ் இருந்தா, அப்படிப்பட்டவங்கள போலீஸ் கண்காணிப்புல வைக்கட்டுமே. எதுக்கு கண்டும் காணாம விடறாங்க? அதுக்கப்பறம் புடிச்சு அடிச்சுக் கொல்றாங்க? எவனும் ஆசைப்பட்டுக் குத்தம் பண்றது இல்லப்பா. செய்றதுக்கு வேல இல்ல. பொழைக்கறதுக்கு வழி இல்ல. ஆனா, எதிர்ல உலகம் பளபளப்பா, பணக்காரத்தனமா எதப்பத்தியும் கவலப்படாம வாழுது. அவன் எப்படிப்பா சமூகத்த நேசிப்பான்? வந்து புடுங்கத்தான் செய்வான்? நீங்க எத்தன பேரைப் புடுங்காமத் தடுப்பீங்க? எத்தனை பேரை அடிச்சுக் கொல்வீங்க? அரசுக்கு இதுல எந்தப் பொறுப்பும் இல்லையா?” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

கான்கிரீட் பொந்துகள்

இது ஒற்றைக் குரல் அல்ல. ‘பாடம்’ நாராயணன் போன்ற சமூகநலச் செயல்பாட்டாளர்களின் குரலும் இதுதான். “நகரின் மையத்துக்குள் இருக்கும் சேரிகளை அகற்றி, கண்ணகி நகர் போன்ற இடங்களில் குடியமர்த்தி ‘மெகா சேரி’களைத்தான் அரசு உருவாக்குகிறது” என்கிறார் அவர். நீதிமன்றத்தின் படிகளில் இந்த விவாதமும் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறது. இந்த விவாதம் தமிழுக்குப் புதுச் சொற்களையும் தருகிறது. ‘எட்டு அடி அகலம், எட்டு அடி நீளம்’ என்ற அளவில் கட்டப்பட்ட ஆரம்ப கால கண்ணகி நகர் வீடுகளுக்கு அவர் வைத்த பெயர் ‘கான்கிரீட் பொந்துகள்’. இவர் போலப் பலர் தீர்வு கேட்டு செயல்படுகிறார்கள். பல வடிவப் போராட்டங்கள். எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை அரசு.

‘குடிசைகள் இல்லாத இந்தியாவை 2007- க்குள் உருவாக்குவோம்’ என்ற நல்ல நோக்கத்தோடு மத்திய அரசு ஆரம்பித்த திட்டத்தின் விளைவுதான் இது. ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புதுப்பித்தல் இயக்கம். லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை விழுங்கிய பூதம். திட்டம் முடிந்துவிட்டது. கணக்கு வழக்கும் முடிந்துவிட்டது. வைத்தியம் நோயை அதிகமாக்கிவிட்டது.

சேரி மக்களுக்கு வீடுகள் வழங்குவோம். வேறு வழியே இல்லையென்றால்தான் சேரிகளை அகற்றுவோம். சேரிகளை மேம்படுத்துவதுதான் முதல் பணி என்ற வாக்குறுதிகள் எல்லாம் அந்தத் திட்டத்தின் காகிதத்தில்தான் இருந்தன. நடைமுறையில் மக்கள் மீது அரசே புல்டோசர் போர் தொடுத்தது. புல்டோசர் அள்ளிப் போட்டது பிய்ந்த குடிசைகளை மட்டுமல்ல, நொறுங்கிப் போன பல குடும்பங்களின் இடிபாடுகளை யும்தான்.

அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையாததால் ஏற்படும் மன அழுத்தம் மனிதத் தன்மையைக் குறைக்கும். அதை எதிர்த்துக் கடக்கிற மனநிலை எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அரசால் புறக்கணிக்கப்படுகிற எல்லோரும் கழுத்துச் சங்கிலிகளை அறுக்கப் புறப்படுவதில்லை. சிலர் தவறான வழியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அந்தத் தவறில் நமக்கும் பங்கிருக்கிறது.

முதலில் சென்னை நகரின் எல்லையைத் தாண்டி இருந்தது கண்ணகி நகர். சென்னை விரிவுபடுத்தப்பட்டபோது மீண்டும் சென்னைக்குள் வந்துவிட்டது. அந்தப் பகுதி முழுவதுமே ஒரு மாநகராட்சி வார்டாகத் தற்போது மாறியிருக்கிறது.

தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது அந்த வார்டு. மாநிலத்தின் வரவு - செலவு அறிக்கையில் 20% நிதியைத் தலித் மக்களின் தேவைக்காக ஒதுக்குகிற சடங்கு தமிழகத்தில் பல வருடங்களாக நடக்கிறது. பணம் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், வேறு என்ன வேண்டும்?

ஒரு லட்சத்துக்கும் மேலான மக்களில் இளைஞர், பெண்கள், குழந்தைகள், குடும்பத் தலைவர்கள் என்று ரகம் பிரித்து, அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வரும்வகையில் தனியான, சிறப்பான திட்டங்களை அமலாக்க வேண்டியதுதானே? சிறப்புக் கவனம் செலுத்த வேண்டிய பகுதியாக அறிவிக்க வேண்டியதுதானே?

‘அதெல்லாம் இதுங்களுக்குப் போதும்’ என்ற மனப்போக்கோடு விறைத்துக்கொண்டு நிற்கிறது - சமூக நலக்கூடத்தை ஆக்கிரமித்திருக்கும் காவல் துறைக் கட்டிடம். நம்முடைய பிரச்சினையின் உளவியல் குறியீடும் அதுதான்!

- த.நீதிராஜன், தொடர்புக்கு: neethirajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x