Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM

நொறுக்குத்தீனிக்கு எதிராகப் போர்

ஆரோக்கியமற்ற எதிர்காலத்தையும் பொருளாதாரப் பேரழிவையும் நொறுக்குத்தீனிகள் ஏற்படுத்திவிடும்

நொறுக்குத்தீனிகளை இடைவெளியின்றித் தின்று, மென்பானங்களை வரம்பின்றிக் குடிப்பதால் மாணவ, மாணவிகள் பெரும்பாலானோர் உடல்நலனைக் கெடுத்துக்கொள்கின்றனர். இது அமெரிக்காவுக்குப் பெரும் தலைவலி. இதுகுறித்து, நாடு முழுக்க இருந்த கவலையை அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் 'நாம் செயல்படுவோம்' என்ற இயக்கத்தைத் தொடங்கினோம். அடுத்த தலைமுறைக் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் திடமாகவும் வளர வேண்டும் என்ற அக்கறைதான் இதற்கு அடிப்படைக் காரணம்.

நொறுக்குத்தீனி கடைகள் X நல்ல உணவுக்கான கடைகள்

இந்த லட்சியத்தை எட்ட, எது சாத்தியமோ அதை நடைமுறைப்படுத்துவது என்ற முடிவை எடுத்தோம். ஆதாரங்களின் அடிப்படையில், அறிவியல்பூர்வமாகச் செயல்பட்டோம். பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் இப்போது உட் கொள்ளும் அளவைவிடக் குறைந்த அளவு சர்க் கரை, உப்பு, கொழுப்பே ஆரோக்கியத்துக்குப் போதும் என்ற வழிகாட்டலைப் பெற்றோம்.

பள்ளிக்கூடங்களுக்கு அருகில் ஆரோக்கியமான உணவு வகைகளை விற்கும் மளிகைக் கடைகள் குறைவாக இருப்பதாலும் நொறுக்குத்தீனிக் கடைகள் கணக்கின்றி இருப்பதாலும், வாய்க்கு ருசியாகவும், நடக்க வேண்டிய அவசியமின்றியும் கிடைக்கும் தீனிகளையே மாணவர் உண்கிறார்கள் என்றும் கண்டோம். பள்ளிக்கூடங்களுக்கு அருகில் நல்ல உணவு விற்கும் கடைகளை அதிகம் திறக்க வைத்தோம்.

நொறுக்குத்தீனிகளால் ஏற்படும் தீமைகள்குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விளக்கி, அவற்றைத் தவிர்க்குமாறு கூறிவருகிறோம். சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கவைக்கப்படும் இல்லங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் குழந்தைகளுக்கு விளையாட்டு உள்ளிட்ட உடல் உழைப்பு வேலையை அதிகப்படுத்தியிருக்கிறோம். பள்ளிக்கூடங்களில் சத்துள்ள நல்ல உணவை அளிக்கிறோம். இதன் பலன்களையும் பார்க்கத் தொடங்கி விட்டோம். உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சத்துள்ள உணவுகளைத் தயாரிக் கத் தொடங்கியிருக்கின்றன.

உருளைக்கிழங்கு வேண்டாம் பீட்சாவும் சாஸும்

“மகளிர், சிசுக்கள், குழந்தைகள் நலனுக்காக நாம் அமல்படுத்தும் திட்டங்களை டபிள்யூ.ஐ.சி. (Women, Infants, Children) திட்டங்கள் என்பார்கள். குறைந்த வருவாய்ப் பிரிவில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் அவர்களுக்குப் பிறக்கும் சிசுக்களுக்கும் அவர்களுக்கு ஏற்கெனவே பிறந் துள்ள குழந்தைகளுக்கும் சத்துள்ள உணவை வழங்குவதற்கு மத்திய அரசு இந்தத் திட்டத்தை அமல்படுத்துகிறது. குறைந்த வருவாய்ப் பிரிவினரால் விலைகொடுத்து வாங்க முடியாததை அரசு மையங்களில் வழங்குவதே இந்தத் திட்டம்.

“அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள், அவை உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தில் இப்போது கைவைக்கிறார்கள். வெள்ளை உருளைக்கிழங்கையும் சத்துணவாகச் சேர்க்க வேண்டும் என்கிறார்கள். உருளைக்கிழங்கில் பிரச்சினை ஏதுமில்லை. அரசு பணம் தராமல் மக்கள் தாங்களாகவே வாங்கிச் சாப்பிடுகிறார்கள். அதே வேளையில் சத்துள்ள காய்கறிகள், பழங்களை மக்கள் சாப்பிடுவதே இல்லை. அதனால்தான் இந்தத் திட்டத்தில் உருளைக்கிழங்கு கூடாது என்று மருத்துவக் கழகம் வலியுறுத்தியிருக்கிறது.

அரசின் பிரச்சாரம் காரணமாகவும் மையங்களில் தரப்படும் சத்துள்ள காய்கறி, பழங்கள், தானியங்கள் காரணமாகவும் குழந்தைகளின் ஊளைச் சதை குறைந்திருக்கிறது. தொந்தி கரைந்திருக்கிறது. உடல் மெலிந்து முறுக்கேறிவருகிறது. விளையாட்டுகளில் ஆர்வமாக ஈடுபடுகிறார்கள். குழந்தைகள் நல்ல உணவு சாப்பிடுவதற்காக, கிட்டத்தட்ட 58,000 கோடி ரூபாயைச் செலவிடுகிறோம். ஆனால், ‘இந்த ஊட்டச்சத்து உணவுத் திட்டம் கண்டிப்பாக அமல்செய்யப்படக் கூடாது. மாணவர்கள் விரும்பி னால் பிற தின்பண்டங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்கின்றனர் சில புண்ணியவான்கள். அவர்கள் சோடா கலந்த பானங்களையும் தர வேண்டும் என்கின்றனர். பீட்சாவுக்குத் தரும் சாஸில் சில காய்கறித் துண்டுகள் இருப்பதால் சத்துள்ள உணவாகவே அதைக் கருத வேண்டும் என்கிறார்கள்.

“நாட்டு நலனில் அவர்களுக்குள்ள அக்கறை அவ்வளவுதான். இன்றைய குழந்தைகள் நோஞ்சான்களாகவோ, நடக்க முடியாத குண்டோதரன் களாகவோ வளர்ந்தால், நாளை அது நாட்டின் சுகாதாரத்தைப் பாதிக்கும். அப்போது இதைவிட அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும். இப்போதே அமெரிக்கக் குழந்தையில் மூன்றில் ஒரு குழந்தைக்கு நீரிழிவுநோய் நிச்சயம் என்கிறார்கள். மூன்றில் ஒரு குழந்தை தேவைக்கும் மேற்பட்ட எடையுடனோ தொந்தியுடனோ இருக்கிறது. நீரிழிவு நோயுள்ளவர்களுக்காகவும் தொப்பை கொண்டவர்களுக்காகவும் ஆண்டுக்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடுகிறோம்.

“குழந்தைகளைப் பெற்றவர்கள் என்ற வகையில் காலையில் அவர்கள் நினைவாகவே கண்விழிக்கிறோம், பகல் முழுக்க அவர்களைப் பற்றியே சிந்திக்கிறோம், இரவில் படுக்கும்போதும் அவர்களுடைய நினைவாகவே படுக்கிறோம். நம்முடைய குழந்தைகளின் நலனுக்காக எதைச் செய்யும்போதும் நம்முடைய மருத்துவர்களும் நிபுணர்களும் சொல்வதை அப்படியே கேட்கிறோம். வாஷிங்டனில் உள்ள அரசியல் தலைவர்களும் இதையே பின்பற்ற வேண்டும்.

துரித உணவும் துன்பங்களும்

துரித உணவு என்று சற்று நாகரிகமாக அழைக்கப்படும் நொறுக்குத்தீனி அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியாவுக்குக் குடிபுகுந்து பல காலம் ஆகிவிட்டது. உடல் எடை அதிகரிப்பது முதல் இதய நோய் வரை பலவித பாதிப்புகளைத் தரும் இந்த உணவுப் பழக்கம், இந்தியாவில் குழந்தைகள், பெரியவர் பாகுபாடெல்லாம் இல்லாமல் பரவியுள்ளது. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி வளாகங்கள் முதல் பெரிய ஷாப்பிங் மால்கள்வரை பார்வையில் படும் எல்லா இடங்களிலும் குழந்தைகளின் கவனத்தை இந்த உணவு வகைகள் ஈர்க்கின்றன. பர்கர், பீட்சா, ஃப்ரைடு சிக்கன், நூடுல்ஸ், குளிர்பானங்கள் முதலான உணவு வகைகள், சுவையுடன் சேர்த்தே உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளிட்ட கடும் பாதிப்புகளை இலவசமாகத் தருகின்றன. இவற்றுக்கு எதிரான விழிப்புணர்வு வேண்டும் என்று மருத்துவர்களும், சுகாதார ஆர்வலர்களும் தொடர்ந்து குரலெழுப்பிவருகின்றனர். எனினும், பெருநகரங்கள் மட்டுமல்லாமல், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் இந்தப் பழக்கம் அதிகரித்தே வருகிறது. பொதுவாக, ஆறு முதல் பன்னிரண்டு வயதுவரையிலான காலகட்டம்தான் குழந்தைகளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. முக்கியமான அந்த வளர்ச்சிக் காலத்தில் நகர வாழ்க்கை, நாகரிகம் என்ற பெயரில் துரித உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு வாங்கித் தருவதைப் பெற்றோர் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.

மிஷேல் ஒபாமா, அமெரிக்காவின் முதல் குடிமகள்.

நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x