Last Updated : 18 Oct, 2016 09:29 AM

 

Published : 18 Oct 2016 09:29 AM
Last Updated : 18 Oct 2016 09:29 AM

வீழ்கிறார் ட்ரம்ப்?

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்க நெருங்க தனது நடவடிக்கைகள் மூலமே ஆதரவை இழந்துவருகிறார் ட்ரம்ப்

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் அமெரிக்க அதிபர் தேர்தல், இந்த வருடம் நவம்பர் 8 அன்று வரவிருக்கிறது. அமெரிக்காவில் கோடை முடிந்து இலையுதிர் காலம் தொடங்கி, குளிர் சற்றே தலைகாட்டத் தொடங்கிவிட்டது. ஆனால், தேர்தல் சூட்டில் நாடே தகிக்கிறது.

ட்ரம்ப் - ஹிலாரி. அமெரிக்காவின் இரண்டு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள். தத்தமது கட்சிக்குள் ஏனைய போட்டியாளர்களைப் பின்தள்ளி மேலே வர இருவருமே கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. ஹிலாரிக்குக் கடும் போட்டியாக இருந்த பெர்னி சாண்டர்ஸ், இப்போது அவருக்குத் துணையாக பிரச்சாரத்தில் நிற்கிறார். ட்ரம்பின் நிலை வேறு. உள்கட்சித் தேர்தலின்போது தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விவாதங்களிலும் ஊடகங்களிலும் சிறுமைப்படுத்தியதன் மூலம் அமெரிக்க அரசியலுக்குப் பரிச்சயமற்ற அநாகரிகத்தை அறிமுகப்படுத்தினார் ட்ரம்ப்.

ட்ரம்ப்பின் தடித்த வார்த்தைகள்

“இஸ்லாமியர்களை நாட்டுக்குள் விட மாட்டேன்; அண்டை நாடான மெக்சிகோவிலிருந்து வருபவர்கள் கொலைகாரர்கள்; பாலியல் வல்லுறவுக்காரர்கள்; அவர்களைத் தடுக்க நாட்டின் தென் எல்லையில் சுவர் கட்டுவேன், அதற்கான செலவை மெக்சிகோவே ஏற்றுக்கொள்ளும்படி செய்வேன். சீனாவுடனான வர்த்தக உறவுகளை அமெரிக்காவுக்குச் சாதகமாக மாற்றுவேன்; ஐஎஸ் பயங்கரவாதிகளை அழித்தொழிப்பேன்” என்றெல்லாம் அதிரடியாகப் பேசி, குடியரசுக் கட்சிக்குள் இருக்கும் தீவிர வலதுசாரிகளின் அதீத ஆதரவுடன் மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு, கட்சியின் அதிபர் வேட்பாளராக மேலே வந்தார். இதுவரை எந்தப் பதவியும் வகித்திராத ட்ரம்ப்புக்கு, அவர் அதிபர் வேட்பாளரானது அரசியலில் அவர் கண்ட உச்சம். அந்தக் கணத்திலிருந்து அதிபர் தேர்தல் எனும் பரமபத விளையாட்டில் ட்ரம்ப் கீழே இறங்கிக்கொண்டிருக்கிறார்.

அமெரிக்காவிலும் அதிபர் தேர்தல் வெற்றிக்குக் காரணமாக அமைவது அந்தந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் அல்ல. காரணம், பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் ஆதரவு கிட்டத்தட்ட சமமானதே. மதில் மேல் பூனையாக இருக்கும் தீர்மானமற்ற வாக்காளர்களே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. கிட்டத்தட்ட 30 வருட கால அனுபவம் இருக்கிறது என்றாலும், தனது கட்சியினரின் ஆதரவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஹிலாரியின் மீது மிகப் பெரிய நம்பிக்கையின்மை இருப்பது இந்த வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கருத்தெடுப்புகளிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. எனினும், ட்ரம்ப்பால் அதைத் தனக்கான சாதகமாக ஆக்கிக்கொள்ள முடியவில்லை.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கியமான தருணங்கள் வேட்பாளர்களுக்கிடையே நடத்தப்படும் விவாத மேடைகள். கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதியானதும் எந்த நாட்களில், யாரால், எங்கே விவாதங்கள் நடத்தப்படும் எனும் விவரம் அறிவிக்கப்படும். இந்த வருடத் தேர்தலில் மூன்று விவாதங்கள் நடத்தப்படும் என முடிவானது. ஒவ்வொரு விவாத நிகழ்வும் 90 நிமிடங்கள் நேரடி ஒளிபரப்பாக நடத்தப்படும். இதுவரை இரண்டு விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன. தொலைக்காட்சி தவிர்த்து, சமூக வலைதளங்களிலும் நேரடியாக இவை ஒளிபரப்ப, அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகெங்கும் 100 மில்லியன் பேருக்கும் மேற்பட்டோர் விவாதங்களை இம்முறை பார்த்தார்கள். மூன்றாவது விவாதம் நாளை (அக்டோபர் 19) லாஸ் வேகஸில் நடக்கிறது.

விவாதக் களத்துக்கு ஹிலாரி தேவைக்கும் அதிகமாகத் தயாராக வருவதான பிம்பம் உருவாகியிருக்கிறது. நேரெதிராக, ட்ரம்ப் எந்தத் தயாரிப்புமின்றி வந்து, பொத்தாம்பொதுவாகப் பேசுவதான, கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் எதிர்த் தரப்பை மட்டப்படுத்திப் பேசுவதையே உத்தியாகக் கொண்டிருப்பதான பிம்பம் உருவாகியிருக்கிறது.

ட்ரம்ப்பின் முதிர்ச்சியற்ற ஆளுமை

முதல் விவாதத்தை எம்பிசி தொலைக்காட்சிச் செய்தியாளரான லெஸ்டர் ஹோல்ட் நெறியாளராக முன்னின்று நடத்தினார். கேள்விகளுக்கு மேலோட்டமான பதில்களைச் சொன்னது மட்டுமல்லாமல், ஹிலாரி பதில் சொல்லும்போது பல முறை குறுக்கிட்டுப் பேசினார் ட்ரம்ப். விவாதம் முடியும் இறுதி சில நிமிடங்களில் ட்ரம்ப் பெண்களை இழிவாகச் சித்திரிக்கும் சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டார். 20 வருடங்களுக்கு முன் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலாவைச் சேர்ந்த அலிசியா மச்சோடா தொடர்பான சம்பவம் அது. அலிசியாவைத் தரக்குறைவான வார்த்தைகளில் வர்ணிக்கத் தொடங்கிய ட்ரம்ப் ஒருகட்டத்தில், “மிஸ்.பிக்கி, மிஸ்.ஹவுஸ்கீப்பிங்” என்றெல்லாம் விளித்தார். அப்போதே பலரும் முகம் சுளித்தனர். அதோடு விட்டிருந்தால்கூட சேதத்தைக் குறைத்திருக்கலாம். விவாதத்தில் கூறியவற்றை நியாயப்படுத்தும் வகையில் அன்றிரவே டிவிட்டரில் அலிசியாவைப் பற்றிய பதிவுகளைப் போட்டார். ட்ரம்பின் முதிர்ச்சியற்ற ஆளுமை பெரும் விவகாரமாக இதற்குப் பின் உருவெடுத்தது. இதனால் ஆவேசமடைந்த ட்ரம்ப், ஹிலாரியின் கணவரும் முன்னாள் அதிபருமான கிளின்டனின் லீலைகளை இனி எடுத்துவிடப்போகிறேன் என்று மிரட்ட ஆரம்பித்தது மேலும் அவருடைய செல்வாக்கைச் சரித்தது.

இரண்டாவது விவாதத்துக்குச் சில நாட்களுக்கு முன் வெளியான ஒரு ஆடியோ ட்ரம்ப்பின் அதிபர் கனவுக்கு மேலும் பின்னடைவாக அமைந்தது. நடந்தது இதுதான். 10 வருடங்களுக்கு முன், ‘ஆக்ஸஸ் ஹாலிவுட்’ (Access Hollywood) நிகழ்ச்சியில் பங்கேற்க நிகழ்ச்சியின் அமைப்பாளரான பில்லி புஷ்ஷுடன் பஸ் ஒன்றில் ஸ்டூடியோவுக்குச் செல்கிறார் ட்ரம்ப். தான் பேசுவது பதிவாகிக்கொண்டிருக்கிறது என்பதை உணராமல் அவர் பேசுவது கேட்கிறது. தாங்கள் சந்திக்கப்போகும் பெண் திருமணமானவர் என்றாலும், அவரை வளைத்துப்போடத் தான் மிகவும் முயன்றதாகவும், தான் பிரபலமானவர் என்பதால் திரைத்துறையில் இருக்கும் பெண்களிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்றும் ட்ரம்ப் சொல்ல, அதற்கு ஆமோதிப்பதுபோல பில்லி சிரிப்பதும் தெளிவாகக் கேட்கிறது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் பேருந்தில் இருந்து சிரித்துக்கொண்டே இறங்குவதில் இருந்து நிகழ்ச்சியைத் தொடங்குகிறார்கள். இந்த வீடியோ வெளியானதும் ட்ரம்ப் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை. மாறாக, “அதெல்லாம் ஆண்கள் தங்களுக்குள் உடற்பயிற்சி அறையில் பேசிக் கொள்வது” என்று அலட்சியமாகப் பதில் சொன்னார். ட்ரம்ப் மீது கடுமையான விமர்சனங்கள் எழ இது வழிவகுத்தது.

இந்தப் பின்னணியில்தான் இரண்டாவது விவாதத்தை எதிர்கொண்டார் ட்ரம்ப். விவாதத்தின் தொடக்கத்திலேயே ஹிலாரி நேரிடையாக இதைக் கேள்வியாக்கினார். “இதுவரை நடந்த தேர்தல்கள்போல அல்லாமல், தேர்தலில் நிற்கும் தகுதியற்றவரோ இவர் என்ற கேள்வி எழுகிறது” என்றார் ஹிலாரி. ட்ரம்ப் உடனே ஹிலாரியின் கணவரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். “நீங்கள் கீழ்த்தரமாகச் சென்றால், நாங்கள் மேலாகச் செல்வோம்” என்று சொல்லி, ட்ரம்ப் சொன்ன வார்த்தைகள் எதுவும் தன்னைப் பாதிக்கவில்லை என்று சொல்லி முடித்துக்கொண்டார் ஹிலாரி.

விவாத நெறியாளர் ட்ரம்பிடம் முன்வைத்த நேரடிக் கேள்வி அவரைத் துளைத்தது. “உங்களது பஸ் பயணத்தின்போது நீங்கள் குறிப்பிட்டதுபோல, பெண்கள் யாரையாவது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி இருக்கிறீர்களா?” என்று அப்பட்டமாகவே கேள்வியைக் கேட்டார் அந்த ஊடகவியலாளர். சுற்றிவளைத்து இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முற்பட்ட ட்ரம்ப்பிடம் தொடர்ந்தும் அதே கேள்வியை இன்னும் அழுத்தமாக அவர் முன்வைக்க “இல்லை” என்றார் ட்ரம்ப் மையமாக. இந்த விவாதத்தின்போது காயப்பட்ட புலிபோல மேடையில் அங்குமிங்கும் நடந்த ட்ரம்ப்பை ப்ரேமுக்குள் வைத்திருக்க கேமராக்கள் படாத பாடுபட்டன.

அசராத ‘நியூயார்க் டைம்ஸ்’

இரண்டாம் விவாதம் முடிந்த சில நாட்களில் ட்ரம்ப் தங்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக இரண்டு பெண்கள் ஊடக வெளிச்சத்துக்கு வந்தனர். இதைப் பற்றிய செய்தியை ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டது. “நீங்கள் வெளியிட்டிருக்கும் செய்திக்கு அடிப்படை இல்லை. மன்னிப்புக் கேட்பதுடன் உடனடியாக அதை நீக்க வேண்டும். இல்லையெனில், அவதூறு வழக்கு தொடர்வோம்” என்று நாளிதழுக்கு நோட்டீஸ் அனுப்பினர் ட்ரம்பின் வழக்கறிஞர்கள். ‘நியூயார்க் டைம்ஸ்’ அசரவில்லை. “முடியாது; வேண்டுமென்றால் வழக்குத் தொடருங்கள். இதைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க எங்களுக்கு இருக்கும் கடமை/உரிமை பற்றி ட்ரம்ப்புக்குக் கற்றுக்கொடுக்கிறோம்” என்று கறாராகப் பதிலளித்தது. இதைத் தொடர்ந்து பல பெண்கள் ட்ரம்ப் தங்களிடம் முறைகேடாக நடந்துகொண்டதைப் பற்றி சொல்ல வெளிவந்துள்ளனர். 30 வருடங்களுக்கு முன்னால், விமானப் பயணத்தின்போது தொட முயன்றார் என்பதில் இருந்து, உலக அழகிப் போட்டியின்போது உடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்தார் என்றெல்லாம் இந்தக் கட்டுரை எழுதப்படும் நேரம் வரை பதினோரு பேர் பல்வேறு புகார்களைக் கூறியிருக்கிறார்கள்.

ஹிலாரியின் மீதும் விமர்சனங்கள் பல இருக்கின்றன. அவர் பதவியில் இருந்தபோது இயற்றப்பட்ட 12 நாடுகள் கொண்ட ட்ரான்ஸ் பசிபிக் ஒப்பந்தம் மிக்சிஹன், ஓஹையோ போன்ற மாநிலங்களில் வேலையிழப்பை ஏற்படுத்தியது, அவர் வெளியுறவுத் துறைச் செயலராக இருந்தபோது சட்டத்தை மீறித் தனது சொந்த மின்னஞ்சல் சர்வரை வீட்டில் வைத்திருந்தது, லிபிய நாட்டில் இருந்த அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டபோது, விரைந்து செயல்படாதது எனப் பல்வேறு குறைகளை ஹிலாரிக்கு எதிராகத் தேர்தல் பிரசாரத்தில் ட்ரம்ப் வலுவாகப் பயன்படுத்த முடியும். ஆனால், அதற்குப் பதிலாகத் தன் மீது எழுந்து வரும் தனிப்பட்ட வகையிலான அசிங்கப் புகார்களைப் பற்றிக் கருத்துச் சொல்ல மட்டுமே இப்போது ட்ரம்ப்புக்கும் அவரது அணிக்கும் நேரம் இருக்கிறது.

ட்ரம்ப்பின் புலம்பல்

இதற்கிடையில், பஸ் ஆடியோ பதிவு தந்த அதிர்ச்சியில், குடியரசுக் கட்சியில் முன்னணிப் பொறுப்புகளிலிருக்கும் பலர் ட்ரம்ப்பைக் கை கழுவ ஆரம்பிக்கும் படலம் தொடங்கியிருக்கிறது. நாடாளுமன்றமான காங்கிரஸில் இப்போது குடியரசுக் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் இருக்கிறது. வெள்ளை மாளிகையில் தங்கள் கட்சியைச் சார்ந்தவர் அதிபராக உட்கார முடியாமல் போனாலும், காங்கிரஸில் இருக்கும் பெரும்பான்மை நிலையையேனும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பதற்றம் குடியரசுக் கட்சியினருக்கு இருக்கிறது. காங்கிரஸின் இரு பிரிவுகளில் ஒன்றான பிரதிநிதிகள் அவையில் சபாநாயகராக இருக்கும் பால் ரையன், “இனிமேல் ட்ரம்ப் பங்கேற்கும் எந்த மேடையிலும் நான் இருக்க மாட்டேன்” என்று அறிவித்துவிட்டார். இன்னொரு பிரிவான செனட்டில் உறுப்பினராக இருக்கும் ஜான் மெக்கெயின் உட்படப் பலர் இதுபோலவே அறிவித்திருக்கிறார்கள்.

குடியரசுக் கட்சியின் சார்பில் 2008-ல் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட்ட மெக்கெயினுக்குக் குடியரசுக் கட்சியில் தாக்கம் அதிகம் உண்டு. தன்னைவிட்டு விலகிச் செல்லும் இவர்களைச் சமாதானப்படுத்தவோ, தடுக்கவோ ட்ரம்ப்பிடம் உத்திகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, இவர்களை அவமதிக்கும் விதத்தில் ட்வீட்டுகளை எழுதுவது, இவர்களெல்லாம் தேவையில்லை என மேடைகளில் பேசுவது என்று எதிர்த்திசையில் சென்றுகொண்டிருக்கிறார். அதேசமயம், வெற்றிவாய்ப்பு தன்னை விட்டு வேகமாக நழுவிக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவர் உணர்ந்திருக்கிறார். “ஊடகங்கள் ஹிலாரிக்கு அதீதமாக ஆதரவளிக்கின்றன. அமெரிக்கத் தேர்தல் அமைப்பே ஊழல் நிறைந்தது” என்றெல்லாம் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

லிங்கனும், ரீகனும் அணுஅணுவாய் வனைந்தெடுத்த குடியரசுக் கட்சி எனும் தோண்டியை ட்ரம்ப் எனும் கூத்தாடி போட்டுடைப்பதைப் பார்க்க நேர்வதுதான் இந்தத் தேர்தலின் பரிதாபம்!

-அண்டன் பிரகாஷ், எழுத்தாளர், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், அமெரிக்காவில் வசித்துவருபவர்.

தொடர்புக்கு: anton.prakash@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x