Published : 18 Aug 2022 07:44 AM
Last Updated : 18 Aug 2022 07:44 AM
ஒரு கிராமிய வாத்தியம், வீட்டு விசேஷங்களில் வாசிக்கப் படும் எளிமையான காற்று வாத்தியம் என்னும் நிலையிலிருந்த ஷெனாயை, இந்துஸ்தானி கச்சேரி மேடைகளில் பிரதான வாத்தியமாக்கிய பெருமைக்கு உரியவர் உஸ்தாத் பிஸ்மில்லா கான்.
பிஹாரைப் பூர்விகமாகக் கொண்ட இசைக் குடும்பத்தில் பிறந்தவர் அவர். காசி விசுவநாதர் ஆலயத்தில் ஷெனாய் வாசித்துக்கொண்டிருந்த அவரின் தாய் மாமன் அலி பக்ஷ் விலாயத் கானோடு உத்தரப் பிரதேசத்துக்கு பிஸ்மில்லா கான் வந்தார். பிஸ்மில்லா கானுக்கு, விலாயத் கானே ஷெனாய் வாசிப்பதற்குக் கற்றுக்கொடுத்தார். அலகாபாத்தில் நடைபெற்ற இசை மாநாட்டில் 14ஆவது வயதில் விலாயத் கானோடு இணைந்து முதன்முதலாகப் பொதுவெளியில் ஷெனாய் வாசித்தார் பிஸ்மில்லா கான்.
இந்தியா சுதந்திரம் அடைந்த நாளில் டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் ஜவாஹர்லால் நேரு, தன்னுடைய பேச்சைத் தொடங்குவதற்கு முன்னதாக பிஸ்மில்லா கானை ஷெனாய் வாசிக்க அழைத்தார். சுதந்திர இந்தியாவில் செங்கோட்டையிலிருந்து முதல் சுதந்திர கானம், பிஸ்மில்லா கானின் ஷெனாயிலிருந்தே மெல்லிய வருடல் இசையாகக் கசிந்து வியாபித்தது.
நாட்டில் மத மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு, அப்பழுக்கில்லாததாக பிஸ்மில்லா கானின் இசை கொண்டாடப்பட்டது. உலகின் பல பகுதிகளுக்குச் சென்று ஷெனாய் வாசித்திருந்தாலும், கங்கைக் கரையில் வாழும் எளிய மக்களுக்காக வாசிப்பதையே அவர் ஆத்மார்த்தமாக விரும்பினார்.
"அமெரிக்காவுக்கு வந்துவிடுங்கள். அங்கு உங்களுக்கென்று இசைப் பள்ளி அமைத்துக் கொடுக்கிறோம்" என்று பிஸ்மில்லா கானை வெளிநாட்டு நண்பர்கள் சிலர் வற்புறுத்தி அழைத்தனர்.
அதற்கு, "இந்த கங்கையை உங்களால் அங்கே அழைத்து வந்துவிட முடியுமா?" என்பதே பிஸ்மில்லா கானின் பதிலாக இருந்தது. அவரின் இசைப் பெருவாழ்வில், இந்திய நிலத்தையும் மக்களையும் எந்தச் சக்தியாலும் பிரிக்கவே முடியவில்லை.
- வா.ரவிக்குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT