Published : 16 Aug 2022 07:25 AM
Last Updated : 16 Aug 2022 07:25 AM
பிரிட்டிஷ் இந்தியா சுதந்திர இந்தியாவாக உருவெடுத்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. உண்மையில், சுதந்திரத்தைப் பெற முந்தைய தலைமுறை போராடியதற்குச் சற்றும் சளைக்காதது, சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவைக் கட்டியெழுப்பவும் வலுப்படுத்தவும் வளப்படுத்தவும் இன்றைய தலைமுறை எடுத்த முயற்சிகள். அதன் காரணமாகவே இன்றைக்கு உலக அரங்கில் தனக்கான உயர்ந்த இடத்தைப் பல துறைகளிலும் இந்தியா சாதித்திருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் இந்த சாதனைப் பயணம் ஒரே இரவில் நடந்ததும் இல்லை, ஓரிருசம்பவங்களால் நிகழ்ந்ததும் இல்லை. கடந்த 75 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்த பல சம்பவங்களும் பல முடிவுகளுமே இந்த வெற்றிப் பயணத்தைச் சாத்தியமாக்கி இருக்கின்றன. உதாரணங்களைச் சொன்னால் துலக்கமாகப் புரியும்.
தேர்தலும் அரசமைப்பும்: இந்தியாவை வெறும் சுதந்திர தேசமாக மட்டுமே வைத்திருக்க நேரு விரும்பவில்லை. மாறாக, ஒரு ஜனநாயக தேசமாகவே கட்டமைக்க விரும்பினார். அதன் நீட்சியாகவே முதல் பொதுத்தேர்தல் நடந்தது.
சுதந்திரம் அடைந்த பல நாடுகள் தேர்தலைத் தவிர்த்தபோது, வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்துத் தேர்தலை நடத்தினார் நேரு. அன்று அவர் வகுத்த தேர்தல்வழி ஜனநாயகப் பாதையில்தான் இன்றளவும் இந்தியா இயங்கிக்கொண்டிருக்கிறது.
மக்களுக்கான ஆட்சியாளர்களை மக்களேதேர்ந்தெடுப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படும் இந்தத் தேர்தல்தான் பல நல்ல ஆட்சியாளர்களை உருவாக்கியது. தவறுசெய்த ஆட்சியாளர்களுக்குத் தண்டனை கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது. அதனால்தான் தேர்தலை விரும்பாத ஆட்சியாளர்கள்கூடத் தேர்தல்களை நடத்தத் தவறுவதில்லை.
எமர்ஜென்சியை அமல்படுத்திய இந்திரா காந்தியே பிறகு தேர்தலை நடத்தினார் என்பது அதற்கான உதாரணம். அந்த வகையில், நேரு முதல் மோடி வரையிலான சுதந்திர இந்தியாவின் இருப்பில் தேர்தல்களின் பங்களிப்பு முக்கியமானது. அம்பேத்கர் தலைமையிலான வரைவுக் குழு இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தது, சுதந்திர இந்தியாவின் பெருமிதத் தருணங்களுள் முக்கியமானது.
அதுதான் இந்தியர்களுக்குப் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட எல்லாவற்றையும் கொடுத்தது. ஆட்சி நிர்வாகத்துக்குள்ளும், இந்திய சமூகத்தின் இயல்பு வாழ்க்கைக்குள்ளும் தீர்க்கமான நெறிமுறைகளைக் கொண்டுவந்ததில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பங்கு காத்திரமானது.
அதேவேளை, காலத்துக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் அமைப்பாகவே நமது அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பு பலமுறை திருத்தப்பட்டதே, அதன் நெகிழ்வுத்தன்மைக்கான சாட்சியம். அதேவேளை, நெகிழ்வுத்தன்மையுடன் இருப்பதைப் பயன்படுத்திச் சட்டத்தைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்தவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்ட கதைகளும் இருக்கின்றன.
மொழிவாரி ஏற்படுத்திய ஒற்றுமை: மொழிவாரி மாநிலப் பிரிவினை என்பது சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரிய திருப்புமுனைகளுள் ஒன்று. மாநிலங்களின் ஒன்றியமாகச் சுதந்திர இந்தியா உருவெடுத்தபோதும், ஆங்காங்கே பிரிவினைக் குரல்களும் உரிமை முழக்கங்களும் கேட்டுக்கொண்டே இருந்தன. அந்தக் குரல்களை எல்லாம் அமைதிப்படுத்தக் கையாளப்பட்ட உத்தி, மொழிவாரி மாநிலப் பிரிவினை.
நிலப்பரப்பின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதைவிட, மொழி அடிப்படையில் பிரிப்பதன் மூலம் மக்களின் அதிருப்தியை அகற்றி, நம்பிக்கையைப் புகட்டி, இந்திய ஒன்றியத்துடன் உணர்வுபூர்வமாக ஒன்றியிருக்கச் செய்ய முடியும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே ஐம்பதுகளின் மத்தியில் நிகழ்ந்த மொழிவாரி மாநிலப் பிரிவினை.
உண்மையில், ஆந்திரம் பிரிக்கப்பட்டபோது தேன்கூட்டில் கைவைக்கிறோமோ என்று சந்தேகப்பட்டார் நேரு. ஆனால், அப்படியான ஆபத்து எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. சொல்லப்போனால் நிர்வாக வசதி, மக்களின் கோரிக்கை, அரசியல் காரணங்களுக்காக அவ்வப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், அவை எதுவும் இறையாண்மைக்குச் சவால் விட்டதில்லை. பிரிவினையாக மடைமாறவில்லை.
அந்த வகையில், சுதந்திர இந்தியா பவள விழாவை அமைதியுடன் கொண்டாடுவதன் பின்னணியில் மொழிவாரி மாநிலப் பிரிவினையின் பங்கு முக்கியமானது. சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய அம்சங்களுள் சமூகநீதி முக்கியமானது. இந்திய அரசியலமைப்பு முதன்முறையாகத் திருத்தப்பட்டபோதே, அது சமூகநீதிக் கண்ணோட்டத்தையும் உள்ளடக்கியதாக அமைந்தது.
நேரு காலத்தில் தொடங்கிய சமூகநீதி சாதிப்பு முயற்சிகள், மொரார்ஜி தேசாய் காலத்தில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டதன் மூலமாகவும், வி.பி.சிங் காலத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் முக்கியமானவை செயல்வடிவம் பெற்றதன் வழியாகவும் தொடர்ந்தன.
இன்றைக்கு இந்தியா முழுக்க சமூகம், கல்வி, வேலைவாய்ப்பில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டங்களில் தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டுக்கு அப்பாலும் இருக்கின்ற அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டுவதும் சட்டப் போராட்டங்களை நடத்துவதும் களத்தில் இறங்கிப் போராடுவதும் வெற்றிகளை ஈட்டுவதும் வெற்றியைப் பெறுவதற்கான போராட்டங்களைத் தொய்வின்றித் தொடர்வதும் சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய தருணங்கள். எல்லோருக்கும் எல்லாமும் என்பதைச் சாத்தியப்படுத்த அப்படியான தருணங்கள் அதிமுக்கியம்.
சாதனை நகர்வுகள்: அகிம்சை நாயகன் காந்தி வழிவந்த தேசம்தான் சுதந்திர இந்தியா. என்றபோதும், சூழலுக்கு ஏற்ப எதிரிகளை நோக்கி ஆயுதங்களை ஏந்தத் தயங்கியதில்லை. சுதந்திரம் பெற்ற கையோடு பாகிஸ்தான் சீண்டியபோது, தீரத்துடன் போரிட்டு ஊடுருவல்காரர்களை விரட்டியடித்தது இந்தியா.
அதன் பிறகு 1965, 1971, 1999 என எப்போதெல்லாம் பாகிஸ்தான் இந்தியாவை ராணுவரீதியாகச் சீண்டியதோ அப்போதெல்லாம் தகுந்த பதிலடியைக் கொடுத்திருக்கிறது இந்தியா. 1962இல் நடந்த இந்திய-சீன யுத்தத்தைத் தவிர்த்து, ஏனைய எல்லா யுத்தங்களிலும் இந்தியா வெற்றிக்கொடியே நாட்டியிருக்கிறது.
அதன் பின்னணியில் இருந்தது இந்தியாவின் ராணுவ பலம். ஆரம்பகாலம் தொடங்கி, தனது ராணுவ வலிமையைக் கூட்டிக்கொள்வதில் இந்தியா எந்தவொரு தருணத்திலும் சமரசம் செய்துகொண்டதில்லை. அதற்கான உதாரணம்தான் இந்திரா, வாஜ்பாய் காலங்களில் நிகழ்த்தப்பட்ட அணுகுண்டுப் பரிசோதனைகள்.
இந்தியா அணு ஆயுதத்தைத் தயாரிக்க ஆயத்தமானால், தங்களது உறவைத் துண்டித்துக்கொள்ள நேரிடும் என்று சில நாடுகள் விடுத்த எச்சரிக்கைக்கு அப்பால் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தினார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அந்தத் திட்டத்துக்கு அகிம்சையின் முழுவடிவான புத்தரின் பெயரையே வைத்தார்.
அது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக இந்திரா எடுத்த துணிகர முயற்சி. அதேபோன்ற துணிகர முயற்சியைப் பின்னாளில் பிரதமராக இருந்த வாஜ்பாயும் எடுத்தார். இந்த இரண்டும் இந்தியாவின் சாகச முயற்சிகளல்ல, சாதனை நகர்வுகள்.
சாதித்த போராட்டங்கள்: இன்று 5ஜி பற்றிப் பேசுகிறோம். தொலைத்தொடர்பிலும் தகவல் தொழில்நுட்பத்திலும் இன்றைய இந்தியா சர்வதேசப் பந்தயத்தில் தவிர்க்க முடியாத சக்தி. இப்படியான உயரத்துக்கு இந்தியா செல்லும் என்று அரை நூற்றாண்டுக்கு முன்னால் எத்தனை பேர் கணித்திருப்பார்கள் என்று தெரியாது.
ஆனால், எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் ஏற்பட்ட தொலைத்தொடர்புப் புரட்சிதான் பி.சி.ஓ., எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என்பன போன்ற அம்சங்களைக் கொண்டுவந்தது. வி.எஸ்.என்.எல்., பி.எஸ்.என்.எல். போன்ற அமைப்புகளை உருவாக்கியது. அதுதான் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து இன்றைக்கு 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி என்று மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
அந்த வகையில், தொலைத்தொடர்புப் புரட்சி நிகழ்ந்த எண்பதுகளும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலகட்டமும் நவீன இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியின் அதிமுக்கிய அத்தியாயங்கள். இந்த எல்லா அம்சங்களையும் தாண்டி, இந்தியாவின் ஆகப்பெரிய பெருமிதங்களாகவும் வலிமை தரக்கூடிய அம்சங்களாகவும் கருதப்படுபவை போராட்டங்கள்.
எப்படிப் போராட்டத்தின் வழியே அடிமை இந்தியா, சுதந்திர இந்தியாவாக உருவெடுத்ததோ அதுபோலவே மாநில உரிமை, இடஒதுக்கீட்டு உரிமை, மொழி உரிமை, தகவல் பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை என்று சுதந்திர இந்தியா தனக்கான முக்கியத் தேவைகளைப் போராட்டங்கள் வழியாகவே சாதித்திருக்கிறது. அந்த வகையில், சுதந்திர இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கைச் செலுத்தும் போராட்டங்கள் சுதந்திர இந்தியாவின் பெருமைக்குரிய அம்சங்கள்.
ஆம், தேர்தல் தொடங்கிப் போராட்டங்கள் வரை இந்தியாவின் பெருமிதமாகப் பேசப்படும் ஒவ்வொன்றும் இந்தியாவை இந்தியாவாகவே வைத்திருப்பதில் பெரும்பங்கைச் செலுத்துகின்றன.
இந்த அம்சங்களை அதன் இயல்புத்தன்மையிலிருந்து நகர்த்தப் பார்ப்பதும், வலிந்து விலக்குவதும், தடம்புரள்வதற்குத் தூண்டுவதும், இந்தியாவின் வளமான எதிர்காலத்துக்கு இடையூறு செய்யக்கூடிய காரியங்கள். ஆகவே, பெருமிதங்களைப் புரிந்துகொள்வதும், அவற்றின் உள்ளடக்கத்தை உணர்ந்துகொள்வதும் நாளைய இந்தியாவுக்கு நல்லது!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர். ‘இந்தியத் தேர்தல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com
To Read this in English: Not only India’s glory but also its inner content is important
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT