Last Updated : 15 Aug, 2022 07:30 AM

 

Published : 15 Aug 2022 07:30 AM
Last Updated : 15 Aug 2022 07:30 AM

இந்தியா 75: இந்தியா எனும் பெருங்கனவு

இந்தியா என்றால் என்ன? இந்தியர் என்று யாரை அழைக்கலாம்? இந்தியா என்பது ஒன்றா, பலவா? இந்தியா என்பது அதன் கடந்த காலமா, நிகழ்காலமா? இந்தியா என்பது பழமையா, புதுமையா? இந்திய மரபு என்று எதை அழைப்பது? எது இந்திய நிலம்? எது இந்தியப் பண்பாடு? எது இந்திய மொழி? எது இந்திய மதம்? இந்த வேறுபாடுகளையெல்லாம் கடந்து, நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் இழையொன்று இங்கே உண்டா?

முன்பைவிட இன்று அதிகம் கூர்மை பெற்றிருக்கும், அதனாலேயே நம் அதிகக் கவனத்தையும் கோரும் இந்தக் கேள்விகளை விவாதிப்பதற்குச் சரியான அம்சம், அலகாபாத் தூண்.

35 அடி உயரமும் 35 அங்குல சுற்றளவும் கொண்ட மணற்பாறைக் கல்லால் எழுப்பப்பட்டிருக்கும் இந்தத் தூணில், இந்தியாவின் மூன்று முக்கியமான வரலாற்றுக் காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று முக்கிய அரசர்களின் சொற்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

மூன்று அரசர்கள்

அந்தத் தூணில் முதலில் எழுதியவர் அசோகர். ‘அனைவரும் என் குழந்தைகள்’ என்று அறிவித்தார் பொ.ஆ.மு. (கி.மு.) 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தப் பேரரசர். ‘எல்லோரும் எல்லா இடங்களிலும் ஒன்றிணைந்து வாழ வேண்டும். எல்லா நம்பிக்கைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.

இந்த வாழ்வில் மட்டுமல்ல, இனிவரும் எல்லாக் காலங்களிலும், எல்லாப் பிறப்புகளிலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியும் நன்மையும் கிடைக்க வேண்டும். மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் விலங்குகளும்கூட மகிழ்ச்சியாக வாழ வேண்டும்’. அசோகரின் அசாத்தியமான பெருங்கனவிலிருந்து சில பகுதிகளை அலகாபாத் தூணில் காணலாம். அசோகருக்குப் பிறகு ஆறு நூற்றாண்டுகள் கழித்து, சமுத்திரகுப்தரின் உத்தரவின் பேரில் அதே தூணில் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டன.

சமுத்திரகுப்தரின் அவையில் இடம்பிடித்தவர்களில் முக்கியமானவர் ஹரிசேனர் எனும் கவிஞர். அவர் தனது மன்னரின் வீரத்தையும் தீரத்தையும் புகழ்ந்து இயற்றிய பாடல்களின் வரிகள் அவை.

அந்தத் தூணில் பதிந்திருக்கும் மூன்றாவது பெயர் ஜஹாங்கீர். முகலாய மன்னரான ஜஹாங்கீர், சமுத்திரகுப்தருக்குப் பிறகு 12 நூற்றாண்டுகள் கழித்து, தன்னுடைய வம்சாவளி பற்றிய குறிப்புகளை அதே தூணில் பதித்துவைத்திருக்கிறார்.

மூவரும் மூன்று வெவ்வேறு மொழிகளைக் கையாண்டிருக்கிறார்கள். பிராகிருத மொழியில், பிராமி எழுத்துருவைப் பயன்படுத்தி அசோகர் தனது பிரகடனத்தைப் பொறித்திருக்கிறார். சமுத்திரகுப்தரின் கல்வெட்டு சம்ஸ்கிருத மொழியில், பிற்கால பிராமி எழுத்துகளில் அமைந்துள்ளது.

ஜஹாங்கீர் பற்றிய குறிப்பு பாரசீக மொழியில் ‘நஸ்தலிஃக்’ எனும் எழுத்துருவைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மொழிகளும் எழுத்துருக்களும் மட்டுமல்ல, சொல்ல வந்த செய்திகளும் வெவ்வேறானவை. அசோகர் அகிம்சையையும் தம்மத்தையும் வலியுறுத்துகிறார். நேரெதிராக, சமுத்திரகுப்தர் தான் சந்தித்த ரத்தம் தெறிக்கும் போர்க்களங்களையும் அவற்றிலிருந்து ஈட்டிய மிகப் பெரும் வெற்றிகளையும் நம் முன் அடுக்கிக்காட்டுகிறார். ஜஹாங்கீர் தனது குடும்பத்து உறுப்பினர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

மூவரும் ஒரே தூணைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது. குப்தர் காலம் தொடங்கும்போது மௌரியப் பேரரசு பற்றிய நினைவுகள் மறைந்துவிட்டன. முகலாயப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பிரிட்டன் இந்தியாவை ஆளத் தொடங்கிய பிறகுதான் அசோகர் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டார்.

அசோகரின் கல்வெட்டுகள் பொ.ஆ. 19ஆம் நூற்றாண்டில்தான் வாசிக்கப்பட்டன. எனவே, சமுத்திரகுப்தருக்கும் ஜஹாங்கீருக்கும் அசோகரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மன்னர்களும் மூன்று மத நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கிறார்கள். அசோகர் தன்னை ஒரு பௌத்தராக முன்னிறுத்தியவர். சமுத்திரகுப்தர் தன்னை விஷ்ணு பக்தன் என்றே கல்வெட்டுகளில் அழைத்துக்கொள்கிறார். ஜஹாங்கீர் ஓர் இஸ்லாமியர்.

வெவ்வேறு காலங்கள், வெவ்வேறு நம்பிக்கைகள், வெவ்வேறு கடவுள்கள், வெவ்வேறு கண்ணோட்டங்கள் ஒரே தூணில் அருகருகில் ஒன்றாக வாழ முடியும் என்பதற்கு அலகாபாத் தூண் ஓர் அழியாச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. முழு இந்தியாவும் இதே போல் ஒற்றுமையோடும் வலுவோடும் காலத்தை வென்று நிமிர்ந்து நிற்க முடியும் என்று நம்பினார் ஜவாஹர்லால் நேரு.

தூண் நின்றுகொண்டிருக்கும், அதே அலகாபாத்தில் பிறந்தவர். அசோகர் கொண்டிருந்த அதே கனவை வளர்த்தெடுத்துத் தனதாக்கிக்கொண்டார். நவீன இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டிய ஓரிடத்தில் காலம் அவரைத் தேர்ந்தெடுத்து நிறுத்தியிருந்தது. வகுப்புவாதமும் மதவாதமும் குழப்பமும் அச்சமும் அடர் இருளாகப் பரவிக்கிடந்தபோது, தனக்கான வெளிச்சத்தைத் தன்னருகிலிருந்த காந்தியிடமிருந்தும் கடந்த காலத்தில் அசோகரிடமிருந்தும் நேரு திரட்டியெடுத்துக்கொண்டார்.

பாரபட்சமின்றி அனைவருக்குமான தேசமாக இந்தியா திகழ முடியும், அதற்கான உத்வேகத்தையும் ஆற்றலையும் அது வரலாற்றிலிருந்து பெற்றுக்கொள்ளும் என்று நேரு நம்பினார். மதவாதத்தில் மூழ்கிக் கிடக்காத, வன்முறைமீது ஆர்வம் கொள்ளாத, வெறுப்பரசியலை முன்னெடுக்காத ஒரு தலைமுறை தோன்றி, செழிக்கும். அவர்கள் உருவாக்கும் இந்தியா நம் இந்தியாவைவிட மேலானதாக இருக்கும் என்று நேரு நம்பினார்.

மௌரியர், குப்தர், முகலாயர் என்று மூன்று பேரரசுகளும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்ததுபோல் நேருவின் கனவும் முடிவுக்கு வந்தது. இன்று நாம் வாழ்ந்துகொண்டிருப்பது இந்துத்துவம் உருவாக்கியிருக்கும் கனவுலகில். அந்த உலகில் பௌத்தம், தம்மம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மென் கருத்துகளுக்கு, பன்மைத்துவத்துக்கு இடமில்லை என்பதால் அசோகருக்கும் நேருவுக்கும் இடமில்லை.

இந்த இருவரும் விரும்பியதுபோல் எல்லாருக்குமான தேசமாக அல்ல ஓர் ‘இந்து ராஷ்டிர’மாக இந்தியா திகழ வேண்டும் என்பதே இந்துத்துவத்தின் கனவு. வேறுபாடின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லத் துடித்த அசோகரும் நேருவும் இன்றைய உலகில் பலவீனமானவர்கள் அல்லது தோல்வியாளர்கள். முகலாயர்களின் சுவடுகள் நம் நிலத்திலிருந்தும் நினைவிலிருந்தும் முற்றாகத் துடைத்து அழிக்கப்பட வேண்டியவை. அவர்கள் மதம், அவர்கள் பண்பாடு, அவர்கள் மொழி எதுவும் வேண்டாம் நமக்கு.

அலகாபாத் தூணில் இடம்பெற்றிருக்கும் மூன்று மன்னர்களில் இந்துத்துவத்துக்கு உவப்பானவர் சமுத்திரகுப்தர் மட்டும்தான். குப்தரின் காலம் இந்துக்களின் காலம். எனவே, அதுவேதான் இந்தியாவின் பொற்காலம் அவர்களுக்கு.

பழமையும் புதுமையும்

இந்தியா என்பது ஒரு பழங்காலக் கையெழுத்துப் பிரதி என்கிறார் நேரு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்தில் தங்களுக்கு விருப்பமானதை அதில் எழுதுகிறார்கள். ஆனால் இதுவரை ஒருவராலும் இன்னொருவர் எழுதியதை முற்றாகத் துடைத்து அழிக்க முடிந்ததில்லை. அதனால்தான் புதிதாக எழுதப்பட்ட எழுத்துகளை மட்டுமல்ல, மங்கிப்போன பழங்காலத்துப் பதிவுகளையும் நம்மால் அதில் படிக்க முடிகிறது.

இந்தியா ஒரே நேரத்தில் பழமையாகவும் புதுமையாகவும் காட்சியளிப்பது அதனால்தான். இந்துத்துவமோ பழையதை அழித்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக இன்னொன்றை எழுதத் துடிக்கிறது. ஒரு வரலாற்றை அழித்துவிட்டு இன்னொன்றை, ஒரு மரபை அழித்துவிட்டு மற்றொன்றை, ஒரு மொழியை அகற்றிவிட்டு இன்னொன்றை அது வலியுறுத்த விரும்புகிறது. அலகாபாத் இன்று பிரயாக்ராஜாகத் திருத்தப்பட்டிருக்கிறது.

தூண் நின்றுகொண்டிருக்கும் இடத்தின் பெயரை மட்டுமே அழிக்க முடிந்திருக்கிறது. பல நூற்றாண்டுகளாக அது தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து வைத்துப் பாதுகாத்துவரும் பெருங்கனவை அழிக்க முடியவில்லை.

எதையும் அகற்றாமல், எவரையும் அழிக்காமல், எதுவொன்றையும் விலக்காமல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து வாழலாம் என்கிறது பெருங்கனவு. எவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் நம்மையெல்லாம் ஒன்றிணைக்கும் ஓரிழை அதுதான். மெல்லிய இழைதான். என்றாலும் ஒரு தூணைப் போல் உறுதியாக எழும்பி நிற்கும் வலு அதற்கு இருக்கிறது.

- மருதன், ‘ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: marudhan@gmail.com

To Read this in English: A grand and great dream named India

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x