Published : 13 Aug 2022 07:34 AM
Last Updated : 13 Aug 2022 07:34 AM
‘இந்த இசை அரசிக்கு முன்னால், நான் சாதாரண பிரதம மந்திரி’ என்றார் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. உலகளாவிய சிம்மாசனத்தில் கர்னாடக இசையை அமர்த்திய பெருமைக்கு உரியவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி.
பாடலைப் பாடுவது என்பது வேறு, மனம் ஒன்றிப் பாடுவது என்பது வேறு. ஒன்றிப் பாடுவது என்பதில்தான் கலைஞனும் கலையும் இரண்டறக் கலக்கும் அதிசயம் நடக்கும்.
இந்த அதிசயமான உணர்வுக்கு வாழும் உதாரணமாக நம்முன் வாழ்ந்தவர் எம்.எஸ். அவரின் சமரசமில்லாத அர்ப்பணிப்பான சங்கீதம்தான், பிரதமரையும் பாமரனையும் ஒருங்கே ரசிக்க வைத்தது. அவர்களுக்கான இசை அரசியாக எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் கொண்டாட வைத்தது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பத்து வயதிலேயே கிராமபோன் இசைத் தட்டில் பாடி சாதனை படைத்தார். இசை உலகில் உயரிய கௌரவமான மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதைப் பெற்ற முதல் பெண் கலைஞர் என்னும் புகழும் இவருக்கு உண்டு.
ஐக்கிய நாடுகள் அவையிலும், எடின்பரோ இசை விழாவிலும் பாராட்டப்பட்டவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி. தன்னுடைய அசாத்தியமான பாடாந்திரத்தால் அதுவரை ஆண்களுக்கான மேடையாகவே அறியப்பட்ட கர்னாடக இசையின் புகழ் மிக்க மேடைகளை அடைந்ததோடு, கர்னாடக இசை அரசியாகவும் அவர் மாறினார்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்து சாதித்த அவருடைய வெற்றி, பல பெண்கள் அந்தத் துறையில் நுழைவதற்குக் காரணமாக அமைந்தது. மிகச் சிறந்த கலைஞராக இருந்தது மட்டுமின்றி மிகச் சிறந்த மனிதநேயராக, எளிய மக்களின் நலனுக்கான சேவையில் தன்னுடைய இசையைப் பயன்படுத்தியவராக தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.
- யுகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT