Published : 12 Aug 2022 07:38 AM
Last Updated : 12 Aug 2022 07:38 AM
சுதந்திரத்துக்குப் பிறகு கல்வியை அனைவருக்கும் கொண்டுசேர்ப்பதற்கான தீவிர முயற்சிகள் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டன. அப்போதிருந்த பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் அதற்குப் போதுமானவையாக இல்லை. புதிய கல்விப் பிரிவுகளை உள்ளடக்க வேண்டிய தேவையும் இருந்தது.
எனவே, புதிய பல பல்கலைக்கழகங்களையும் உயர்கல்வி நிறுவனங்களையும் தொடங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டது.
1951 இல் கரக்பூரில் முதல் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஐஐடி) தொடங்கப்பட்டது. இன்று இந்தியாவின் 23 நகரங்களில் ஐடிடிகள் இயங்கிவருகின்றன. 1961இல் இந்திய மேலாண்மைக் கல்விக் கழகம் (ஐஐஎம்) கல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
இன்று 20 இந்திய நகரங்களில் ஐஐஎம்கள் இயங்கிவருகின்றன. மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த இரண்டு உயர்கல்வி அமைப்புகளும் முறையே தொழில்நுட்பக் கல்வி, மேலாண்மைக் கல்வியில் சர்வதேச அளவில் மதிப்பைப் பெறும் சிறந்த பட்டதாரிகளை உருவாக்கிவருகின்றன. ஐஐடிகள் ஆய்வுப் புலத்திலும் பல முக்கியமான பங்களிப்புகளை செலுத்திவருகின்றன.
1969இல் தொடங்கப்பட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜே.என்.யு) இந்திய அளவில் கலை, சமூகவியல் சார்ந்த பாடங்களுக்கான சிறந்த கல்வி நிறுவனமாக கருதப்படுகிறது. 2019இல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்ற அபிஜித் பானர்ஜி உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற அறிஞர்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இவை தவிர நூற்றாண்டுகளைக் கடந்தவையும் சுதந்திரத்துக்குப் பிறகு தொடங்கப்பட்டவையுமான பல பல்கலைகழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துவருகின்றன.
2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களில் இந்தியாவின் 27 உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. சுதந்திர இந்தியாவில் உயர்கல்வி அடைந்திருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு இதுவே சான்று. அதே நேரம் முதல் 150 இடங்களில் ஒன்றுகூட இல்லை என்பது இந்திய உயர்கல்வி பயணிக்க வேண்டிய தொலைவையும் சேர்த்தே நினைவுறுத்துகிறது.
- கோபால்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT