Last Updated : 11 Aug, 2022 07:30 AM

 

Published : 11 Aug 2022 07:30 AM
Last Updated : 11 Aug 2022 07:30 AM

இந்தியா 75: சாண் ஏறினால் முழம் சறுக்கும் சுற்றுச்சூழல்

நம் முக்கால் நூற்றாண்டு சுற்றுச்சூழல் வரலாற்றைச் சுருக்கமாக இப்படிக் கூறலாம்: ‘அணைகளே இந்தியாவின் நவீன ஆலயங்கள்’ என்ற ஜவாஹர்லால் நேருவின் பெருமிதக் குரலில் தொடங்கிய அது, “எமக்குப் பேரணைகளே வேண்டாம்” என்கிற மக்களின் குரலில் வந்து நிற்கிறது.

நாம் அதற்காக நேருவைக் குறை கூற முடியாது. அவரது கூற்று அந்தக் காலகட்டத்துக்கானது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு நாடுகளுக்குப் பொருளாதார முன்னேற்றமே குவிமையமாக இருந்தது. அதையே, காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகளும் பின்பற்றின.

அதனால்தான், சுற்றுச்சூழல் குறித்துப் போதாமை நிலவிய 1950, 1960 ஆகிய 20 ஆண்டுகளைச் ‘சூழலியல் அறியாமைக் காலம்’ என்று குறிப்பிடுகிறார் ராமச்சந்திர குஹா. 1972இல்தான் உலகின் முதலாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்தியப் இந்திரா காந்தி பேசினார்.

மக்கள் இயக்கங்கள்

1973இல் இன்றைய உத்தராகண்ட் மாநிலத்தில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக, எளிய மலைவாழ் பெண்கள் புகழ்பெற்ற ‘சிப்கோ’ இயக்கத்தைத் தொடங்கினர். அதுவே, விடுதலைக்குப் பிறகான முதல் சுற்றுச்சூழல் போராட்டம்.

அடித்தள மக்களால் தொடங்கி வைக்கப்பட்ட சூழலியல் விழிப்புணர்வு, அடுத்து அறிவுசார் வட்டத்தையும் எட்டியதன் அடையாளமே கேரளத்தின் அமைதிப் பள்ளத்தாக்குப் போராட்டம். நீர் மின்சாரத்துக்காகக் காடுகளை மூழ்கடித்து, அணை கட்டுவதை எதிர்த்து 1978இல் அது தொடங்கியது.

சிப்கோ போராட்டம் போன்றே அதுவும் வெற்றிபெற்று, 1985இல் அப்பகுதி தேசியப் பூங்காவாக மாறியது. காடழிப்புக்கு எதிராக 1983இல் கர்நாடகத்தில் தொடங்கிய அப்பிகோ போராட்டமும் வெற்றியே.

ஆனால், 1985இல் தொடங்கிய சர்தார் சரோவர் அணை எதிர்ப்புப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்தது. இன்று நர்மதையின் நடுவே எழுந்துள்ள அம் மாபெரும் அணை, பழங்குடிகளின் வாழ்விடங்கள் பலியானதன் சாட்சியாகும்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஆட்சியாளர்கள் உருவாக்குவதில்லை. மக்களே அப்பொறுப்பை ஏற்கின்றனர் என்பதே நம் வரலாற்றின் ஆகப் பெரும் துயரம். அரசியல்வாதிகள் என்றுமே சூழலியல் பாதுகாப்புக்கு எதிரிகளாகவே விளங்குகின்றனர்.

விதிவிலக்காக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை மட்டும் சொல்லலாம். சுற்றுச்சூழல்மீது தனிப்பட்ட ஆர்வம் கொண்டவர். அவருடைய அரசியல் குறித்துக் கடும் விமர்சனங்கள் இருந்தும், சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் மீதான அவரது அக்கறையை ஜோதிபாசு போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களே பாராட்டியுள்ளனர்.

இந்திராவின் முன்னெடுப்பு

சூழலியல் ஆர்வம்கொண்ட முதலும் கடைசியுமான பிரதமர் அவர் ஒருவரே. சுற்றுச்சூழல் அமைச்சகத்தை முதன்முதலாக உருவாக்கியவர்; முதல் சுற்றுச்சூழல் அமைச்சரும் அவரே.

‘வனப் பாதுகாப்புச் சட்டம் 1980’ அவரது ஆட்சியிலேயே நிறைவேறியது. அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதன்முறையாகத் தேர்தல் அறிக்கையில் (1980) ‘சூழலியல்’ என்ற சொல்லை இடம்பெறச் செய்தவரும் அவரே.

இருப்பினும், அவரது ஆட்சியும் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் இயங்கவில்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சட்டம் நிறைவேற அவரது மறைவுக்குப் பிறகு, 1984 போபால் ‘யூனியன் கார்பைடு’ நச்சுவளி விபத்து வரை காத்திருக்க நேர்ந்தது. அக்கொடிய நிகழ்வின் உயிரிழப்புக்குப் பிறகே, ‘சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986’ இயற்றப்பட்டது.

அதற்கு, விடுதலைக்குப் பிறகு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன என்பது ஓர் அவமானமே. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஓரளவு கிடைத்திருந்த மகிழ்ச்சியும் ஏறத்தாழ பத்தாண்டுகளே நீடித்தன.

1990-களில் சந்தைப் பொருளாதாரம் வெட்டுக்கத்தியாய் இறங்கியபோது, அதற்கு முதல் பலி சுற்றுச்சூழலே. சூழலியல் பாதுகாப்புச் சட்டங்கள் ஒன்றும் நமக்குச் சும்மா கிடைக்கவில்லை. போராட்டங்களையும் உயிர்ப் பலிகளையும் விலையாகத் தந்தவை அவை.

இருப்பினும் வளர்ச்சிக்கு எதிரானவர்களாகவே சூழலியலாளர்கள் தூற்றப்படுகின்றனர். வளர்ச்சிக்கு எதிராக அல்லாது முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்காகவே அவர்கள் போராடுகின்றனர் என்கிற புரிதல் ஆட்சியாளர்களிடம் முதலில் உருவாக வேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவின் வனப் பாதுகாப்புத் துறை நிறுவனர் கிஃபோர்ட் பின்சாட் கூறியது இங்கு பொருத்தமாக இருக்கும். “நமது பணி கோடரியைத் தடுத்து நிறுத்துவதல்ல; கோடரியின் பயன்பாட்டினை முறைப்படுத்துவதாகும்.”

இந்திரா காந்தி தெரிவித்த ஒரு கருத்தும் நினைவுக்குவருகிறது. 1873இல் ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் யானைகளைப் பாதுகாக்க ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1953இல் ஆந்திர மாநிலம் தனியே பிரிந்து சென்றதும் அம்மாநிலத்தில் யானைகளின் எண்ணிக்கை குறைந்தது. அது குறித்துக் கருத்துரைத்த இந்திரா, ‘‘ஆந்திராவில் சட்டம் பாதுகாக்கப்பட்டது - யானைகள் காணாமல் போயின’’ என்றார். அதுபோல வருங்காலத்தில் ‘சட்டம் பாதுகாக்கப்பட்டது - சுற்றுச்சூழல் காணாமல் போனது’ என்ற நிலை ஏற்படலாம்.

சுற்றுச்சூழலின் நிலை

1991இல் கொண்டுவரப்பட்ட கடற்கரை ஒழுங்காற்றுச் சட்டம் குற்றுயிருடன் கரையொதுங்கிக் கிடக்கிறது. அது குறித்து கவனிக்க வேண்டிய டெல்லியும் காற்று மாசில் மூழ்கி ஆண்டுக்குப் பத்தாயிரம் பேரை இழந்துவருகிறது.

நீர் மாசினால் லட்சக்கணக்கில் நம் குழந்தைகளைப் பலிகொடுக்கிறோம். எங்கும் மாசு... எதிலும் மாசு. வேற்றுமையில் ஒற்றுமை காண இன்று இந்திய ஒன்றியத்தை இணைக்கும் ஒரே புள்ளியாக விளங்கும் தகுதி ‘சுற்றுச்சூழல் மாசு’க்கு மட்டுமே உண்டு.

2014ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் மொத்தமுள்ள 180 நாடுகளில் 155ஆவது இடத்தில் இருந்த நாம், 2018இல் மேலும் கீழிறங்கி 177ஆவது இடத்துக்கு வீழ்ச்சியடைந்தோம்.

ஆனாலும், சுற்றுச்சூழலை அழிக்கும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படுவது இன்றும் நிறுத்தப்படவில்லை. முதன்மையான ஆறு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களையும் நீர்த்துப்போகச் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மறுபக்கம் நம் பிரதமர் மோடிக்கு 2018 செப்டம்பரில் ஐ.நா. அவையின் ‘சாம்பியன் ஆஃப் எர்த்’ விருது அளிக்கப்படுகிறது.

காலநிலை மாற்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் வழிகளை உலக நாடுகள் தேடுகையில், நாம் அந்த ஆபத்தின் திசைநோக்கியே பாதங்களைப் பதிக்கிறோம். புவி வெப்பமாதலைக் குறைக்கும் ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டிருப்பது ‘செலக்டிவ் அம்னீசியா’வில் நமக்கே மறந்துவிட்டதுபோலும்.

புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான பியர் கிரில்சின் ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி ஒரு கேள்வி கேட்பார்: “இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் குழந்தையை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய வளத்தை நுகர்வதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது?” நமக்கு விளங்கவில்லை. இதே கேள்வியைத்தான் சூழலியலாளர்கள் அரசை நோக்கிக் கேட்க விரும்புகிறார்கள்.

- நக்கீரன், சூழலியல் எழுத்தாளர் தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x