Published : 11 Aug 2022 07:37 AM
Last Updated : 11 Aug 2022 07:37 AM
இந்தியக் குடியாட்சி வரலாற்றில் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முதன்மை இடமுண்டு. இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக அரசமைப்பு அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 389 பேரில் 15 பேர் பெண்கள்.
ராஜகுமாரி அம்ரித் கவுர், சரோஜினி நாயுடு, அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன், சுசேதா கிருபாளினி, விஜயலட்சுமி பண்டிட், துர்காபாய் தேஷ்முக், பேகம் ரசூல், ஹம்சா ஜிவ்ராஜ் மேத்தா, கமலா சவுத்ரி, ஆனி மாஸ்கரின், ரேணுகா ராய், பூர்ணிமா பானர்ஜி, லீலா ராய், மாலதி சவுத்ரி ஆகியோர் தங்களது மாகாணங்கள் சார்பாக அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களில் பலரும் இந்திய விடுதலைக்காகவும் சமூக சீர்திருத்தங்களுக்காகவும் பாடுபட்டனர். அரசமைப்புச் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்துக்காகவும் சமத்துவத்துக்காகவும் இவர்கள் பங்களித்தனர்.
அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பெண்களின் பன்முகத்தன்மை முக்கியமானது. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கும் வகையில் அவர்களது தேர்வு அமைந்திருந்தது. தாக்ஷாயணி வேலாயுதன், அரசமைப்பு அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டியலினப் பெண்.
அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த இளம் வயது (34) பெண்ணும் இவர்தான். மாகாண அரசமைப்புக் குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றிந்த ஹன்ஸா ஜிவ்ராஜ் மேத்தா, பரோடாவின் புகழ்பெற்ற திவான் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இந்தியா விடுதலை பெற்ற சில நிமிடங்களில் இந்தியப் பெண்களின் சார்பாக இந்திய தேசியக் கொடியை அரசமைப்பு அவையிடம் கொடுத்தவர் இவர். சுதந்திர இந்தியாவில் பறக்கவிடப்பட்ட முதல் கொடி அது.
அரசமைப்பு அவையில் இடம்பெற்றிந்த பெண்கள், முதல் வரைவு குறித்துத் தங்கள் கருத்துகளைத் துணிச்சலோடு வெளிப்படுத்தினர். அரசமைப்புச் சட்டத்தின் நீளம் குறித்து அம்மு சுவாமிநாதன் விமர்சித்தார்.
இந்துப் பெண்களின் திருமணம், சொத்துரிமை குறித்து எதிர்வினையாற்றிய ஹன்ஸா, “அனைவருக்கும் சம உரிமை வழங்குவதன் மூலம் ஜனநாயகத்தை உறுதிசெய்யும் நாடாக இது விளங்கும். அந்த அடிப்படையில் இருந்துதான் நாம் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
- ப்ரதிமா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT