Published : 11 Jun 2014 12:00 AM
Last Updated : 11 Jun 2014 12:00 AM
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவரான செப் பிளேட்டரின் இரும்புக்கர நிர்வாகத்தில்தான் ஊழல்கள் மலியத்தொடங்கின.
கால்பந்து சங்க சர்வதேச சம்மேளனம் (‘ஃபிஃபா’) என்றாலே நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை உற்சாகத்தை அள்ளி வழங்கும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், பிரேசிலில் நடைபெறவுள்ள 2014-ம் ஆண்டின் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியோ லஞ்சம், ஊழல், தில்லுமுல்லுகள் ஆகியவற்றுக்காக இப்போதே தாறுமாறாகப் பேசப்பட்டுவருகிறது. இதற்கு மூல காரணமே ஃபிஃபாதான்; ஊழல் நடவடிக்கைகளுக்காக இத்தாலி நாட்டுப் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்ட சில்வியோ பெர்லுஸ்கோனியையே ஃபிஃபாவின் ஊழல்கள் வெட்கத்தில் ஆழ்த்திவிடும்.
பிரம்மாண்டமான மாட மாளிகைகள், சொந்தமான சொகுசு விமானங்கள், ராஜபோகமான சாப்பாடு, கேளிக்கை என்று ஃபிஃபாவின் இப்போதைய நிர்வாகி கள் சுகபோகத்தில் மிதந்தாலும் ஆரம்ப காலத்தில் இந்தச் சங்கம் மிக எளிமையாகத்தான் இருந்தது.
1904-ல் தொடக்கம்
பிரான்ஸின் தலைநகர் பாரீஸில் 1904-ல் ஃபிஃபா தொடங்கப்பட்டது. கால்பந்து போட்டிக்கான ஆட்ட விதிகளை உருவாக்கவும் உலகம் முழுக்க ஒரே மாதிரியாக அவற்றை அமல்படுத்தவும் கால்பந்து பிரபலமாகாத நாடுகளுக்கும் அதைக் கொண்டுசெல்லவும்தான் அந்த அமைப்பு தொடங்கப்பட்டது. பாரீஸில் பிறந்ததால் அந்த அமைப்பின் பெயரே பிரெஞ்சு பாணியில் ஃபிஃபா என்று சுருக்கி அழைக்கப்பட்டது.
பந்தை கோலுக்குள் செலுத்தவரும் எதிராளியின் முகத்தில் குத்துவது, பந்தை அடிக்காமல் ஆளை அடிப்பது, தள்ளுவது, ஓடும்போது காலைக் குறுக்கே வைத்து விழவைப்பது என்ற தவறுகளை
யெல்லாம் தடுப்பதற்காகவும் அப்படி விளையாடும் வீரர்களுக்கும் அணிக்கும் கடுமையான தண்டனைகளை விதிக்கவும்தான் சங்கம் ஏற்படுத்தப்பட்டது. உலக விளையாட்டு வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த, புகழ்மிக்க அமைப்பாக ஃபிஃபா மாறிவிட்டது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவரான செப் பிளேட்டரின் இரும்புக்கர நிர்வாகத்தில்தான், ஊழல்கள் மலியத் தொடங்கின. அவருடைய காலத்தில் ஒரு நெருக்கடி யிலிருந்து மீளும்போதே அடுத்த நெருக்கடி ஏற்பட்டு விடும் அளவுக்கு அவை இருந்தன. அவரைப் போலவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரும் அவருக்கு குருநாதர்போல இருந்தவருமான ஜோ ஹவலாங்கேவுக்குப் பிறகு, 1998-ல் ஃபிஃபா தலை வரானார் செப் பிளேட்டர். பிரேசில் நாட்டவரான ஹவலாங்கே 1974 முதல் 1998 வரை ஃபிஃபா தலை வராகப் பதவி வகித்தார்.
கூட்டுக் களவாணிகள்
நிதி நிர்வாகத்தில் கையாடல், வாய்ப்பிருக்கும் போதெல்லாம் லஞ்சம், பெண்களுடன் சல்லாபம், தன்பாலுறவு என்று எல்லாவிதமான புகார்களுக்கும் ஃபிஃபா நிர்வாகிகள் ஆளாகியுள்ளனர். ஃபிஃபா ஊழல்கள் உலகப் பிரசித்தம். எனவே, ஏதாவது புதிய குற்றச்சாட்டு தோன்றினால் - யார்? எவ்வளவு? - என்று மட்டும் கேட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஊழலைக் கேட்டுக் கொந்தளிப்பதோ கொதித்து எழுவதோ கிடையாது.
இரு அணிகள் முன்கூட்டியே பேசி வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முடிவை மாற்றுவதைத் தடுப்பதுதான் ஃபிஃபாவின் கடமை. ஆனால், ஃபிஃபாவின் 350 ஊழியர்களில் ஆறு பேருக்கு மட்டும்தான் அந்தப் பொறுப்பு தரப்படுகிறது. ஊழல் நடக்காமல் பார்த்துக்கொள்ளத் தான் ஃபிஃபா. ஆனால், அதுவே ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது.
கத்தார் நாட்டில் 2022-ல் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை நடத்த கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டனர் என்று ஒரே கூப்பாடாக இருக்கிறது. ஃபிஃபாவின் சொந்தமான, சுயேச்சையான நிர்வாகக் குழுவே 2022 உலகக் கோப்பையை எங்கு நடத்துவது என்பதை மீண்டும் ஒருமுறை வாக்கெடுப்புக்கு விடலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறது. இந்த சனியன் எதற்கு என்று அந்தக் குழுவையே கலைத்துவிட்டார்கள் நிர்வாகிகள். ஃபிஃபாவின் தலைவர் பதவிக்கு மீண்டும் ஒரு முறை போட்டியிடப்போவதாக செப் பிளேட்டர் இந்த வாரம் அறிவித்தபோது, ‘நாங்கள் போராட்டமே நடத்துவோம்’ என்று ஐரோப்பியக் கால்பந்து சங்கத் தலைவர்கள் கோரஸாகக் கூக்குரல் எழுப்பினர்.
வரலாற்றுக் கொள்ளை
பிரேசிலில் 2014 உலகக் கோப்பைக்காக விளை யாட்டு அரங்கங்களை அசுர வேகத்தில் கட்டத் தொடங்கியபோது ஒன்பது கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். விளையாட்டு நடைபெறும் அரங்குகளும் வீரர்கள் பயிற்சிபெறும் களங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஃபிஃபா கேட்டதற்காக, 2.5 லட்சம் பேர் அவர்களுடைய வசிப் பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். உலகக் கோப்பைப் போட்டிகளை நடத்த ஒரு நாட்டுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. பிரேசில் வரலாற்றிலேயே மிகப்பெரிய கொள்ளை இந்தப் போட்டிகள் என்று பிரேசிலின் 1994-வது ஆண்டு உலகக் கோப்பை அணியின் நட்சத்திர நாயகனான ரொமாரியோ கூறியிருக்கிறார்.
2022-ல் போட்டி நடைபெறவுள்ள கத்தாரில் நிலைமை இப்போதே மோசம். ஃபிஃபா தரத்தில் விளையாட்டு அரங்குகள் அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் நூற்றுக் கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். கத்தாருக்குப் பதிலாக வேறு நாட்டில் போட்டியை நடத்த வேண்டும் என்று ஃபிஃபா நிர்வாகிகள் கேட்கத் தொடங்கிவிட்டனர். கத்தாரைத் தேர்வுசெய்தது தவறு என்று பிளேட்டரே பேச ஆரம்பித்துவிட்டார்.
உருகுவே நாட்டுப் பத்திரிகையாளர் எட்வர்டோ கலியானோ, ‘வெயிலிலும் நிழலிலும் கால்பந்து’ என்ற தன்னுடைய புத்தகத்தில், ‘கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் சில சர்வாதிகாரிகள் இருக்கின்றனர்; உலகக் கால்பந்து சம்மேளனம் என்பது பெரிய சாம் ராஜ்யம்போல; உலகிலேயே மிகவும் ரகசியங்கள் நிறைந்த சாம்ராஜ்யம் அதுதான்’ என்று சரியாகவே குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், முதல்முறையாக இந்த சாம்ராஜ்யம் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு இழுத்துவரப் பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்கள், பாதுகாவலர்கள், தீயணைப்பு வீரர்கள், பேருந்து ஓட்டுநர்கள் அனைவரும் ஃபிஃபா தரத்தில் தங்களுக்கு ஊதியம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். வீடு கட்டும் தொழிலாளர்கள் ஃபிஃபா தரத்தில் தங்களுக்கு வீடு கேட்டிருக்கிறார்கள். செவிலியர்களும் தங்களுக்கு ஃபிஃபா தரத்தில் மருத்துவமனைகள் வேண்டும் என்கிறார்கள்.
ஃபிஃபா எனும் மந்திரக் கோல்
ஃபிஃபா என்பது நாடுகளற்ற ஊழல் சாம்ராஜ்யமாகத் திகழ்கிறது. எத்தனை மனிதர்களைக் கொன்றாலும் சரி, கசக்கிப் பிழிந்தாலும் சரி - தங்கள் நாட்டில் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை நடத்தி கோடிக் கணக்கில் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்துவிட வேண்டும் என்று உலகத் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அவர்களுடைய ஆசையை நிறை வேற்றும் மந்திரக் கோலாகவே மாறிவிட்டது ஃபிஃபா.
சர்வதேசக் கால்பந்து போட்டிக்கு இரு அமைப்புகள் தான் தேவை. ஊழல், லஞ்சம், முன்கூட்டியே பேசிவைத்து ஆட்டத்தின் முடிவை மாற்றுவது போன்ற தகிடுதத்தங்கள் இல்லாமல் நேர்மையாகப் போட்டியை நடத்த ஒரு குழு; கால்பந்து என்ற ஆட்டத்தில் இதுவரை அதிக ஆர்வம் காட்டாத நாடுகளிலும் இதைப் பிரபலமாக்கும் பணியைச் செய்வதற்கு இன்னொரு குழு. லஞ்சம், ஊழல் காரணமாக ஃபிஃபா நொறுங்கிப் போகாமலிருக்க இது மிகமிக அவசியம். உலகிலேயே மிகவும் பிரபலமான விளையாட்டு கால்பந்துதான்; ஆனால் ஊழலில் ஊறித் திளைக்கும், ரகசியங்கள் நிரம்பிய ஃபிஃபா, கால்பந்து போட்டிகளை நடத்தக் கூடாது. ஃபிஃபாவைத் தின்றுகொண்டிருக்கும் ஊழல் புற்று, கால்பந்து என்ற விளையாட்டையே நாசப்படுத்துவதற்கு முன்னால் ஃபிஃபாவையே வெட்டியெறியும் அறுவைச் சிகிச்சை அவசியம்.
- தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT