Published : 02 Aug 2022 07:30 AM
Last Updated : 02 Aug 2022 07:30 AM
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் இன்று அதிசயங்கள் மலரும் திட்டங்கள் அரங்கேறுகின்றன. இசை வெள்ளம்; சலங்கை ஒலி; தாளத்தின் லயம்; வண்ணமய வகுப்பறைகளை விரைவில் காணப்போகிறோம். ‘தமிழக அரசுப் பள்ளிகளில் கலை, கலாச்சாரம்’ என்கிற திட்டம் பிறந்திருக்கிறது. கலைகளைக் கற்பதற்கென ஒவ்வொரு வாரமும் இரண்டு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
உடுக்கை, பறை, ஒயில், கரகம், கும்மி, மயிலாட்டம், தேவராட்டம், பரதநாட்டியம், பொம்மலாட்டம், கூத்து, தோல்பாவைக் கூத்து, தெருக்கூத்து, நாடகம், வரைதல், ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்தல், குறும்படங்கள் உருவாக்குதல், சமூக விழிப்புணர்வை வளர்க்கும் தமிழிசை...
என இம்மண்ணின் பாரம்பரியக் கலைகளை மாணவர்கள் அறிந்துகொள்ளவிருக்கிறார்கள். கல்வியை மக்கள்மயமாக்கும் பள்ளி மேலாண்மைக் குழு, இல்லம் தேடிக் கல்வி ஆகிய இரு பெரும் வரலாற்றுப் பாய்ச்சல்களுடன் இத்திட்டமும் மூன்றாவதாக இணைந்துள்ளது.
சிறார் திரைப்பட இயக்கம்
பள்ளிகளில் சிறார் திரைப்படங்களைத் திரையிடும் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. முதல் படமாக, சார்லி சாப்ளினின் ‘கிட்’ பெரும்பாலான பள்ளிகளில் திரையிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் திரையிடப்படும் படங்களைத் தொடர்ந்து, மாணவரிடையே அதைக் குறித்த விவாதங்களும் விமர்சனங்களும் நடைபெறத் தொடங்கியுள்ளன. பல நாட்டுக் குழந்தைகளின் ரசனை உலகு, நம் அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கண் முன் விரிகிறது.
கல்வியுடன் கலை மட்டும் அல்ல இது. கலை வழிக் கல்வி. உயிரற்ற, உணர்வற்ற கற்றலுக்கு மாற்றாக, மூச்சு முட்டும் சூழலுக்கும் மனப்பாடம் செய்து கொட்டும் புரியாத கற்றலுக்கும் மாற்றாக உருவெடுக்கும் வகுப்பறை. எத்தனை காலத் தவிப்பு இது. ஆழ்மன ஏக்கம். ஆர்.கே.நாராயண் நாடாளுமன்றத்தில் தன் முதல் உரையில் தெரிவித்த, மாறாமல் இன்றும் நிலைத்திருக்கும் மறக்க முடியாத சொற்கள் இவை: “இந்தியக் கல்வியின் சாபக்கேடு, அது மூழ்கிக் கிடக்கும் புரியாமை இருள்”.
கற்றல் இடைவெளிகள்
பாடங்களே பாடல்களாக, நாடகமாக, வண்ண ஓவியமாக, பல்பரிமாணம் கொள்ள வேண்டும் என்ற திட்டத்தைப் பள்ளிக் கல்வித் துறை தீட்டிவருகிறது. இலக்கணமும் கணிதமும் கதையாக, கவிதையாக மாணவர்களின் நாவில் நர்த்தனமாடப் போகின்றன. மறக்கவியலா அறிவாகச் சீரணித்து, தன்மயமாகப் போகின்றன.
கலை வழியே கற்பது என்பதற்கு இது மட்டும் பொருளல்ல. கற்பதில் தோல்வியடையும் ஏராளமான நம் மாணவர்கள் பாடங்களைக் கற்பதில், ஆர்வமும், திறமையும் பெறத் தொடங்குவர் என்பது எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் பல காலமாகத் தொடரும் அடிப்படைப் பிரச்சினை, கற்றல் திறன்களை அடைவதில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்களின் மோசமான தோல்வி.
கடந்த 15 ஆண்டுகளாக, நாடு முழுவதும் ஆய்வுகள் நடத்தி வெளியிடப்படும் ‘ஆசர்’ (ASER) அறிக்கைகள், இந்த வேதனையைப் படம்பிடித்துக் காட்டிவருகின்றன. சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட ‘தேசியக் கல்வித் தேர்ச்சிக் கணக்கெடுப்பு-2021’-ம் தமிழ்நாட்டின் இந்நிலையைத் தெரிவிக்கிறது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு 20-ம் இடம். ஐந்தாம் வகுப்பு மாணவரில் பாதிப் பேருக்கு இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் புத்தகத்தை வாசிக்க இயலவில்லை; சிறிய கழித்தல் கணக்குப் போட முடியவில்லை. எட்டாம் வகுப்பு மாணவரில் கணிசமானவர் ஐந்தாம் வகுப்புக்குரிய திறன்களை அடைய முடியவில்லை.
தீர்வுதான் என்ன?
குழந்தைகள் ஒரே வகைப்பட்ட திறமையுடையவர்கள் அல்ல. பல வகைப்பட்ட திறமைகள் கொண்டவர்கள் என்பது பல ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. எண்களிலும் எழுத்துகளிலும் ஆர்வமற்ற குழந்தை விளையாட்டு, ஓவியம், பாடல், ஆடலில் ஆர்வமுடையவனா/ளாக இருக்கலாம்.
அவருடைய ஏதேனும் ஒரு திறமை பாராட்டப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றால், அவனு/ளுள் உறங்கும் ஏதோ ஒன்றை விடுவிக்கிறோம், வெளிக்கொணர்கிறோம். அதன் பின், ஆர்வமற்ற மற்றவற்றையும் அவர்கள் கற்றுக்கொள்ளத் தொடங்குவார்கள். இன்று அரசுப் பள்ளிகளில் தொடங்கும் கலை வகுப்புகளின் வழியே, கற்றல்- கற்பித்தல் இடைவெளியால் முடக்கப்பட்டிருந்த நம் குழந்தைகள் எத்தனையோ பேர் புதிய பிறவி எடுப்பர்.
உயிர்த்தெழுவது கல்வி மட்டுமல்ல. மறைந்து, மறந்து, அழிந்து, புதைந்துவரும் நம் கலைப் பொக்கிஷங்கள் ஒரு அகழாய்வைக் காண்கின்றன. எத்தனை எத்தனை கலைச் செல்வங்களை இழந்துவிட்டோம். இன்று பல்லாயிரம் பள்ளிகளில் அவற்றைப் பல லட்சம் மாணவர்கள் பயிலப்போகிறார்கள்.
புத்துயிர் பெறப்போவது பாரம்பரியக் கலைகள் மட்டும் அல்ல; அவற்றைப் பேணிக் காத்துவரும் கலைஞர்களும்தான். ஆண்டுக்கு ஒருமுறை வரும் திருவிழாக்கள் தரும் சொற்ப வருமானத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் கலைஞர்கள் அவர்கள். மாண்பும் மரியாதையும் மறுக்கப்பட்ட அந்தக் கலைஞர்கள் பள்ளிகளுக்குள் பிரவேசிக்கப் போகின்றனர். ஆசிரியராகப் போகின்றனர். கற்பிப்போர் அனைவரும் ஆசிரியர்தானே!
‘சமூக விழிப்புணர்வைத் தரும் பாடல்களைத் தமிழிசை வடிவத்தில் மாணவர்கள் கற்பார்கள்’ என்று திட்ட விளக்கக் குறிப்பு சொல்கிறது. நம் அரசுப் பள்ளி மாணவர்கள், தங்களைக் குறித்து, சமூகத்தைக் குறித்து, அழிக்கப்பட வேண்டிய அநீதிகளைக் குறித்து, வென்று எழ வேண்டிய ஏழுலகங்களைக் குறித்து...
கலைகளின் வழியாகக் கற்றுக்கொள்ளப் போகிறார்கள். இன்றைய வகுப்பறைகளில் ஒரு மாயாஜால மாற்றம் காணப்போகிறோம். தொடக்க விழாதான் நடந்திருக்கிறது. நமது ஆசைகளும் கனவுகளும் சிறக்கடித்துப் பறக்கும் நாளை எதிர்நோக்குகிறோம்.
- வே.வசந்தி தேவி, தலைவர், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT