Published : 22 Jun 2014 12:22 PM
Last Updated : 22 Jun 2014 12:22 PM
இராக்கில் அமெரிக்கா தலையிட்டாலும் ஆபத்து, தலையிடாவிட்டாலும் ஆபத்து…
இராக்கில் அமெரிக்கா மீண்டும் தலையிட வேண்டும், ராணு வத்தை அனுப்பிவைக்க வேண்டும், இராக்கிய ராணு வத்தை எதிர்க்கும் கலகக்காரர்களை விமானத் தாக்குதல் மூலம் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையெல்லாம் கேட்டு அச்சத்தால் நினைவுகள் பின்னிழுக்கின்றன. சர்வதேச விவகாரங்களில் சரியான முடிவுகளை எடுக்கத் தெரியாமல் அதிபர் ஒபாமா தயங்குகிறார் என்று விமர்சகர்கள் கேலி செய்கின்றனர்.
ராணுவம் தலையிடுவதால் சில சமயங்களில், சாதாரண பிரச்சினைகள் படுமோசமாகிவிடுவதை 2003-ல் இராக்கில் அமெரிக்க ராணுவம் தலையிட்டதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். அந்தத் தலையீட்டால் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் 4,500-க்கும் மேற்பட்டோரும், இராக்கியர்கள் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் இறந்தனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் அரசின் நிதி விவகாரங்களில் நிபுணருமான லிண்டா பில்மஸ் சமீபத்தில் என்னிடம் தெரிவித்தார், இராக்கில் தலையிட்டதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்தச் செலவு 4 டிரில்லியன் டாலர்கள் என்று. ஒரு டிரில்லியன் என்பது லட்சம் கோடி! (இந்திய மதிப்பில் சுமார் 240 லட்சம் கோடி ரூபாய்!)
அந்தப் போரினால் ஒவ்வொரு அமெரிக்கக் குடும்பமும் சுமக்க வேண்டிய வரிச்சுமை மட்டும் 35,000 டாலர்கள். இராக்கில் அமெரிக்கா செலவிட்ட தொகையைக் கொண்டு உலகம் முழுக்கவுள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு இலவசமாகவே சிகிச்சை அளித்திருக்கலாம். அடுத்த 83 ஆண்டுகளுக்கு உலகின் எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்புச் செலவுக்குப் பயன்படுத்தியிருக்கலாம். பயனில்லாத போருக்கு நாம் செலவிட்ட தொகை, மீண்டும் தொடங்கிய இடத்துக்கே நம்மைக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது.
(பிற நாடுகளின் விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடாமல்) அடக்கமாக இருக்க வேண்டியதை இதி லிருந்து நாம் படிப்பினையாகப் பெற்றோம். ராணுவம் என்ற சாதனம் கைக்கு எளிதில் கிடைப்பது, அடிக்கடி பயன்படுவது. ஆனால், சர்வதேச உறவுகளின் அடிப்படைப் பாடமொன்று நமக்கு எரிச்சலையே தரும்: அது - தீர்வுகளைவிட பிரச்சினைகளே உலகில் அதிகம். நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கும் முன்பாக டாக்டர்கள் நினைவுபடுத்திக்கொள்ளும் ஒரு வாசகம் அரசுக்கும் பொருந்தும் - “முதலில், தீங்கு எதையும் செய்துவிடக் கூடாது”.
அமெரிக்கா தலையிடக் கோரிக்கை
இராக்கில் முன்னர் அமெரிக்கத் தூதராகப் பதவி வகித்த பால் பிரமர், விமானம் மூலம் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் சிறிய படைகளைத் தரையில் இறக்குவதும் அவசியம் என்கிறார். வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் தலையங்கமும் அமெரிக்கா தலையிட வேண்டும் என்கிறது. கலிபோர்னியா செனட்டர் டயான் பெஃயின்ஸ்டனும் ராணுவ ரீதியிலான தலையீட்டையே ஆதரிக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற மதபயங்கரவாத அமைப்புக்கு எதிராக இப்போதே நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பு இப்போது வடக்கு இராக் முழுவதிலும் பரவியிருக்கிறது. முன்னாள் துணை அதிபர் டிக் சினாயின் கருத்து வியப்பை அளிக்கவில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுகிறார் ஒபாமா என்று அவரும் சாடியிருக்கிறார்.
இராக்கின் கோரிக்கை
அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் என்று இராக் அதிகாரபூர்வமாகவே கோரிக்கை விடுத்திருக்கிறது. இதனால், தேவையில்லாமல் இராக்கின் உள்நாட்டுப் போரில் நாமும் இழுக்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் ஏற்படுகிறது. லெபனானில் 1982 முதல் 1984 வரையிலும் சோமாலியாவில் 1992 முதல் 1994 வரையிலும் இப்படித்தான் இழுக்கப்பட்டோம். இராக்கில் தலையிடாமல் சும்மா இருப்பது சரியான முடிவில்லைதான்; ஆனால், தலையிடுவதோ அதைவிடப் பெரிய தவறாகிவிடுமே!
4,000 பேருடன் ஐ.எஸ்.ஐ.எஸ்.
இராக்கை இப்போது கதிகலங்கவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற மதபயங்கரவாத அமைப்பு தொடக்கத்தில் வெறும் 4,000 பேருடன்தான் இராக்குக்குள் நுழைந்தது. இராக்கிய ராணுவத்தில் அதைப் போல 50 மடங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் இருக்கின்றனர். ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைமையிலான இராக்கிய அரசின் பிரதமரான நூரி கமால் அல்-மாலிகிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். படையை வெல்வது எளிதான செயல்தான். ஆனால், அதற்கு முதல்படியாக சன்னிகளுடனும் குர்துகளுடனும் அவர் அரசியல்ரீதியாக இணைந்து செயல்பட வேண்டும்.
சன்னி அரபுத் தலைவர்களும் குர்துகளின் தலைவர்களும் கடந்த வாரம் பிரதமர் அல் மாலிகியைச் சந்தித்துப் பேசினர். ஐ.எஸ்.ஐ.எஸ். படையை எதிர்த்துப் போரிட சன்னிகள் மட்டுமே உள்ள படைக்கு அனுமதி கொடுங்கள் என்று அப்போது கேட்டார் கள். அது இராக்கிய மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவ துடன், மிதவாத சன்னிகளைக் கொண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். படை களை முறியடிக்கவும் உதவும். ஆனால், என்ன காரணத்தாலோ அந்த யோசனையை மாலிகி நிராகரித்துவிட்டார். இதை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் அலிசா ஜே. ரூபனும் ராட் நார்ட்லேண்டும் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இராக்கில் உள்ள பல சன்னிகள், ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பை விரும்பவில்லை. ஆனால், அவர்கள் இராக்கியப் பிரதமர் அல் மாலிகி நம்பிக்கைக்குரியவர் அல்ல என்ற முடிவுக்கு வந்துவிட்டனர், இதனாலேயே அவரை வெறுக்கின்றனர்.
ஒரே தீர்வு
இந்தக் குழப்பத்திலிருந்து இராக் உடனடியாக விடுபட ஒரே தீர்வுதான் இருக்கிறது. இராக்கிய அரசின் அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும். சன்னிகளுடனும் குர்துகளுடனும் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதெல்லாம் நடந்தால் இராக்கிய அரசுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதும், ஐ.எஸ்.ஐ.எஸ். படையினருக்கு எதிராக வான் தாக்குதல் நடத்துவதும் நியாயமாக இருக்கும். அப்படியில்லாமல் பிடிவாதப் போக்குள்ள அல் மாலிகி சொல்வதை மட்டும் கேட்டுச் செயல்பட்டால், இராக்கிய உள்நாட்டுப் போரில் ஒரு தரப்புக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியது போலாகிவிடும்.
“ஷியா பயங்கரவாதிகளுக்கான விமானப் படையாக அமெரிக்கா செயல்பட முடியாது” என்று லண்டன் மாநாட்டில் ஜெனரல் டேவிட் பெட்ராஸ் இதைத்தான் கூறியிருக்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக தவறான பாதையில் பிரதமர் அல் மாலிகி வேகமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார். ராணுவத்தில் ஷியாக்களுடைய பங்கை இரட்டிப்பாக்கிவருகிறார். சிறையில் உள்ள சன்னி முஸ்லிம்களை அரசு நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், அதைவிட மோசம், சன்னி பிரிவு கைதிகளை போலீஸார் நிற்கவைத்துச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்.
ராணுவம் என்பது வலுமிக்க ஆயுதமாக, கைவிட இயலாத கருவியாக இருக்கலாம். கொசாவாவிலும் குர்திஸ்தானிலும் பார்த்தோம். நவீன ராணுவத்தின் திறன் என்பது கண்ணைக் கவர்வதாக, போதையூட்டுவதாக இருக்கக்கூடும் ஆனால், அதனால் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதே இராக்கில் தலையிட்டதன் மூலம் கடந்த முறை நாம் கற்ற, ‘4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் செலவு' என்ற பாடம்!
தி நியூயார்க் டைம்ஸ்; தமிழில் சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT