Last Updated : 03 Jun, 2014 09:00 AM

 

Published : 03 Jun 2014 09:00 AM
Last Updated : 03 Jun 2014 09:00 AM

தேவைதானா தூரத்துப் பள்ளிக்கூடங்கள்?

தரமான, சமத்துவமான கல்வியையும், பொருளாதாரச் சிக்கனத்தையும் அருகமைப் பள்ளிகளால் சாதிக்கலாம்

உலகெங்கும், குறிப்பாக வளர்ந்த நாடுகள் அனைத்திலும் குழந்தைகள் அருகமைப் பள்ளிகளில் (அருகில் அமைந்துள்ள= அருகமை) மட்டுமே படிக்க இயலும். அருகமை என்பது வரையறுக்கப்படுகிறது; தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகள் பெரும் பாலும் நடந்து போகக்கூடிய தொலைவிலோ, அல்லது ஐந்து நிமிட வாகனப் பயணத்தில் போகக்கூடியதாகவோ அருகமை வட்டம் போடப்படுகிறது. நடுநிலைப் பள்ளிகளுக்கு வட்டம் கொஞ்சம் விரிவாகவும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு இன்னும் அதிக விரிவாகவும் வகுக்கப்படுகிறது. தங்கள் அருகமை வட்டத்துக்கு அப்பால் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதைத் தடுக்கச் சட்டம் உருவாக்கப்பட்டு, கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. நவீனக் கல்வி அமைப்பில், பள்ளிக் கல்வியின் ஆதாரச் சட்டகமாக அருகமைப் பள்ளிகள் கருதப்படுகின்றன.

வர்க்க-இன பேதங்கள்…

இத்தகைய பள்ளிகளில் அருகமைப் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் குழந்தைகளும், வர்க்க, இன பேதங்களின்றி சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அந்நாடுகளில் பள்ளிகள் பெரும்பாலும், பொதுப் பள்ளிகளாகவும், அதாவது, அரசின் பொறுப்பில், இலவசமாகக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளாகவும் இருப்பதால், சம வாய்ப்பளிக்கும், சமத்துவக் கல்வியாகவும் பெருமளவு இருக்கிறது. விதிவிலக்காக, அமெரிக்கா போன்ற சில நாடுகளில் அந்தச் சமுதாயங்களின் ஏற்றத்தாழ்வுகளையும், இன-கலாச்சாரப் பாகுபாடுகளையும் ஒட்டி அமைந்துள்ளதால் சில பிரச்சினைகள் எழுகின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில், பெருநகரங்களின் மத்திய பகுதிகளில் ஆப்பிரிக்க-அமெரிக்க இன (கருப்பு இன), அடித்தள மக்கள் பெருவாரியாக வசிக்கின்றனர். ஆகவே, அந்தப் பகுதிப் பள்ளிகளில் பெரும்பாலும் அவ்வினக் குழந்தைகளே படிக்கின்றனர். ஒரே இன-வர்க்க மாணவர் கொண்ட பள்ளிகளினால் உருவாகும் பேதங்களை மாற்றி, சமத்துவமயமாக்கச் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. பேருந்துகளில் மாணவரைத் தங்கள் அருகமை இடத் திலிருந்து, வேறு வகை இன-கலாச்சார அருகமைப் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், மாணவர் வெகுதூரம் பயணிப்பது உகந்ததல்ல என்ற காரணத்தால், இம்முயற்சி பெரும்பாலும் கைவிடப்பட்டது.

சாதிகளுக்கேற்ற பள்ளிகள்

இங்கே கவனிக்க வேண்டியது, மேற்சொன்ன மாணவர் தொலைதூரப் பயணத்தின் குறிக்கோள் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் துடைப்பது. நம் நாட்டு மாணவப் பயணத்தின் குறிக்கோளோ எதிர்மறையானது. அதாவது பேதங்களை உருவாக்குவதற்கென்றே இங்கு அருகமைப் பள்ளிகள் என்ற ஜனநாயகக் கல்விக் குறிக்கோள் மறுக்கப்படுகிறது. அருகில் இருக்கும் பள்ளிகளை விட்டு, வெகு தூரம் இருக்கும் பள்ளிகளுக்குக் குழந்தை கள் அனுப்பப்பட நம்முடைய சமூகத்தில் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றில் சாதியும் முக்கியமான ஒன்று. பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான மக்கள் பொது விசாரணையில் பங்கேற்றபோது கிடைத்த விவரம் இது: அருகில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் தலித் குழந்தைகளே படிக்கின்றனர். சாதி இந்துக்கள் அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படிக்கக் கூடாது என்பதற்காக வெகுதூரம் உள்ள பள்ளிகளுக்கு அவர்களை அனுப்புகிறார்கள்.

எவ்வளவு பெட்ரோல் மிச்சம்!

தமிழ்நாட்டில் 36,389 பள்ளி வாகனங்கள் இயக்கப் படுகின்றன என்று தமிழக அரசு அறிக்கை ஒன்று சொல்லுகிறது. இந்த வாகனங்களுக்குச் செலவாகும் பெட்ரோல், டீசல் எரிபொருள் எவ்வளவு? வசதி படைத்த குழந்தைகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக ஏற்றிச்செல்லும் கார்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் சேமிக்கப்பட்டால் நாட்டின் இறக்குமதி எவ்வளவு குறையும்? அந்நியச் செலாவணி எவ்வளவு மீதமாகும்? நாட்டின் பற்றாக்குறை பட்ஜெட்டுகளைப் பற்றி அங்கலாய்ப்போருக்கு, அடித்தட்டு மக்களுக்கு அள்ளிக்கொடுக்கும் சலுகைகளினால்தான் பற்றாக்குறை உருவாகிறது என்று சாடுபவருக்கு இந்த ஆரோக்கியமான சேமிப்பு ஏன் தேவையானதாகத் தோன்றவில்லை? முக்கியமாக, பள்ளி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவதிலும், சரியான பராமரிப்பு இன்மையாலும் ஆண்டு

தோறும் உயிரிழக்கும் குழந்தைகள் எத்தனை பேர்?

இத்தகைய அவலங்களுக்கெல்லாம் மாற்றான அருகமைப் பள்ளிகளின் அவசியம் இந்தியக் கல்வி வரலாற்றில் அனைத்துக் கல்வியாளர்களாலும், கல்வி ஆணையங்களாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் மிகவும் புகழ் பெற்ற கோத்தாரி ஆணையத்தின் 1964-ம் ஆண்டு அறிக்கை அருகமைப் பள்ளிகளின் பெரும் சிறப்பை நுட்பமாக விளக்குகிறது. “அவை வர்க்க-சாதி வேறுபாடு இன்றி அனைத்துக் குழந் தைகளுக்கும் சமமான கல்வியை அளிப்பது மட்டுமல்ல, இப்பள்ளிகள்தான் தரமான கல்வியை அளிக்க முடியும்” என்றும் கோத்தாரி ஆணையம் கூறுகிறது.

பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கை

சாமானிய மக்களுடன் வாழ்வைப் பகிர்ந்துகொள்ளல் தரமான கல்வியின் முக்கியத் தன்மை. இதே கருத்தை, சில வாரங்களுக்கு முன் லண்டன் நகரின் கல்விப் பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் டேவிட் லெவின் என்ற பள்ளித் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் இப்படி வலியுறுத்துகிறார். “ஒரே வர்க்க-இன மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் கற்கும் மாணவர்கள் சமுதாயம் குறித்த குறுகிய ஒற்றைப் பரிமாணப் புரிதலுடன் வெளி வருவது அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் கேடுதான்.”

இன்று சாமானிய குழந்தைகள் கற்கும் அரசு/உள்ளாட்சிப் பள்ளிகள் கேவலமான புறக்கணிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் இவை சாமானியர் மட்டுமே கற்கும் பள்ளிகள் என்பதுதான். பெரும்பாலும் முதல் தலைமுறை கல்வி கற்போரான இந்தக் குழந்தைகளும், அவர்களுடைய பெற்றோரும் குரலற்றவர்கள், சமுதாயத்தில் சக்தியற்றவர்கள். ஆகவேதான், இவர்கள் கற்கும் பள்ளிகள் மோசமான புறக்கணிப்புக்கு உள்ளாகின்றன. இதே பள்ளிகளில் வசதியும் அதிகாரமும் கொண்டோரின் குழந்தைகள் படிக்க நேர்ந்தால் நிலைமை எவ்வாறு மாறும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சர்வதேச அளவில் இந்தியாவின் மாபெரும் செல்வம் அதன் மக்கள்தொகைதான். அதாவது, நமது மக்கள்தொகையில் மிகப் பெரும் பகுதி இளைஞர்களும் குழந்தைகளும்தான். ஆனால், பெரும்பாலோர் சிறந்த கல்வி கிடைக்காததால் ஆற்றல் பெறும் வாய்ப்பை இழக்கின்றனர். நாடு மனித வள வளர்ச்சியில் உலக அரங்கில் மிகவும் தாழ்ந்து கிடக்கிறது. அருகமைப் பள்ளிகள், முதலாளித்துவ நாடுகள் தங்கள் சமுதாயத்தின் மனிதவள மேம்பாட்டுக்கு அத்தியாவசியமாகக் கருதிக் கடைப்பிடித்த, கடைப்பிடிக்கும் வளர்ச்சிப் பாதை. இன்று முதலாளித்துவப் பாதையை மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் இந்தியா அந்தப் பயணத்தின் வெற்றிக்கு அடிகோலிய கல்வி முறையை மட்டும் மறுதலிக்க இயலாது.

அருகமைப் பள்ளிகள் அளிக்கும் மகத்தான பலன்கள் எவை? குழந்தைகள் குழந்தைப் பருவத்தை இழக்காமல், ஓடி விளையாடும், கூடி விளையாடும் மகிழ்ச்சியான வளர்ச்சி அடைவார்கள். சாதி-வர்க்கப் பாகுபாடுகள் மறையும் தளங்களாகப் பள்ளிகள் திகழும். தரமான கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும். எரிபொருள் சேமிப்பு பொருளாதாரத்துக்கு உதவும்.

ஆகா! ஒரு கல்லில் எத்தனை மாங்காய்? அந்தக் கல்லை எறியும் கை எங்கே?

- வே. வசந்தி தேவி, கல்வியாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்,தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x