Published : 28 Jul 2022 06:35 AM
Last Updated : 28 Jul 2022 06:35 AM
செஸ் விளையாட்டின் தலைநகரம் என்று சென்னையைச் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்தியாவின் சிறந்த செஸ் வீரர்கள் சென்னையிலிருந்து உருவானவர்களே. இந்தியாவில் ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டத்தை முதலில் பெற்றவர் சென்னையைச் சேர்ந்த மனுவேல் ஆரோன்.
பிறகு, இந்தியாவின் முதல் ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தை விஸ்வநாதன் ஆனந்த் பெற்றார். அதேபோல ‘இன்டர்நேஷனல் மாஸ்டர்’ பட்டம் பெற்ற முதல் பெண், சென்னையைச் சேர்ந்த விஜயலட்சுமி சுப்பராமன்.
பல்வேறு காலகட்டங்களில் திறமையான வீரர்கள் சென்னையிலிருந்து உருவாகியிருக்கிறார்கள். விஸ்வநாதன் ஆனந்த்‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டம் பெற்றதைப் பார்த்துதான் செஸ்ஸில் எனக்கும் ஆர்வம்ஏற்பட்டது. எந்தவொரு விளையாட்டிலும் பெரியசாதனைகள் படைக்கப்படும்போது அந்த விளையாட்டைக் கற்றுக்கொள்ள புதிதாக ஒரு பெரும் படை முன்வரும்.
பழைய சோவியத் ஒன்றியத்தில் பிரபலமாக இருந்த ‘டால் செஸ் கிளப்’ 1972இல் சென்னையில் தொடங்கப்பட்டது. ரஷ்ய கலாச்சார மையத்தில் செயல்பட்டு வந்த அந்தச் சங்கத்தில்தான், விஸ்வநாதன் ஆனந்த் உட்படப் பலரும் பயிற்சிபெற்றார்கள். புத்தாயிரத்தின் தொடக்கத்தில் சென்னையில் புதிய செஸ் பயிற்சி மையங்கள் நிறைய உருவாகத் தொடங்கின.
அதனால், இளம் தலைமுறையினர் செஸ் விளையாடத் தொடங்கினார்கள். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட சென்னையில்தான் செஸ் போட்டிகள் அதிகம் நடைபெற்றன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து போட்டிகளில் பங்கேற்றார்கள். சென்னையிலும் தமிழகத்திலும் செஸ் பிரபலமானதற்கு விஸ்வநாதன்ஆனந்த் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றதும் ஒரு காரணம்.
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரைப் போல செஸ்ஸில் 16 வயதே நிரம்பிய பிரக்ஞானந்தா பிரபலமாகியிருக்கிறார். அவரைப் போலவே சென்னையைச் சேர்ந்த குகேஷும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு 2,700 புள்ளிகளை எட்டி சாதனை புரிந்திருக்கிறார். ஊடகங்கள் செஸ் விளையாட்டின் மேல் அதிக வெளிச்சம் பாய்ச்சத் தொடங்கியிருப்பதால், இதுபோலப் புதிதாக வருகிறவர்கள் உலகுக்குத் தெரியவருகிறார்கள்.
யார் வெல்வார்கள்?: சென்னையில் செஸ் ஒரு பிரபலமான விளையாட்டு. ஒலிம்பியாட் மூலம் சென்னையின் செஸ் பாரம்பரியம் மாநிலம் முழுவதும் தெரியவரும். இந்தப் பிரபல்யத்தை வரும் காலத்தில் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது. சென்னையில் இருப்பதுபோலவே மற்ற மாவட்டங்களிலும் செஸ் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். இதற்கான கட்டமைப்பைத் தமிழ்நாட்டில் விரிவுபடுத்த வேண்டும்.
2012 முதல் நான் பயிற்சியாளராகச் செயல்பட்டுவருகிறேன். இந்த முறை பெண்கள் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஏனென்றால், சீனாவும் ரஷ்யாவும் இந்த முறை போட்டியில் பங்கேற்கவில்லை. எனவே, நன்றாக விளையாடும்பட்சத்தில் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகம்.
ஆடவர் பிரிவில் அமெரிக்காதான் வலுவான அணி. தரவரிசையில் அமெரிக்கர்கள் அனைவருமே 2,750 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கிறார்கள். இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நம்மிடையே ‘பி’ பிரிவில் இருப்பவர்கள் எல்லாருமே இளம் வீரர்கள். குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் ஆகியோர் வளர்ந்துவரும் வீரர்கள். அவர்களுக்கு இது முதல் ஒலிம்பியாட் போட்டி. கடினமாக உழைத்துவருகிறார்கள். அதனால் நமக்கு வெள்ளி அல்லது வெண்கலம் வெல்வதற்கான வாய்ப்பு நிச்சயம் உண்டு.
பிரக்ஞானந்தாவின் எதிர்காலம்: ஆனந்துக்குப் பிறகு தமிழ்நாட்டு செஸ்ஸை உலக அரங்குக்குச் சிறு வயதிலேயே எடுத்துச்சென்றுள்ள பிரக்ஞானந்தா உலக சாம்பியனாக வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். அதற்கு அதிகமான பயிற்சி தேவை.
தரவரிசையிலும் முன்னணிக்குச் செல்ல வேண்டும். கரோனாவால் இரண்டு ஆண்டுகளாகப் போட்டிகள் குறைவாக நடைபெற்றதால் தரவரிசையில் அவர் பின்தங்க நேரிட்டது. 2022இல் இதுவரை நடைபெற்ற ஐந்து போட்டிகளில் மூன்றில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆன்லைன் போட்டிகளிலும் முக்கியமான வீரர்களை வென்றிருக்கிறார். அதனால் அவருடைய தரவரிசை நிலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. இதைத் தக்கவைத்துக்கொண்டு முயன்றால், உலக சாம்பியன் பட்டத்தை அவரால் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
அதுதான் எங்களுடைய இலக்கு. பிரக்ஞானந்தாவைப் பொறுத்தவரை சிறு வயதிலிருந்தே எந்த கவனச் சிதறலும் இல்லாமல் செஸ் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்தால் ஆனந்த் போல உலக சாம்பியன் பட்டத்தை அவரால் வெல்ல முடியும்.
ஒலிம்பிக்கில் சேர்க்கப்படுமா?: நீண்ட காலமாக ஒலிம்பிக்கில் செஸ்ஸை இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்துவருகிறது. உலக செஸ் கூட்டமைப்பும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
ஒலிம்பிக்கைப் போலவே ஒலிம்பியாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றியும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்றுவந்தாலும், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இன்னமும் செஸ்ஸைச் சேர்த்துக்கொள்வதற்கான முடிவை அறிவிக்கவில்லை. அதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. எதிர்காலத்தில் செஸ்ஸும் ஒலிம்பிக்கில் ஓர் அங்கமாகலாம், நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
- ஆர்.பி.ரமேஷ், செஸ் ஒலிம்பியாட் ஆடவர் ‘பி’ பிரிவுப் பயிற்சியாளர் & பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர், தொடர்புக்கு: rbramesh1@gmail.com
எழுத்தாக்கம்: டி.கார்த்திக்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT