Published : 30 Sep 2016 09:43 AM
Last Updated : 30 Sep 2016 09:43 AM

அறிவியல் அறிவோம்: வயதாவதைத் தள்ளிப்போட முடியுமா?

அண்ணன் வயதுடையவருடன் நடந்து செல்கையில், நம்மைப் பார்த்து “நீ தான் மூத்தவனா” என்று யாராவது கேட்டால் எப்படியிருக்கும்?

இந்த விஷயத்தை நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த டியூக் பல்கலைக்கழகப் பேராசிரியர் டானியல் பெல்ஸ்கை. “உங்கள் வயதும், உடல் மூப்பும் ஒன்றல்ல! நீங்கள் பிறந்து 38 வயது ஆகியிருக்கலாம். ஆனால், உங்கள் உயிரியல் வயதானது ஏழெட்டு ஆண்டுகள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்” என்று அடித்துச் சொல்கிறது அந்த ஆய்வு.

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது என்று கேட்கிறீர்களா? நியுசிலாந்து நாட்டில் 1972 மற்றும் 1973-ல் பிறந்த ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொருவரின் உடலியக்க மாற்றமும் அளக்கப்பட்டது. இடையில் கொஞ்சப் பேர் இறந்துவிட்டாலும்கூட, ஆய்வு நிற்கவில்லை. பிஎம்ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டெண், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்ற பதினெட்டு உடலியக்க குறிகளைத் தொடர்ந்து அளந்து பதிவு செய்தனர். இப்படி அவர்களது 26 வயது, 32 வயது, 38 வயது என்று தொடர்ந்து சேகரிக்கப்பட்ட புள்ளியியல் விவரங்களைக் கொண்டு, மூப்படையும் வேகத்தைக் கணக்கிட்டனர். அதில், எல்லா மனிதர்களும் ஒரே சீராக மூப்படைவதில்லை என்று அறியப்பட்டது. சிலர் ஆண்டுக்கு 1.2 என்ற வேகத்தில் மூப்படைந்தனர். அதாவது, 38 வயதில் இவர்கள் நாற்பதரை வயதுக்காரர்கள் போல் மாறிவிட்டார்கள். சிலரின் மூப்பு வேகம் குறைவாக இருந்தது. அதாவது, 38 வயதிலும் 32 வயதுக்காரர்கள் போல் இருந்தார்கள்.

மூப்படைந்தவர்களை இளைஞர்களுடன் ஒப்பிட்டு, அவர்களது உடலியல் செயல்பாடுகளில் பல வேறுபாடுகளைக் கண்டறிந்துள்ளனர். அதாவது, நம் உடலின் எரிசக்தி நிலையம் போலச் செயல்பட்டுச் செல்களுக்கு உள்ளே இருந்து ஆற்றலை வழங்குகிற மைடோகாண்ட்ரியா (Mitochondrion) எனப்படும் இழைமணி மூப்படைந்தவர்களிடம் சிதைந்துபோய் விடுகிறது. இளைஞர்களிடம் வைக்கோலை முறுக்கியது போலக் காணப்படும் டிஎன்ஏ மூலக்கூறு இழைகள், மூப் படைந்தவர்களிடம் நைந்துபோன தென்னை நார் போலக் காணப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தமானது வடிகட்டித்தான் அனுப்பப்படும். ஆனால், மூப்படைந்தவர் களுக்கோ இந்த வடிகட்டியில் கசிவு காணப்படுகிறது.

ஆனாலும், எதனால் தூண்டுதல் ஏற்பட்டு மூப்பு இயக்கம் செயல்படுகிறது என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எனவே, எப்படித் தலை நரைப்பதைத் தடுத்துவிட்டால், மூப்பின் வேகத்தைக் குறைக்க முடியாதோ அதைப்போல இந்த ஒவ்வொரு உடலியக்க செயல்பாட்டைச் சரி செய்வதன் மூலம் ஒருவரின் மூப்பைத் தள்ளிப்போட முடியாது என்று முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள். ஆனாலும், இந்த ஆய்வு இளமையை நீட்டிக்க உதவும் என்றும் நம்புகிறார்கள்.

அப்புறம் என்ன, யார் இளமையாக இருப்பது என்று அண்ணன், தம்பிக்குள் நடக்கிற போட்டியில் அப்பாக்களும் பங்கேற்கும் காலம்தான் இனி!

- த.வி.வெங்கடேஸ்வரன், மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x