Published : 04 Jun 2014 12:00 AM
Last Updated : 04 Jun 2014 12:00 AM
லேசர் ஒளிச்சுட்டியைவிட (லேசர் பாய்ண்டர்) 60,00,000 கோடி மடங்கு சக்தி மிக்க லேசர் கதிர்களைக் கொண்டு ஆய்வுக்கூடத்தின் சிறிய அறைக்குள் பெருநட்சத்திர வெடிப்புபோல ஒன்றை அறிவியலாளர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். பெருநட்சத்திர வெடிப்பு (சூப்பர்நோவா) என்பது பிரபஞ்சத்தின் சக்திவாய்ந்த நிகழ்வுகளுள் ஒன்று. சூரியனைவிடப் பலமடங்கு பெரியதாக இருக்கும் நட்சத்திரம், தன் ஆயுளின் முடிவில் பிரம்மாண்டமாக வெடித்துச் சிதறும் நிகழ்வுதான் பெருநட்சத்திர வெடிப்பு. நமது சூரியன் தனது ஆயுட்காலம் முழுவதும் வெளிப்படுத்தக் கூடிய சக்திக்கு இணையான சக்தி இந்த நிகழ்வின்போது வெளிப்படுத்தப்படுகிறது. அப்போது வெளிப்படும் சக்தி சில ஒளியாண்டுகள் தொலைவுக்கு ஆதிக்கம் செலுத்தக்கூடியது. இடையில் இருக்கும் சிறு நட்சத்திரங்கள், அவற்றின் கோள்களெல்லாம் இதில் கபளீகரம் ஆகிவிடும். எனவே, பெருநட்சத்திர வெடிப்பை ஆய்வுசெய்ய வேண்டுமென்றால் ஒன்று, தொலைநோக்கியின் மூலம் செய்தாக வேண்டும். இல்லையென்றால், ஆய்வுக்கூடத்தில் சிறு அளவுக்கு ஒரு பெருநட்சத்திர வெடிப்பை உருவாக்கி, அதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தலைமையில் சர்வதேச அறிவிய லாளர்கள் கொண்ட ஒரு குழு, இது போன்ற ஒரு பெருநட்சத்திர வெடிப்பைச் செயற்கையாக நிகழ்த்தினார்கள். “ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்ட ஒரு நிகழ்வை ஒரு ஆய்வுக்கூடத்தின் அறைக்குள் அடக்குவதா என்று பலருக்கும் ஆச்சரியம் ஏற்படும். உண்மை என்னவென்றால், பிரபஞ்சத்தின் எந்த மூலைக்குப் போனாலும் இயற்பியல் விதிகள் ஒரே மாதிரிதான் இருக்கும். வாளியில் ஏற்படும் அலைகளைச் சமுத்திரத்தில் ஏற்படும் அலைகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இது பெருநட்சத்திர வெடிப்புக்கும் பொருந்தும்” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கியான்லுகா கிரிகோரி சொல்கிறார்.
குறிப்பிட்ட இந்த ஆய்வு, காஸியோபியா ஏ என்ற பெருநட்சத்திர வெடிப்பைப் பற்றி ஆய்வுசெய்வதற்காக நடத்தப்பட்டிருக்கிறது. இந்தப் பெருநட்சத்திர வெடிப்பு 300 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட நிகழ்வு. பூமியிலிருந்து 11,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரக் கூட்டத்தில் நிகழ்ந்த பெருவெடிப்பு அது. (ஒளியாண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளி பயணிக்கும் தொலைவு, அதாவது 9,46,073,04,72,580.8 கி.மீ. தொலைவு. இந்தத் தொலைவை 11 ஆயிரத்துடன் பெருக்கினால் அந்த பெருவெடிப்பு நிகழ்ந்த இடத்தின் தொலைவு கிடைக்கும். 300 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த நிகழ்வு என்றாலும், ஒளி வந்தடைய 11 ஆயிரம் ஒளியாண்டுகள் ஆயின என்பதைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, அந்தப் பெருநட்சத்திர வெடிப்பு நிகழ்ந்து 11 ஆயிரத்து 300 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது தெளிவாகிறது.
இந்த ஆய்வின் முடிவு ‘நேச்சர்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT